அறிவியல் சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சி களில் முத்திரை பதித்துவரும் பெண்கள், ஆண் - பெண் இரு பாலினங்களில் இல்லாமல் தங்களைப் பால் புதுமையராக அறிவித்துக் கொண்டிருப்பவர்கள், திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பெருமைப்படுத்தும் பணியைச் செய்துவருகின்றது ‘லைஃப் ஆஃப் சயின்ஸ்’ என்னும் அமைப்பு.
கடந்த 2016-ல் தங்களின் வலைப்பூவில் தன்னிகரற்ற பெண்களின் பல்துறை சாதனைகளை மட்டுமே எழுதிவந்த இந்த அமைப்பு, 2018 முதல் பெண்கள், பால்புதுமையர், திருநர்களின் அறிவியல் சார்ந்த பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலண்டரை வெளியிட்டு வருகிறது. ‘ஸ்டெம்’ எனப்படும் இந்தச் செயல்திட்டத்தின்கீழ் காலண்டரில் இடம்பெறுபவர்களை மக்களே பரிந்துரைக்கின்றனர். அப்படி கடந்த ஆண்டில் பரிந்துரை செய்யப்பட்ட 400-க்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து 365 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆண்டுக்கான காலண்டரை உருவாக்கியிருக்கிறது ‘லைஃப் ஆஃப் சயின்ஸ்’ அமைப்பு.
‘லைஃப் ஆஃப் சயின்ஸ்’ நிறுவனர்களில் ஒருவரான நந்திதா ஜெயராஜ், "அறிவியல் சார்ந்து இயங்குபவர்கள்தாம் எங்களுக்கு முக்கியம். அவர்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை. எங்கள் காலண்டரில் அறிவியல் பேராசிரியரும் இருப்பார்; அறிவியல் படிக்கும் மாணவரும் இருப்பார். ஆனால், அறிவியல் சார்ந்த ஏதாவது ஒரு சிறிய பங்களிப்பையாவது சமூகத்துக்குப் பயன்படும் அளவில் அவர் செய்திருப்பார். அப்படிப்பட்டவர்கள் முன்னெடுத்திருக்கும் அறிவியலின் பயன்கள், ஆய்வாளர்களின் கருத்துகள் பலவற்றையும் நாங்கள் தொகுத்துவருகிறோம்.
இந்த காலண்டரில் இடம்பெறுவதற்கான பிரமுகர் களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் இருக்கின்றனர். இப்படி மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் இருந்து, ஆண்டின் 365 நாட்களுக்காகவும் 365 சாதனையாளர்களை இந்த காலண்டரின் மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அறிவியல் என்பதன் அர்த்தத்தை, பெண்கள், திருநர் சமூகத்தினர், பால் புதுமையர் ஆகியோரின் பங்கெடுப்போடு, சமூகத்தில் ஒன்றையொன்றைச் சார்ந்து எல்லாம் எப்படி இயங்குகின்றன என்னும் புரிதலையும் சேர்த்தே கொடுப்பதற்கு முயன்றிருக் கிறோம். சமூக நலம், கணினி அறிவியல், சூழலியல், இயற்கைப் பாதுகாப்பு, இயற்கணிதம், வானவியல் இப்படி எது தொடர்பான ஆராய்ச்சியாக இருந்தாலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆராய்ச்சிகள் இருக்குமானால் நாங்கள் அவர்களை ஊக்குவிக்கத் தயாராக இருக்கிறோம்” என்கிறார்.
காலண்டரை வடிவமைத்திருக்கும் இப்ஷிதாவும் பால் புதுமையர்தான். இந்த காலண்டரில் திருநர் சமூகத்தினரும் இடம்பெற்றுள்ளனர். ஐசிஎம்ஆரின் என்.ஐ.வி. இயக்குநர் ப்ரியா ஆபிரகாம் தொடங்கி, திருநர் சமூகத்தைச் சேர்ந்த சமூக மருத்துவமனை மருத்துவர் அக்ஷா ஷேக் போன்றோர் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த காலண்டர் பிப்ரவரி 11 அன்று வெளியிடப்படுகிறது. அந்த நாள், ‘சர்வதேச அறிவியலில் பெண்கள், சிறுமிகள் நாள்’. இந்த காலண்டர் பிப்ரவரி 2022 முதல் பிப்ரவரி 2023 வரைக்குமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் க்யூஆர் குறியீட்டின் மூலம் அந்தப் பக்கத்திலிருக்கும் பிரமுகர் அறிவியல் உலகத்துக்குச் செய்திருக்கும் பணியையும் தெரிந்துகொள்ளலாம்.
காலண்டரை முன்பதிவு செய்ய: https://thelifeofscience.myinstamojo.com/