பெண் இன்று

பெண்களைச் சுற்றி... -நிராகரிப்பு: அநீதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்

செய்திப்பிரிவு

நாட்டையே உலுக்கிய கேரளக் கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவு வழக்கில் ஜனவரி 14 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல்லை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தது கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம். இந்த வழக்கில் கன்னியாஸ்திரிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கும் என்று பலரும் நம்பியிருந்த நிலையில் ஃபிராங்கோ விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பு வெளியானதுமே நூற்றுக்கணக்கானோர் ஆண், பெண் வேறுபாடின்றி, கன்னியாஸ்திரிக்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தாங்கள் கைப்பட எழுதிய ஆதரவு கடிதங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அனைவரும் #Avalkoppam (அவளுக்கு ஆதரவு) என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினர். பெண்களுக்கு எதிரான அநீகளுக்குக் குரல்கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் மலையாள நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கல் இருவரும் கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டனர். அதேபோல் #withthenuns (கன்னி யாஸ்திரிகளுக்குத் துணைநிற்போம்) என்கிற ஹேஷ்டேகும் கடந்த வாரம் வைரலானது.

கேரளத்தைச் சேர்ந்த கத்தோலிக்க திருச்சபை கன்னியாஸ்திரி, ஜலந்தர் டயசீஸைச் சேர்ந்த பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல் 2014 முதல் 2016 வரை பலமுறை தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக 2018இல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதற்கு முன்பே இது குறித்து அவர் திருச்சபையில் புகார் அளித்தார். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் போப்பின் அலுவலத்துக்கும் இதை எடுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகும் எதுவும் நடக்காத நிலையில்தான் 2018இல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற, ஃபிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் பிஷப் இவர்.

இந்த வழக்கில் கன்னியாஸ்திரி பல்வேறு அலைக்கழிப்புகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருந்தவர்களும் பல்வேறு விதங்களில் இன்னல்களைச் சந்தித்தனர். கன்னியாஸ்திரியின் நடத்தையும் ஒழுக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. மிக மலினமான வசைகளை அவர் எதிர்கொண்டார். அவ்வளவையும் பொறுத்துக்கொண்டு நீதிக்காகக் காத்திருந்தவருக்கு அதிர்ச்சிதான் தீர்ப்பாகக் கிடைத்தது. ஃபிராங்கோ வுடன் நடந்த உரையாடலை மெய்ப்பிக்கும் ஆதாரங்கள் அடங்கிய கன்னியாஸ்திரியின் செல்போனும் கணினியும் கிடைக்கவில்லை என்பதால் கன்னியாஸ்திரிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT