பெண் இன்று

சென்னை சர்வதேச திரைப்பட விழா: கனவுகளைத் துரத்தும் பெண்கள்

செய்திப்பிரிவு

ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் சினிமா பக்தர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்து சேர்வது சென்னைச் சர்வதேசத் திரைப்பட விழா. இந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தொடங்கி ஜனவரி 6-ம் தேதி முடிவடைந்த இத்திரைப்பட விழாவில் 53 நாடுகளிலிருந்து 121 படங்கள் திரையிடப்பட்டன. கலை அதன் தீவிரத்துடன் இயங்கும்போது அது வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்க முடியாததாகிவிடுகிறது. அவ்வகையில் எட்டு நாட்களுக்குத் திரையிடப்பட்ட திரைப்படங்களில் பெண்களின் பிரச்சினைகளைப் பேசிய படங்கள் மிக முக்கியமானவை.

சாதாரண பெண்கள் சந்திக்க நேரும் அசாதாரண கணங்களைத் தாம் இத்திரைப்படங்கள் காட்சிப்படுத்தி யுள்ளன. வுமன் டு க்ரை (பல்கேரியா), மாமன் (ஈரான்), பேரலல் மதர்ஸ் (ஸ்பெயின்), வீல் ஆஃப் பார்ச்சூன் அண்ட் ஃபான்டசீஸ் (ஜப்பான்), தி கேர்ள் அண்ட் த ஸ்பைடர் (ஸ்விட்சர்லாந்து), லாம்ப் (ஐஸ்லாந்து), ஆல் ஐஸ் ஆஃப் மீ (இஸ்ரேல்), மெஹ்ரன் (ஈரான்), குவீன் ஆஃப் க்ளோரி (அமெரிக்கா), ஃபெதர்ஸ் (எகிப்து), பேட் லக் பேங்கிங் ஆர் லூனி போர்ன் (செக் குடியரசு), மிகாதோ (ரோம்), லோரெலை (அமெரிக்கா), ஃபெலிஸிட்டா (பிரான்ஸ்), வார்ஸ் (கனடா), சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (இந்தியா) உள்ளிட்ட படங்கள் பெண்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாகப் படும்பாடுகளை படம் பிடித்துக் காட்டிய படங்கள்.

உமன் டு க்ரை (பல்கேரியா/பிரான்ஸ் 2021)

இயக்குநர்கள் மினா மிலேவா, வெசெலா கசகோவா ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட இத்திரைக்கதை ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. தாயின் மரணத்திற்குப் பிறகு லோரா, சோன்யா ஆகிய இரு சகோதரிகளுக்கு இடையேயான குழப்பமான உறவு மூலம் பல்கேரியாவில் பெண்களின் தற்போதைய நிலையை மிக எதார்த்தமாக இந்தப் படம் பதிவு செய்கிறது. பல்கேரியாவில் நிலவிவரும் பாலின ஒடுக்குமுறைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் ஐந்து பெண் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை முன்வைத்து நுட்பமாகச் சித்திரிக்கிறது. திருமணமாகிக் கைக்குழந்தையுடன் பொருளாதாரச் சிக்கலில் உள்ள ஒருவர், அரசுப் பணியில் கட்டிடப் பொறியாளராகப் பணிபுரியும் சுய சிந்தனையுள்ள ஒருவர், இசைக் கல்லூரியில் படிக்கும் இளமையைக் கொண்டாடும் ஒருவர் என இந்த மூவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களால் பின்னிப் பிணைந்து சொல்கிறது படம். ஒரே வீட்டில் வாழும் சகோதரிகளுக்கு இடையேயான சின்ன சின்ன சண்டைகள், சமாதானங்கள், அன்றாட வேலைகள் எனப் பரபரப்பாகவும் இயந்திரகதியிலும் போய்கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கை, எய்ட்ஸ் நோயால் நிலைகுலைகிறது.

