உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றார் சரஸ்வதி செந்தில். அங்கே அவருக்குத் தோன்றிய யோசனை, அவரை ஒரு உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளராக ஆக்கியிருக்கிறது. சரஸ்வதிக்குத் தோன்றிய யோசனை என்ன?
“என் சொந்த ஊர் மாயவரம். 2000-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு நான் சென்னை மருமகள். திருமணத்துக்கு முன்னாடியே நான் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டேன். அதனால் எடையைக் குறைப்பதற்காகச் சென்னையில் ஒரு உடற்பயிற்சி மையத்துக்குச் சென்றேன். பொதுவாக உடற்பயிற்சி மையங்களுக்கு ஆண்கள் பெருமளவில் வருவதால் பெண்கள் வருவதற்குத் தயங்குகிறார்கள் என்பது புரிந்தது. அதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் தனியாக ஒரு உடற்பயிற்சி மையம் தொடங்க நினைத்தேன்” என்று விளக்கம் தருகிறார் சரஸ்வதி.
“ஆண்கள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் தங்கள் பலத்தை உணரவில்லை என்றால் அவர்களால் ஆணுக்கு நிகராக நிலைக்க முடியாது. நான் என் பலத்தை உணர்ந்தேன். என் எண்ணத்துக்கு என் கணவரும் குடும்பத்தினரும் துணை நின்றார்கள். என் வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு” என்று தன் குடும்பம் குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் சரஸ்வதி.
உடற்பயிற்சி மையம் தொடங்கியதுமே வாடிக்கையாளர்கள் குவிந்துவிடவில்லை. சுமார் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் இவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தங்கள் மையத்தின் தனித்த அணுகு முறைதான் இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்கிறார் சரஸ்வதி. ஆரம்பத்தில் பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் உடற்பயிற்சி அளித்தார்கள். அதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஏரோபிக்ஸ், ஜும்பா என அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாறியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான பிரத்யேக உடற்பயிற்சிகளையும் இங்கே கற்றுத் தருகிறார்கள். வறுமையில் உள்ள குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லாமல் பயிற்சியளிக்கிறார்கள்.
தன்னம்பிக்கை தரும் குத்துச் சண்டை
மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குத்துச் சண்டை பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள்.
“பெண்களுக்குத் தன்னம்பிக்கை முக்கியம். எந்த விதமான பயமும் தயக்கமும் இல்லாமல் இந்த உலகை அவர்கள் எதிர்கொள்ளணும். அதுக்காகத்தான் இந்தக் குத்துச் சண்டை பயிற்சி. இந்தப் பயிற்சி எந்தச் சூழ்நிலையையும் எளிமையாவும் துணிச்சலோடும் சந்திக்கிற உறுதியை அவங்களுக்குக் கொடுக்கும்” என்கிறார் சரஸ்வதி.
திருமணத்துக்குப் பிறகு பல பெண்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்துவதில்லை என்று வருத்தப்படும் சரஸ்வதி, ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இவர்களின் மையத்தில் வெறும் பயிற்சியோடு மட்டும் பெண்கள் சென்றுவிடுவதில்லை. தங்களுக்குள் நட்பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.
“இங்க எல்லாருமே பெண்களா இருக்குறது பல விதத்திலும் சாதகமா இருக்கு. அதுல ஒண்ணுதான் இந்த நட்பு. நாலு வயசுல இருந்து அம்பது வயசுவரைக்கும் இருக்கறவங்க இங்கே உடற்பயிற்சி செய்ய வருவாங்க. இப்படிக் குழுவா இருந்து பயிற்சி செய்யறப்போ அவங்களுக்கிடையே ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்த மகிழ்ச்சிதான் என் வெற்றியோட அடையாளம்” என்று புன்னகைக்கிறார் சரஸ்வதி.