“எங்க ஏரியா பெத்தேல் நகர்
4 ஆயிரம் குடும்பம்
30 ஆயிரம் ஜனங்க
இங்க 30 வருஷமா அடிக்கல் நாட்டுறோம்…”
தெறிக்கும் இசை பின்னணியில் ஒலிக்க, மண்ணின் மக்களுக்காக ராப் பாடலின் மூலம் ஆதரவு திரட்டிவருகிறார் சொல்லிசைக் கலைஞரான ‘மிஸஸ். கோ’! கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் பெத்தேல் நகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குடியிருப்போரை, அந்த இடம் சதுப்பு நிலம் என்னும் காரணத்தைக் கூறி அங்கிருந்து அப்புறப்படுத்த மாநகராட்சி அண்மையில் நடவடிக்கை எடுத்தது. அரசின் இந்தச் செயலால், கடன் வாங்கி அந்தப் பகுதியில் வீடு கட்டியிருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் போராடிவருகின்றனர். பாதிக்கப்பட்ட பெத்தேல் நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு ஆதரவாகத் தன் சொல்லிசைப் பாடலைக் காற்றில் பரவவிட்டிருக்கிறார் மிஸஸ் கோ.
அரசுதான் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பட்டா வழங்கியிருக்கிறது. வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, மின் அட்டை, எரிவாயு அட்டை என எல்லாவற்றையும் இந்த பெத்தேல் நகர் முகவரி போட்டுத்தான் கொடுத்திருக்கிறது. அப்போதெல்லாம் இது சதுப்பு நிலம் என்று தெரியவில்லையா? இப்போது இந்த இடத்தைவிட்டு எங்கே செல்வது? குழந்தைகளும் பெரியவர்களும் கண்ணீர் மல்க செய்வறியாது கலங்கி நிற்பதைப் பார்க்கும்போது, புலம் பெயர்தல் எனும் சோகம், நாட்டை விட்டுப் போவது மட்டுமல்ல; தான் இதுவரை வாழ்ந்த வீட்டை விட்டுப் போகச் சொல்வதும்தான் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது ‘மிசஸ் கோ’வின் ‘பெத்தேல் நகர்… பெத்தேல் நகர்’ என ஒலிக்கும் தமிழ் ராப் பாடல்.
கல்லூரியில் டிராவல் டூரிசம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் ரூபிணிக்கு (இதுதான் ‘மிசஸ் கோ’வின் இயற் பெயர்) நிக்கி மினாஜ் என்னும் ஆங்கில ராப் பாடகியின் ‘சூப்பர் பாஸ்’ என்னும் பாடல் அறிமுகமானது. அப்போதுதான் அவர் ராப் எனும் பாணியையே புரிந்துகொள்கிறார். அந்தப் பாடலைத் தன் பாணியில் கல்லூரி விழாவில் அரங்கேற்ற, கல்லூரியே அவரைக் கொண்டாடித் தீர்க்கிறது. அதிலிருந்து அவரின் ராப் தேடல் தொடங்கியது. தமிழில் வார்த்தைகளைக் கோத்துப் பாடி இன்ஸ்டாகிராமில் வெளிட்டதன் மூலம் சென்னையின் ராப் நண்பர்களிடையே அவர் அறிமுகமானார். நண்பர்களோடு இணைந்து ‘என் கதை’ என்னும் ராப் பாடலை 2018-ல் வெளியிட்டார் ரூபிணி. சென்னையின் ராப் பாடகர்களில், நீண்ட சிகை அலங்கார புறத் தோற்றத்திலும், பாடல்கள் எழுதுவது, பாடலுக்கேற்ற தாளங்களைத் தானே ஒலிப்பது போன்ற பல திறமைகளோடு தனித் தன்மையோடு இருந்த ‘எம்.ஸி.கோ’ (கோபிநாத்) நண்பராகிப் பின் காதலராகித் தற்போது கணவராகி, இந்தியாவின் சொல்லிசை ஜோடியாகியிருக்கின்றனர் இருவரும்.
இரண்டே கேள்விகள்தாம் அவரிடம் நமக்கு இருந்தன. ஒன்று, தனித்தன்மையை விரும்பும் ரூபிணி ஏன் தன் கணவரின் புனைப் பெயரையே தன்னுடைய புனைப் பெயராகக் கொண்டிருக்கிறார்? இன்னொரு கேள்வி, நீங்களும் பெத்தேல் நகரில் குடியிருப்பவர் என்பதால்தான் இந்த எழுச்சிப் பாடலை வெளியிட்டிருக்கிறீர்களா? இவற்றுக்கு ரூபிணியின் பதில்:
“எம்.ஸி.கோதான் ராப் உலகில் எனக்குப் பெரிய முன்னுதாரணமாக இருந்தார். அவருக்கு இணையாகப் பாட வேண்டும் என்கிற போட்டியால்தான் என் திறமைகளை நான் வளர்த்துக்கொண்டேன். அதனால், எனக்கு மிகவும் ஆதர்சமாக இருந்தவரின் இணையராக அந்தப் பெயரிலேயே ராப் செய்கிறேன்.
நாங்கள் பெத்தேல் நகரில் குடியிருக்கவில்லை. அந்தப் பகுதி மக்களின் போராட்டத்துக்கு எங்களின் சொல்லிசையால் நாங்கள் அளிக்கும் ஆதரவே இந்தப் பாடல்.”