சர்ச்சை பேச்சு
பெண்கள் சார்ந்து எது நடந்தாலும் அதை அவர்களது ஆடையோடும் நடத்தையோடும் தொடர்புபடுத்தும் பிற்போக்குச் சிந்தனையை உறுதிப்படுத்தியுள்ளார் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ., சமீர் அகமது. “இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? பெண்களில் சிலர் ஹிஜாப் அல்லது பர்தா அணியாததுதான். தங்களைப் பாதுகாக்க நினைக்கிறவர்களும் தங்கள் அழகை வெளிப்படுத்த நினைக்காதவர்களும் பர்தா அணிவார்கள்” என்று அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யாவும் இப்படியொரு கருத்தை இவருக்கு முன்பே பதிவுசெய்துவிட்டார். ஆண்களைக் கவரும் வகையில் பெண்கள் உடையணிவதுதான் பாலியல் வல்லுறவுக்குக் காரணம் என்று அவர் சொல்லியதும் விமர்சனத்துக்குள்ளானது. பெண் என்று வந்துவிட்டால் கட்சி வேறுபாடின்றிப் பலரும் பெண் வெறுப்பையும் அடக்குமுறையையும்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
பறிபோகும் வேலை
ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், வேலை பறிக்கப்படுவதில் ஆணைவிடப் பெண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளியான புள்ளிவிவரமும் அதைத்தான் உணர்த்துவதாக ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி விவகாரத் துறை இயக்குநர் டேனியலா பாஸ் தெரிவித்துள்ளார். “இந்தியாவில் 2020 ஊரடங்கின்போது 7 சதவீத ஆண்கள் வேலையிழந்த நிலையில் பெண்களில் 47 சதவீதத்தினருக்கு வேலை பறிபோனது” என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஆணைவிடப் பத்து மடங்கு அதிகமாக ஊதியமற்ற வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், கரோனா ஊரடங்கால் குடும்ப வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களின் வருமானம் இரண்டாம்பட்சம் என்கிற நினைப்பும் வீட்டு வேலைக்கு ஊதியம் இல்லை என்பதும்தான் இதுபோன்ற பின்னடைவுகளுக்குக் காரணம். இதில் மாற்றம் ஏற்பட்டால்தான் பெண்களின் பொருளாதாரம் வலுப்பெறும்.
ரயிலோட்டும் சவுதிப் பெண்கள்
சவுதி அரேபியாவில் பெண்களுக்குப் பல்வேறு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டுவந்த நிலையில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை 2018-ல் வழங்கப்பட்டது. சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் இந்த அறிவிப்பு வெளியான ஓராண்டுக்குள் ஆயிரக்கணக்கான பெண்கள் காரோட்டும் உரிமம் பெற்றனர். ஒரு பெண் கல்வி கற்பதற்கும், திருமணம் செய்துகொள்வதற்கும், தனியாகத் தொழில் தொடங்குவதற்கும், மருத்துவ உதவிபெறுவதற்கும் ஆணின் ஒப்புதல் தேவை என்பதும் மாற்றியமைக்கப்பட்டது. இதுபோன்ற தடை நீக்கங்களுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரித்தது.
இந்நிலையில் பெண் ரயில் ஓட்டுநர் பணிக்கு 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சவுதி அரசு அண்மையில் வெளியிட்டது. அதற்கு 28 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலத் தேர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியுடைய 30 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்திருப்பது பெண்களுக்கு இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பெண்கள் மீதான பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களின் பணிப் பங்களிப்பு 33 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இன்னும் உயர்த்தப்பட்டு, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பெண்ணுரிமைப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
பலிவாங்கும் கும்பல் வன்முறை
எளியவர்களை அச்சுறுத்தும் கும்பல் வன்முறை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கும்பலாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் அதிர்வு அடங்காத நிலையில் தற்போது பிஹார் மாநிலத்தில் ஒரு பெண் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தின் நவதா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ‘சூனியக்காரி’ என்று சந்தேகிக்கப்பட்டு அவரது கிராம மக்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்துவிட அதற்கு அந்தப் பெண்தான் காரணம் என்று சொல்லப்பட்டு அவரைக் கொன்றிருக்கிறார்கள். உடலில் பற்றிக்கொண்ட தீயை அணைப்பதற்காகக் குளத்தில் குதித்த அந்தப் பெண்ணைக் கற்களால் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற கும்பல் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்படாத வரை சிலர் பெண்களின் மீதும் எளியவர்களின் மீதும் வன்முறையை நிகழ்த்தியபடியும் தண்டனையிலிருந்து தப்பித்தபடியும்தான் இருப்ப்பார்கள்.