புழுதி படர்ந்த கிராமத்து வீதிகள், பசுமை நிறைந்த வயல்வெளிகள், அவற்றில் களைபறிக்கும் பெண்கள், மடை மாற்றும் ஆண்கள், இரு மருங்கிலும் குடிசைகள் வரிசையாக நிற்க, நிழல் படர்ந்த சாலையில் நடந்து செல்லும் கிராமத்து மக்கள், கோயில் கம்பத்தின் முன் பக்தியோடு நிற்கும் சிறுவர்கள், பழங்கள் நிறைந்த கூடையைத் தலையில் சுமந்தபடி செல்லும் பெண்கள், விறு விறு சேவல் சண்டை, சுருதி கூட்டும் பறையாட்டம், தனித்த சாலையில் தனிமையின் துணையோடு செல்லும் முதியவர்... இப்படி கிராமத்து வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இம்மி பிசகாமல் ஓவியங்களாக வார்த்தெடுத்திருக்கிறார் கயல்விழி. பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவர் வரைகிற ஓவியங்கள் அனைத்திலும் நிலமும் மக்களுமே கருப்பொருள்.
“தற்போது எல்லா விஷயத்திலும் நம் மக்கள், மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் தொன்மை நிறைந்த நம் பண்பாடும் கலாச்சாரமும் எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை என்று நம்புகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நம் மண்ணையும் மக்களையுமே தொடர்ந்து வரைந்துவருகிறேன்” என்று சொல்லும் கயல்விழி, ஓவியத் துறையில் ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பள்ளி நாட்களிலேயே இவருக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் உண்டு. அதனால் முறைப்படி ஓவியம் கற்றார்.
“ஓவியத்துக்குக் கற்பனை முக்கியம், ஆனால் யதார்த்தம் அதைவிட முக்கியம்” என்று சொல்லும் கயல்விழி கிராமங்களைத் தத்ரூபமாக வரைய வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்குப் பயணித்திருக்கிறார். அப்படிப் பயணப்படுகிறபோது திருவிழாக்கள், கிராம அமைப்பு, மக்களின் வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் ஒளிப்படமாக எடுத்துவந்துவிடுவார். பிறகு அவற்றைத் தனக்குரிய பாணியில் ஓவியமாக வரைகிறார். ஓவியத்தில் பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்வதில் இவருக்கு ஆர்வம் அதிகம். பல்வேறு விதமான வண்ணங்களை ஒன்றிணைத்து வரைந்து பழகியவர், தனக்கென தனி ஓவிய பாணியை உருவாக்கிக் கொண்டார்.
தூரிகையைப் பயன்படுத்தாமல் பாத்திரம் தேய்க்கப் பயன்படும் ஸ்டீல் பந்து, உணவு சாப்பிடும் முள் கரண்டி ஆகியவற்றை வைத்து வரைகிறார் கயல்விழி. ஓவியக் கண்காட்சிகளையும் நடத்திவருகிறார். நம் தொன்மையான கலைகளைப் பதிவுசெய்வதும், அழிந்துவரும் பண்பாட்டை ஓவியங்கள் வாயிலாக உலகறியச் செய்வதும் தன் நோக்கம் என்கிறார் கயல்விழி.