நோயால் குலையும் குடும்பம்

எய்ட்ஸ் என்பது உயிர்கொல்லி நோய் இல்லை என்றான பின்பும் அதில் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்புடன் பார்க்கும் போக்கு உலகம் முழுவதும் இருக்கிறது. திருமணமான தன்னுடைய ஆண் நண்பனுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் அவனிடமிருந்து எச்.ஐ.வி.யைப் பெறுகிறாள் சோன்யா. சோன்யாவுக்கு எய்ட்ஸ் என்று தெரிவதற்கு முன்னால் அவளிடம் வழிந்து பேசும் மருத்துவர் அவள் உண்மையைச் சொன்னவுடன் அவளை இழிவுபடுத்தும் காட்சி மனத்தைப் பதைபதைக்க வைக்கிறது. அவள் தரப்பில் கூறப்படும் எந்தச் சொல்லையும் காதுகொடுத்துக் கேளாமல், அவளுக்கு மருத்துவம் பார்க்க மறுக்கிறார் அவர். பெண் சுதந்திரம் பேசி இவளைப் போல திரியும் பெண்களுக்கு இதுதான் தண்டனை என்றும் வசைமொழிகளால் காயப்படுத்துகிறார். இச்சம்பவத்தால் மனரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுகிறாள் சோன்யா. தனக்கு வந்த நோயின் கொடூரத்தை உணர்ந்து கதறி அழுகிறாள்.

வாழவே தொடங்காத பருவத்தில் விதி தன்னை இவ்விதம் தண்டித்துவிட்டது என்று லோராவிடம் புலம்பித் தீர்க்கிறாள்.

இதற்கான மருத்துவத்தை முதலில் மறுக்கும் அவள், பலவிதமான மதச் சடங்குகளைப் பின்பற்றுகிறாள். சமூகப் புறக்கணிப்பாலும், சுய பச்சாபத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட அவள் ஒருகட்டத்தில் மருத்துவமனையில் சேர ஒப்புக்கொள்கிறாள். சோன்யாவின் குடும்பத்தார் இதனை எவ்வாறு எதிர்கொண்டனர், நோய்மை நிலையில் அவள் கற்றுக்கொண்ட பாடம் என்ன, போன்ற அம்சங்களை திரைக்கதை மூலம் அப்பெண்களின் பார்வையில் கூறிச் செல்கிறது

குடும்ப ‘விழுமியங்கள்’, ஓரினச்சேர்க்கை, நோயின் பிடியில் சிக்கியதும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றோடு பல்கேரியாவில் நடக்கும் 91 சதவீத பாலியல் வல்லுறவுகள் போன்ற விஷயங்களைக் கதையினூடாகப் பதிவுசெய்கிறது. இப்படத்தில் தோன்றும் பெண்கள் தங்கள் அடையாளத்துக்காகப் போராடிவரும் நிலையில், வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து தீர்க்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைச் சொல்லிய விதம் அருமை.

மாமன் (ஈரான்), இயக்குனர்: அராஷ் அனீஸ்ஸி

குடும்பச்சுமையை ஏற்று அதில் வெற்றிகரமாக இயங்கிவரும் முதிய பெண் மாமன். இளம் வயதில் கணவரைப் பிரிந்து தன் மூன்று மகன்களை வளர்க்க டாக்ஸி ஓட்டிச் சம்பாதிக்கும் பெண் அவர். பெண்களுக்கே உரிய இலக்கணமாகக் கூறப்படும் அமைதி, பொறுமை போன்றவை சிறிதும் இல்லாமல் தன் மனத்தின் கண்ணாடியாக அவர் வாழ்கிறார். கோபதாபத்துடனுடம், எரிச்சலுடனும், ஆற்றாமையுடனும் அவர் பேசினாலும், அடித்தளத்தில் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை உடையவர் அவர்.

