எழுபதைக் கடந்துவிட்டாலே ஓய்ந்துபோய் உட்கார வேண்டியதுதான் எனப் பலரும் நினைக்கும்போது, எழுபதிலும் இருபதின் சுறுசுறுப்புடன் இருக்கலாம் என நிரூபித்துள்ளார் பாப்பம்மாள். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் தங்கசாலையைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு 75. பல அடி உயரத்தில் இருந்து கிணற்றில் குதித்து நீச்சலடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். ஐந்து வயதில் தந்தையிடம் கற்றுக்கொண்ட நீச்சலை இப்போதும் தொடர்கிறார்.
தன் மகள், மகன், பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன் என அனைவருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்தவர், தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் கற்றுத்தருகிறார். இவருடைய கணவர் முத்து விசைத்தறித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அவர் உயிரிழந்துவிட, தற்போது சிறிய குடிசை வீட்டில் தனியாக வசிக்கிறார். அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகையும் ரேஷன் அரிசியும் இவருக்குக் கைகொடுக்கின்றன. “நாங்கள் நீச்சல் அடிக்கக் கற்றுக்கொள்ள பாட்டிதான் காரணம். பல அடி உயரத்தில் இருந்து குதிக்க நாங்கள் தயங்குவோம். ஆனால், பாட்டி எந்தப் பயமும் இல்லாமல் குதித்து நீச்சலடிப்பார். நாங்கள் நீச்சல் பழகும்போது தண்ணீரில் மூழ்கினால் அவர்தான் குதித்துக் காப்பாற்றுவார்” என்கின்றனர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள். உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் முதுமை குறித்த அச்சம் தேவையில்லை என்பதை பாப்பம்மாள் உணர்த்துகிறார்.