வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றைப் பெரும்பாலும் ஆண்கள்தான் வாங்குவார்கள் என்கிற நிலையைப் பெண்கள் இன்று மாற்றியிருக்கிறார்கள். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கார், டிவி., லேப்டாப், டேப்லெட், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் போன்றவற்றைப் பெண்களே அதிக அளவில் வாங்குவதாக நுகர்வோர் ஆய்வாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக நம் சமூகத்தில் அனைத்திலும் பாலினப் பாகுபாடு புகுந்துவிடும். வாகனப் பயன்படும் அதில் விதிவிலக்கல்ல. பெண்களால் ஆண்களைப் போல வாகனங்களை இயக்க முடியாது, பெண்களுக்குத் தொழில்நுட்ப அறிவு ஆணைவிடக் குறைவு என்றெல்லாம் கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லியே பெண்களை முடக்கிவைத்திருந்தார்கள். காலப்போக்கில் கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் பெற்ற பெண்கள், வாகனங்களை இயக்குவதற்குப் பாலினம் தடையல்ல என்பதை உணர்த்தினர்.
வீட்டில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின்னணு சாதனங்களைப் பெரும்பாலும் பெண்களே கையாள்கிறபோதும் அவற்றை வாங்குவதற்கான அறிவுத் தகுதி பெண்ணுக்கு இல்லை என்றே இப்போதும் பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் கருவிகளே, அவற்றை இயக்கும் நுட்பம் தெரிந்துகொண்டால் யார் வேண்டுமானாலும் அவற்றை வாங்கலாம் என்கிற உண்மையையும் இன்றைய பெண்கள் உணர்த்துகிறார்கள்.
பெண்களே அதிகம்
நுகர்பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் ஜி.எஃப்.கே., நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை, அதிகரித்துவரும் பெண் நுகர்வோர்களின் எண்ணிக்கையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறது. மின்னணு சாதனங்கள் வாங்கும் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை 2019-ல் 28 சதவீதமாக இருந்தது. தற்போது இது 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2021-ல் தொழில்நுட்ப சாதனங்களை 46 சதவீதப் பெண்கள் வாங்கியுள்ளனர்.
ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே ஒரு கார் இருக்கும் நிலையில் கூடுதலாக மற்றொரு காரை வாங்குவதில் பெண்களின் பங்கு அதிகம் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கரோனாவுக்கு முன்பு கார் வாங்குவதில் 19 சதவீதப் பங்களிப்பை ஏற்றுக்கொண்ட பெண்கள் தற்போது 28 சதவீதம் பங்களிக்கிறார்கள்.
கல்லூரி முடித்ததுமே திருமணம் என்கிற நிலையையும் பெண்கள் இன்று மாற்றியிருக்கிறார்கள். படித்து முடித்து, வேலைக்குச் சென்று ஓரளவுக்குப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பிறகே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கார் வாங்கும் பெண்களின் சராசரி வயது குறைந்திருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் கார் வாங்குகிறவர்களில் 49 சதவீதத்தினர் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்கிறது இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி. இவர்களில் பெண்கள் 60 சதவீதத்தினர் என்பது ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் கார் வாங்குகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
பாதுகாப்பு முக்கியம்
மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டர்ஸ், கார் வாங்கும் பெண்களின் சராசரி வயது கடந்த இரண்டு ஆண்டுகளாக 37ஆக இருந்தது என்றும் தற்போது அது 35 வயதாகக் குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மின்னணு சாதனங்களை வாங்குகிற பெண்களின் சராசரி வயதும் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட நான்கு புள்ளிகள் சரிந்து 34 வயதாகக் குறைந்திருக்கிறது.
தானியங்கி, ரிமோட் மூலம் இயக்குவது போன்றவற்றுக்குப் பெண்கள் அதிக முக்கியத்துவம் தருவதால் தங்கள் தயாரிப்புகளில் இந்த அம்சங்களைச் சேர்க்க தயாரிப்பு நிறுவனங்கள் முனைந்துள்ளன. பெரும்பாலான ஆண்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், பெண்களோ நிறுவனத்தின் பெயரை மட்டுமே நம்பிப் பொருட்களை வாங்குவதில்லை. எந்தப் பொருளாக இருந்தாலும் அது செயல்படும்விதம், விலை ஆகியவற்றை அடுத்து மூன்றாவதாகத்தான் பிராண்டுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். வாகனங்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு அம்சங்களைத்தான் பெண்கள் முதலில் பார்க்கிறார்களாம்.