திருமணம் என்பது சில பெண் களுக்குத் தலைப்பெழுத்து எனப்படும் இனிஷியலை மட்டுமே மாற்றுகிறது. இன்னும் சிலருக்கோ அவர்களது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது. ஆனால், திருமணம் என்பது எந்தவிதத் திலும் தங்களது அடையாளத்தைத் தொலைக்க அனுமதிக்கக் கூடாது என்கிறார் பவித்ரா விமல்.
திருமணமான பெண்களுக்கு நடத்தப்படும் ‘மிஸஸ் இந்தியா’ போட்டியில் ரன்னர் அப் நிலையை வென்றிருக்கும் இவர், சர்வதேச நிகழ்வுகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்கவிருக்கிறார்.
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், அப்பா வெங்கட்ராமனின் பணி காரணமாக வெவ்வேறு ஊர்களில் வளரும் வாய்ப்பைப் பெற்றார். பெங்களூருவில் எம்.டெக்., படித்தபோது ராஜஸ்தானைச் சேர்ந்த மென்பொறியாளர் விமல் ஜாங்கிட்டைக் காதலிக்க, 2014இல் அது திருமணத்தில் முழுமையடைந்தது. பெரும் மென்பொருள் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய பவித்ரா, மகள் பிறந்ததும் பணி வாழ்க்கைக்குச் சிறிது ஓய்வுகொடுத்தார். பிறகு கணவரின் வேலை காரணமாக சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர், மீண்டும் பணியில் சேர்ந்தார். செயற்கை நுண்ணறிவுப் பிரிவிலும் தரவுகள் சேமிப்புப் பிரிவிலும் பணியாற்றினார்.
பன்முகத் திறமை
படிப்பில் சுட்டியாக இருந்தபோதும் சிறுவயது முதலே கலைத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். பரத நாட்டியம் பயின்றவர், அரங்கேற்றமும் செய்திருக்கிறார். பவித்ராவின் அப்பா மெல்லிசைக் கச்சேரி குழுவை நடத்திவந்ததால், பவித்ராவுக்கும் இசை மீது இயல்பாகவே ஈடுபாடு வந்தது. கர்நாடக சங்கீதம் பயின்றவர், தன் தங்கை சுபயுடன் இணைந்து அரங்கேற்றம் செய்திருக்கிறார்.
“நான் யோகா கற்றிருப்பதால் யோகா பயிற்சியாளராகவும் இருக்கிறேன். எனக்கு நடிப்புத் துறையிலும் ஆர்வம் அதிகம். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சித் தொகுப்பு, மேடை நாடகம் என ஏதோவொரு வகையில் திறமையை வெளிப்படுத்த ஆசை. ‘மிஸஸ் இந்தியா’ போட்டி குறித்து என்னிடம் சொன்ன என் கணவர், அதில் என்னைப் பங்கேற்கச் சொன்னார். பொதுவாகத் திருமணம் ஆனதுமே பலர் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்” என்று சொல்லும் பவித்ரா, தகுதிச் சுற்றைக் கடந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார். மிஸஸ் இந்தியா நடன ராணியாக முடிசூட்டப்பட்டார்.
“பொதுவாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இருவரைத் தேர்ந்தெடுத்து இந்திய அளவில் போட்டி நடத்துவார்கள். இந்த முறை கரோனா ஊரடங்கால் 30 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றேன். இறுதிப் போட்டி எப்படி இருக்கும் என்று தெரியும் என்பதால் அதற்கேற்ற தயாரிப்புகளோடுதான் சென்றேன். நினைத்த மாதிரியே அது வெற்றியைத் தேடித் தந்தது” என்று புன்னகைக்கிறார் பவித்ரா. தமிழகத்தில் இருந்து இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை தேர்வாகி, ரன்னர் அப் பரிசை வென்ற முதல் பெண் பவித்ரா விமல்.
“அழகு என்பது முகத்தில் மேக் அப் போட்டுக்கொண்டு தோற்றப்பொலிவுடன் இருப்பதல்ல. அறிவும் பக்குவமுமே அழகின் அடையாளம். நாம் எந்த அளவுக்குப் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதே நம் அழகைத் தீர்மானிக்கிறது” என்று சொல்கிறார் மிஸஸ் இந்தியா ரன்னர் அப்!