பெண் இன்று

வானவில் பெண்கள்: என் தாய்மொழியைவிட தமிழே மிகவும் பிடிக்கும்!

என்.ராஜேஸ்வரி

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சில குடும்பங்கள் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து குடியேறின. அத்தகைய பின்னணி கொண்டவர்தான் கலா தாக்கர். தாய் மொழி குஜராத்தி என்றாலும், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவர் எழுதிய சகுந்தலை என்ற புத்தகம், அண்ணாமலை மற்றும் மைசூரு பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது. நாவலாசிரியர் லட்சுமி பற்றிய, ‘எழுத்தும் ஒரு வகை மருத்துவமே’ என்ற ஆய்வு நூல், இலக்கியச் சிந்தனைக்காக எழுதப்பட்டது. முன்னாள் தமிழக ஆளுநர் கே.கே.ஷா விரும்பியதற்கு இணங்க டாக்டர் பினாக்கின் தவே எழுதிய ‘விவர்த்’ என்ற குஜராத்தி மொழி நாவலை ‘வெள்ளைக்கறை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் கலா தாக்கர். ‘கல்கி - முன்ஷி வரலாற்று நாவல்கள் ஓர் ஒப்பீடு’ என்ற முனைவர் பட்ட ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ளார் இவர். இந்நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நிதி உதவி பெற்றது. இந்நூலை பாரதிய வித்யா பவனில் வெளியிட்டவர் சி.சுப்பிரமணியம்.

தற்போது எண்பது வயதினை எட்டிப் பிடிக்க உள்ள இவர், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

குஜராத்தியான நீங்கள் எங்கு பிறந்தீர்கள்?

பிறந்தது தமிழ் மணம் கமழும் தஞ்சாவூரில். குஜராத்தில் விவசாயம் செய்துவந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் எங்களை கேடாவாள் என்ற பெயரிலேயே இன்றும் அழைக்கிறார்கள். தமிழகம் வந்த முன்னோர்கள் பலர் செய்தது முத்து, வைர வியாபாரம். இதில் எனது மாமனார் வைர வியாபாரி. தாக்கர் அன் சன்ஸ் என்ற பெயரில் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தார்.

தமிழில் ஆர்வம் வந்தது எப்படி?

எனது தந்தை வழியைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் உள்ள காகிநாடாவில் குடியேறினார்கள். அதனால் எனது தந்தை சுந்தரத் தெலுங்கை மொழிப் பாடமாகக் கொண்டு படித்தார். தாய் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் மராட்டிய மொழி அறிந்தவர். சுருங்கச் சொன்னால் மொழிகளின் சங்கமமாகவே எங்கள் குடும்பம் இருந்தது. மலையாளியான என் மருமகள் சமீபத்தில் தேர்ச்சி அடைந்ததோ ஸ்பானிஷ் மொழியில்.

நான் திருக்குறளில் ஏதாவது குறிப்பிட்டுப் பாராட்டினால், உடனே என் தந்தை தெலுங்கு ‘வேமன சதகம்’ என்ற நூலில் இருந்து, அதற்கு இணையான ஒரு மேற்கோளைச் சுட்டிக்காட்டுவார். சென்னையில் உள்ள இந்து தியலாஜிகல் ஹைஸ்கூல் என்பதை நிறுவிய சிவசங்கர பாண்டியாஜி என் தாய் வழிப் பாட்டனார். அதே பள்ளியில் படித்து ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர் என் தாய் வழி மாமா பாலகிருஷ்ண ஜோஷி. எனவே எனக்குக் கல்வியில் இயல்பாகவே நாட்டம் வந்ததில் வியப்பில்லை. என்னைப் படிக்கவைத்து பணிக்கு அனுப்பி புரட்சி செய்தவர்கள் எனது பெற்றோர். கேடாவாள் சமூகத்தில் முதன் முதலில் கல்லூரிக்குச் சென்று, முனைவர் பட்டம் பெற்று, ஆசிரியப் பணியாற்றிய முதல் பெண்மணி நான்தான்.

எழுத்துப் பணி எப்பொழுது தொடங்கியது?

தமிழில் அந்தக் காலத்தில் வெளிவந்த பேசும்படம் என்ற சினிமா இதழில் ரத்தினச் சுருக்கமாகத் திரைப்பட விமர்சனம் எழுதுவது என் மாணவப் பருவத்து வழக்கம். தமிழில் என்னுடைய முதல் சிறுகதை சுதேசமித்திரனில் வெளியானது. தமிழ்நாடு என்ற பத்திரிகையில் இலக்கிய கட்டுரைகள் வெளிவந்தன. பிரபல வார இதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் நாவலும் வெளியாகின.

பணி நிறைவுக்குப் பிறகு என்ன செய்கிறீர்கள்?

எனது அடுக்ககத்தில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு, பொருத்தமான குட்டிக் கதைகளுடன் திருக்குறள் வகுப்புகளை வாரம் ஒருமுறை எடுக்கிறேன்.

இப்போது எழுதுவதில்லையா?

நடுவில் ரொம்ப நாள் எழுதாமல் இருந்தேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். கல்கியின் எழுத்துக்கள் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குஜராத்தியில் எழுதுவதில்லையா?

குஜராத்தியைவிடவும் தமிழ்தான் எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி!

SCROLL FOR NEXT