“அச்சச்சோ...யாராச்சும் காப்பாத்துங்க....”
உடனே அந்த இடத்தில் ஹீரோ சட்டென்று தோன்றுவார். ஹீரோயினிடம் வம்பு செய்தவர்களைப் பறந்து பறந்து அடிப்பார். இது போன்ற காட்சிகள்தான் பெரும்பாலான சினிமாக்களில் வருகின்றன. ரசிகர்கள் குதூகலமாகக் கைதட்டுவார்கள். இந்த சினிமாக்களில் பெண் என்பவள் வெறும் அழகுப் பதுமையாகவும், பிறகு காதல் பொம்மையாகவும் மட்டுமே காட்டப்படுவாள்.
ஆண்கள் (ஹீரோ) செய்யாத காரியமே கிடையாது. ஆனால், பெண்களுக்கு (ஹீரோயின்) காதல் வசப்பட மட்டுமே தெரியும்.
இதன் விளைவு, பாலியல் கொடுமைகள் நடக்கும் நேரங்களில் "யாராச்சும் வந்து காப்பாத்த மாட்டாங்களா? ஹீரோயினை ஹீரோ வந்து காப்பாற்றுவது போல" என்று பெண்கள் ஏங்குகிறார்கள்.
புலியை முறத்தைக் கொண்டு துரத்திய நம் மூதாதைப் பெண்களிடம் இருந்த வீரம் எங்கே போனது? நாகரிக வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை மட்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
எங்கிருந்து வந்தது?
ஆடையின்றி வாழ்ந்த ஆதிகால மனிதர்களிடம்கூட, இந்த அற்பத்தனம் இல்லையே. இன்றைக்கு மனிதன் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டான். தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிட்டான். ஆனால், எங்கிருந்து வந்தது ஆண்களின் இந்த வெறி? சக மனுஷியை மதிக்காமல் நடத்தும், எதையும் செய்யும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?
பெரும்பாலான பெண்களின் உலகம் மிகவும் குறுகியது. செல்லமாக வீட்டில் வளர்க்கப்பட்டு, ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்தே பழகியவர்கள். அவர்களது வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, என்ன செய்வதென்று தெரியாமல், அதிலிருந்து வெளியே வர முடிவதில்லை. விளைவு? தற்கொலைதான் பல பெண்களின் முடிவு.
சளைத்தவள் இல்லை
உடல் உறுப்புகளில் மட்டுமே ஆணும் பெண்ணும் வித்தியாசமாக இருக்கிறார்கள். மற்றபடி ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், அதை வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும்.
மாற்றம்
பெண்களே! நமக்கு எல்லாமே கிடைக்கிறது, மகிழ்ச்சியாக வாழ்கிறோம்... பிறகு என்ன என்று இருந்துவிடாதீர்கள். நம் சகோதரிகள் தினம் தினம் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்களைப் போல அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா? நம்மைப் போன்றே பல கனவுகளைச் சுமந்தவர்கள்தானே அவர்கள்? அதனால் எல்லோரும் வேலைகளைப் போட்டுவிட்டு வீதிக்கு வந்து உடனே போராட்டம் நடத்த வேண்டாம். மாற்றத்துக்கு நம் வீட்டிலிருந்து தொடக்கப் புள்ளி வைக்கலாமே.