பெண் இன்று

மரபணு பரிசோதனை பெண்ணின் விருப்பம்

செய்திப்பிரிவு

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு அதன் மூலம் கருவுற்ற சிறுமியின் விருப்பம் இல்லாமல், குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறியும் மரபணு பரிசோதனை நடத்தக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தன் மகள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாகப் பெண் ஒருவர் 2017-ல் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கருவுற்ற பெண்ணுக்கு மரபணு பரிசோதனை நடத்தி அதன்மூலம் தன் மகனைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் எண்ணத்துடன் சிறார் குற்றவாளி ஒருவரின் அம்மா 2021 மார்ச் 25 அன்று கூர்நோக்கு நீதிக்குழுவிடம் விண்ணப்பித்தார். அந்த மனு நிராகரிக்கப்பட, அந்தப் பெண் போக்ஸோ நீதிமன்றத்துக்குச் சென்றார். ‘மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை என்றால் அந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்த குழந்தை என்றாகிவிடும். அந்தப் பெண்ணும் முறைதவறியவள் என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்படுவாள்’ என்கிற வாதம் சிறார் குற்றவாளி தரப்பில் வைக்கப்பட்டது. போக்சோ நீதிமன்றமும் மரபணு பரிசோதனைக்கு அனுமதி வழங்கியது.

வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் அம்மா, போக்சோ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சங்கீதா சந்திரா, “கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தன் ஆற்றலைத் தவறாகச் செலவிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட கேள்வி, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் கருவில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை என்பதல்ல. அதனால், குழந்தையின் பெற்றோர் யார் எனக் கண்டறிவது தேவையற்றது. அந்தச் சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பதுதான் இங்கே முக்கியம்” என்று சொல்லி, போக்சோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குத் தடைவிதித்தார்.

குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணு பரிசோதனை தேவையில்லை என்று மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், கணவன், தன் மனைவியின் நடத்தையை விவாகரத்துக்கான காரணமாகச் சொன்னபோது மரபணு பரிசோதனையை அனுமதிக்கலாம் எனத் தீர்ப்பளித்தது.

SCROLL FOR NEXT