நடு மகன் மனைவியுடன் தனிக் குடித்தனம் சென்றுவிட, விவாகரத்தான இளைய மகன், திருமணமாகாத மூத்த மகனுடன் ஒரு சிறிய ஃபிளாட்டில் வசிக்கிறார் மாமன். அவருக்குச் சொந்தமாக இருப்பது ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் காணிநிலம். இளைய மகனைத் தவிர மற்ற இருவருக்கும் அதை எப்பாடுபட்டாவது மாமனிடமிருந்து வாங்கி தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்கிற எண்ணம். ஆனால், மாமனின் வசவுச் சொற்களுக்கும் அடி உதைக்கும் பயந்து அதை வற்புறுத்திச் சொல்லாமல் அவ்வப்போது பேச்சுவாக்கில் கேட்டுவருவார்கள். ஆனால், எப்படிக் கேட்டாலும் முடியாது என்று ஒரே வார்த்தையில் அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

புறக்கணிக்கப்படும் தாய்

இந்நிலையில் 40 வயதுவரை திருமணம் ஆகாமல் இருக்கும் மூத்த மகன் தன்னுடன் அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்ணை நேசிக்கிறான். பொருளாதாரரீதியில் இவர்களைவிட அக்குடும்பம் சற்று மேம்பட்டது என்பதால் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறான் அவன். மாமனிடம் வழமை போல அந்த நிலத்தைக் கேட்க அவள் இந்தத் திருமணமே வேண்டாம் வேறு ஒரு நல்ல இடம் பார்க்கிறேன் என்று கூறுகிறார். மீண்டும் அவரைச் சமாதானப்படுத்திப் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறான் அவன். ஒவ்வொரு விஷயத்துக்கும் கணக்குப் பார்க்கும் தன் ஏழைத் தாயின் சுடு சொற்களைத் தாங்க இயலாமல் அவன் ஒரு கட்டத்தில் ஒரு விபரீத முடிவை எடுக்கிறான்.

பெண் பார்க்கப் போகும்போது தாயிடம், ‘உன்னிடம் வேறு நல்ல உடைகள் இல்லையா, இதைப் போய் அணிந்து வருகிறாயே’ என்று மகன் கேட்கும் போதும், மகன்களுக்குப் பிடித்த உணவை ஆசை ஆசையாகச் சமைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, ‘இப்படி அவசர அவசரமாக உணவை அள்ளிச் சாப்பிடுவது நாகரிகமாக இருக்காது. இந்தப் பழக்கத்தை இத்துடன் விடு’ என்று கடிந்துகொள்ளும் போதும் மிகவும் துணிச்சலான பெண்ணான மாமன் உடைந்துவிடுகிறாள். பிள்ளை களுக்காகவே தன் எல்லா சுகங்களையும் விட்டுவிட்டு, கடுமையான உழைப்பினால் அவர்களை வளர்த்து ஆளாக்கியபின் அவர்கள் கூறும் சொற்கள் அவளைக் குத்திக் கிழிக்கின்றன.

உலகம் முழுவதும் பெண்களின் முக்கியமாகத் தாய்மார்களின் நிலை இதுதான். அவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டால்கூடத் தாங்கிக் கொள்ளும் அவர்கள், தங்கள் சுயமரியாதையை இழக்கும்போது மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பம்தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு எனில் அக்குடும்பம் நிகழ்த்தும் வன்முறைக்கு, அவமதிப்பு களுக்கு யாரிடம் சென்று நீதி கேட்பது? கனவுகளைத் துரத்திச் செல்லும் பெண்கள் தனித்துவிடப்படும்போது அவர்களின் பாதைகளில் பூக்களைத் தூவ வேண்டாம், அவர்கள் தலையில் முள்கிரீடங்களைச் சுமத்தாதீர்கள் என்கிற கோரிக்கையைத்தான் இப்படங்கள் முன்வைக்கின்றன.

SCROLL FOR NEXT