2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று தாக்கல்செய்தார். இதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் போதுமான அளவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்குக் கடந்த ஆண்டு (0.57 சதவீதம்) ஒதுக்கப்பட்ட நிதியைவிட இந்த ஆண்டு (0.51 சதவீதம்) குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டு லட்சம் அங்கன்வாடிகள் தரம் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால், அங்கன்வாடிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை எதிர்கொள்வதற்கும் அங்கன்வாடி பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தவோ அவர்களுக்கு மதிப்பூதிய தொகையை அளிக்கவோ எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. குழந்தைகள் நலம். பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ‘வாத்சல்யா’ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 63.5 சதவீத உயர்வு கண்டிருக்கும் அதே வேளையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தை களுக்குக் கற்பிப்போம்’, மகிளா காவல் தன்னார்வலர்கள், பெண்களுக்கான குறைதீர்வு மையம், வுமன் ஹெல்ப் லைன் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டைவிடக் குறைவு. ஒட்டுமொத்தமாகக் குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2.46 சதவீதத்திலிருந்து 2.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஒதுக்கப் பட்டதில் மிகக் குறைவான நிதியே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.