நூறு வயது வாழ்வது என்பதே மிக அபூர்வமானது. ஆனால் தம்பதி சகிதமாகத் தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் அம்பீஸ் கஃபே புகழ் கே.எஸ்.பத்மநாபன். தினசரிகளைப் படிக்கும் அளவுக்கு இவருக்குக் கண் பார்வை இப்போதும் நன்றாக உள்ளது. சிறிது குரல் உயர்த்திப் பேசினால் போதும், காதும் நன்றாகக் கேட்கிறது.
இவரது நீண்ட ஆயுளுக்கான ஆரோக்கியத்தின் காரணம் என்ன என்று கேட்டால், எல்லாப் புகழும் மனைவிக்கே என்பதுபோல் கை கூப்பியபடியே தனது மனைவி விசாலம் அமர்ந்திருக்கும் திசையைச் சுட்டிக்காட்டுகிறார். அவரிடம் பேசலாமா என்றால், “அவ சாது ஆச்சே, அவளுக்கு ஒண்ணும் தெரியாதே” என்கிறார் பத்மநாபன்.
இவர்களுக்கு 1947–ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒவ்வொரு திருமண நாளன்றும், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, தனக்கு சுதந்திரம் பறி போனது’ என்று விளையாட்டாகச் சொல்வாராம் பத்மநாபன். தற்போது பிள்ளைகள், பெண், பேரன் பேத்தி, கொள்ளுப் பேத்தி ஆகியோரின் அன்பான கண்காணிப்பில், பத்மநாபன் தனது மனைவி விசாலத்துடன் கூடுவாஞ்சேரியில் வசித்துவருகிறார். அமைதியான வாழ்க்கை ஆயுளைக் கூட்டும் என்பதை நிரூபிக்கின்றனர் இந்தத் தம்பதியர். உடையாத இல்லறத்துக்கு அன்பும் அறனும் அவசியம் என்பதை இவர்கள் இருவருமே புரிந்துவைத்திருக்கிறார்கள். அதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இவர்களை ஆதர்ச தம்பதியாக வைத்திருக்கிறது.
காலையில் திருமணம் மாலையில் விவாகரத்து என்று மாறிக்கொண்டுவரும் இந்தச் சமூகத்தில்தான் விசாலம்-பத்மநாபன் தம்பதியும் வாழ்கிறார்கள். சுமார் எழுபது ஆண்டு காலம் இணை பிரியாத இல்வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று தெரிந்துகொள்ள விசாலத்திடம் பேசினோம்.
நண்பர்கள் என்றால்கூடச் சின்னச் சின்ன சண்டை வரும். உங்களுக்குள் சண்டை வருமா?
இத்தனை வருஷத்தில ஒரு தடவைகூட சண்டை போட்டது கிடையாது. அவர் ரொம்ப நல்லவர். குடும்பத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிடுவார். என்ன செலவழிச்சாய், ஏது பண்ணினாய், என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டார். காலங்கார்த்தாலே அம்பீஸ் கபே போயிடுவார். மத்தியானம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு ஹோட்டலுக்குப் போனார்னா, திரும்பி வர ராத்திரி பத்தாகும்.
உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
நாலு பிள்ளைகள், இரண்டு பெண்கள். அவர்களுக்கும் வேணுங்கறதை நான்தான் பண்ணுவேன். குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னாகூட ஆஸ்பத்திரிக்கு நானே தூக்கிக்கொண்டு போயிடுவேன். அவரை எதற்காகவும் தொந்தரவு செய்தது கிடையாது.
உங்களுடையது கூட்டுக் குடும்பமா?
கல்யாணம் ஆகி வந்தபோது, நாத்தனார், மாமனார்கூட இருந்தார்கள். எனக்கு மாமியார் கிடையாது. அவரோட சின்ன வயசுலேயே அவரோட அம்மா போயிட்டார். அப்பறம் கொஞ்ச நாள்லேயே மெட்ராஸ் வந்துட்டோம். இங்க தனிக்குடித்தனம்.
இருந்தாலும் நாத்தனார், மற்ற அவரோட உறவுக்காரங்க வருவாங்க.
அப்படி என்றால் வீட்டில் உங்கள் ராஜ்ஜியம்தானா?
வீடு முழுவதும் எங்கிட்ட இருந்தாலும், நான் வாசலில்கூட வந்து நின்றது இல்லை. ஒரு முறை வெளியே சென்ற நாத்தனார் வரவில்லையே என்று வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டில் சித்தப்பா குடியிருந்தார். அவர் நான் வாசலில் நிற்பதைப் பார்த்து, திட்டிக்கொண்டே இருந்தார். எதற்காக இப்படித் திட்டுகிறார் என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் என் நாத்தனார். நான் காரணம் சொன்னேன். அதற்குப் பிறகு இதுவரை நான் வாசலில் நின்றதே இல்லை. யாரையும் குறை சொல்ல வேண்டாம். எல்லாரும் நல்லவர்கள்தான்.
மனைவி பேசுவதைப் பூரிப்புடன் கேட்டுக்கொண்டிருக்கிறார் பத்மநாபன். அவரது பார்வையில் புரிதலும் அன்பும் கலந்திருக்கிறது.