அம்பை 
பெண் இன்று

பெண்ணுக்கு இடமில்லையா?

செய்திப்பிரிவு

இந்தியா முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைச் சேர்ந்த படைப்பிலக்கியங்களையும் படைப்பாளர்களையும் கவுரவிக்கும் வகையில் 1954ஆம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு 20 மொழிகளில் சிறந்த படைப்புகளைத் தந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் சிறுகதைப் பிரிவில் மூத்த எழுத்தாளர் அம்பை சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டார். நாவல் பிரிவில் அஸ்ஸாமிய மொழி எழுத்தாளர் அனுராதாவும் ஆங்கிலத்தில் எழுதிவரும் நமிதா கோகலேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரை நூற்றாண்டு கடந்த சாகித்ய அகாடமி வரலாற்றில் விருது வென்ற ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 1955 முதல் 2016 வரை வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருதுகளில் 8.1 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். அதுவரை 6.2 சதவீதமாக இருந்த பெண் விருதாளர்களின் எண்ணிக்கை நவீன இலக்கியம் எழுச்சிபெறத் தொடங்கிய தொன்னூறுகளுக்குப் பின்பு பத்து சதவீதமாக உயர்ந்தது.

பெண்கள் எழுதவருவது குறைவு; அதனால் பெண் படைப்பாளர்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்கிற வாதம் இதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஆண்கள் அளவுக்கு ஏன் பெண்களால் எழுத்துலகில் நுழையவோ தடம்பதிக்கவோ முடிவதில்லை என்கிற தேடல் பலருக்கும் தேவையற்றதாகவே இருக்கிறது. ஆண் மைய சமூகத்தில் பெண்ணின் இருப்பும் செயல்பாடும் குடும்பத்தோடு முடிந்துவிடுவது நல்லது என்கிற பொதுப்புத்தியே நிலவுகிறது. அறிவும் அது சார்ந்த செயல்பாடும் ஆணுக்குத்தான் பொருந்தும், பெண்ணுக்கு அது கைவராது என்று இன்றைக்கும் பழைய பாட்டையே பலர் பாடுகின்றனர்.

பல்வேறு இன்னல்களுக்கும் தடைகளுக்கும் இடையேதான் பெண்கள் எழுதுகிறார்கள். அப்படி எழுதுகிற பெண்களுக்கும் இங்கே போதிய வரவேற்போ அங்கீகாரமோ கிடைத்துவிடுவதில்லை. பல நேரம் பெண் என்பதே பெரும்தடையாக அமைந்துவிடுகிறது. இலக்கிய உலகில் பெண்கள் எந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதைத்தான் அண்மையில் அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளும் உணர்த்துகின்றன. ஆண்களோடு ஒப்பிடுகையில் பத்து சதவீதத்தைகூடத் தாண்டாத அதல பாதாளத்தில் இருந்து சமநிலையை அடைய பெண் படைப்பாளிகள் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்.

SCROLL FOR NEXT