பெண் இன்று

பெண்களைச் சுற்றி.. - அச்சம்: ஆண்களுக்கு இல்லையா உரிமை?

செய்திப்பிரிவு

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு, பெரும்பாலான ஆண்களைப் பதற்றப்படவும் அச்சப்படவும் வைத்துள்ளது. திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும்படி பெண்ணிய அமைப்புகள் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி உயர்நீதி மன்றம் தொடங்கியதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

18 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவுகொள்வது கிரிமினல் குற்றமல்ல என்கிறது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375. இது பெண்ணின் அடிப்படை உரிமைக்கு எதிராக இருப்பதாகவும் திருமண உறவில் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தவிர, திருமண உறவுக்குள் நடைபெறும் வல்லுறவை, குடும்ப வன்முறை அல்லது வேறு பிரிவின்கீழ்தான் கொண்டுவர முடியும் என்பதைத் திருத்தி, திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும்படியும் வாதிடப்பட்டது. இது குடும்ப அமைப்பைச் சிதைத்துவிடும் என்றும், திருமண உறவுக்குள் வழங்கப்படும் இந்த அதிகாரத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவித்திருக்கும் 50 நாடுகள் தவறான சட்டத்தை இயற்றியுள்ளனவா என நீதிபதிகள் தரப்பில் கேட்கப்பட்டது.

திருமண வல்லுறவு கிரிமினல் குற்றமாக்கப்பட்டால் ஆண்கள் திருமணத்தைப் புறக்கணிப்பார்கள் என்று ‘ஆண்கள் உரிமைச் சங்கங்கள்’ முழங்கின. திருமணமே வேண்டாம் என்று பொருள்படும்விதமாக #marriagestrike என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 70 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கையில் ஆண்கள் ட்வீட் செய்தனர். இப்படியொரு சட்டம் நடைமுறைக்கு வந்தால் அப்பாவி ஆண்கள் பழிவாங்கப்படுவார்கள் என்பதே பெரும்பாலான ஆண்களின் வாதமாக இருந்தது. இந்தியக் குடும்பங்களின் பாதுகாப்பு அமைப்பு சார்பாக இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. “ஆண்களை இரண்டாம் தரக் குடிமகன்களாகக் கருதும் போக்கை டெல்லி உயர் நீதிமன்றம் கைவிட வேண்டும். ஆண்களின் நிலையையும் தரப்பையும் கேட்டுவிட்டுப் பிறகு பெண்களுக்கு ஆதரவாக எவ்வளவு சட்டங்களை வேண்டுமானாலும் இயற்றுங்கள்” என்று பதிவிட்ட அந்த அமைப்பினர், ஆண்களின் கண்ணீர்க் கதைகளைப் பட்டியலிட்டனர்.

ஆண்களின் ட்வீட்டை வரவேற்றும் பகடிசெய்தும் பெண்களும் பெண்ணியவாதிகளும் ட்வீட் செய்தனர். ‘ஆண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, கொடுமையான வாழ்க்கையில் இருந்து நிச்சயம் பெண்களுக்கு விடுதலை’, ‘திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக்குவதை ஏன் ஆண்கள் எதிர்க்க வேண்டும்? சுய மரியாதை உணர்வுள்ள ஆண்கள் இதை வரவேற்கத்தானே வேண்டும்?’, ‘இந்தச் சட்டத்தை எதிர்க்கிற ஆண்கள் பாலியல் வல்லுறவை ஆதரிக்கிறவர்களாகவும் அதைச் செயல்படுத்து கிறவர்களாகவும்தான் இருப்பார்கள்’ என்றெல்லாம் பெண்கள் தரப்பில் கருத்துகள் பதிவிடப்பட்டன.

SCROLL FOR NEXT