அரசு ஊழியர்கள் என்றாலே வழக்கமான வாழ்க்கைமுறையில் சிக்கிக்கொள்பவர்கள் என்ற கருத்து பொதுவாகப் பலருக்கும் உண்டு. ஆனால், அந்தக் கருத்தைப் பொய்யாக்கியிருக்கிறார் செல்வி குமரேசன். அரசு அலுவலகத்தில் கோப்புகளில் தொலைந்துபோகாமல், தன் கல்லூரிக் கால விளையாட்டுக் கனவை மறுபடியும் மீட்டெடுத்திருக்கிறார் இவர். மாநில, மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார்.
திருநெல்வேலி வெங்கலபொட்டல் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, தற்போது இந்து அறநிலையத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் திருநெல்வேலியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட அளவில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், கபடி, கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் எனப் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.
“பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளப் பிடிக்கும். அதனால், கல்லூரிக் காலத்தில் தேசிய மாணவர் படையில் (என்சிசி) ஆர்வத்துடன் என்னை இணைத்துக்கொண்டேன். இரண்டு ஆண்டுகளில் பன்னிரெண்டு காம்ப்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அப்போது, டெல்லியில் நடந்த ‘மேப் ரீடிங்’ போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றுள்ளேன். அங்கேதான் கைப்பந்தாட்டப் பயிற்சியை ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு, போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது, அரசு வேலை என பிஸியாகிவிட்டேன். விளையாட்டை ஓரேடியாக மறந்துவிட்டேன். அந்த நேரத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான இந்தப் போட்டிகள் பற்றிய அறிவிப்பு எங்கள் அலுவலகத்துக்கு வந்தது. அந்த அறிவிப்பைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. விட்டுப்போன என் விளையாட்டுக் கனவைத் தொடர்வதற்கு எனக்கு ஒரு பெரிய வாய்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” என்கிறார் செல்வி.
29 வயதாகும் செல்வி, கணிதத்தில் எம்.எஸ்சி., எம்.பில். முடித்துவிட்டு அரசுப் பணியில் சேர்வதற்கு முன், ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். “அலுவலகத்தில் தினமும் கோப்புகளைப் பார்த்தபடி நாட்கள் ஒரே மாதிரியாகச் சென்றுகொண்டிருந்தன. அந்த நேரத்தில், இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு மாதம் தயார் செய்தது, கலந்துகொண்டது, வெற்றி பெற்றது எனக்குப் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. என்னுடன் போட்டியில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் பலரும் இப்படித்தான் உணர்ந்தார்கள். என்னுடைய குழுவில் இருந்த பதினோரு பேரில் இரண்டு, மூன்று பேரைத் தவிர யாருக்கும் கைப்பந்தாட்டத்தில் முன்அனுபவம் எதுவும் கிடையாது. எங்களுக்குப் பயிற்சியாளரும் கிடையாது. நான் டெல்லியில் ஒரு வாரம் எடுத்துக்கொண்ட பயிற்சி மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுக்க ஓரளவு உதவியது. வார இறுதியில் தொடர்ந்து இரண்டு மணிநேரம் பயிற்சி செய்தோம். ஆனால், மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோம் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி, தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது” என்கிறார் செல்வி.
கைப்பந்தாட்டப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருந்தாலும் கபடி மாதிரி வராது என்று சொல்லும் செல்வி, “கபடி விளையாடும்போது கிடைக்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் வேறு எதிலும் கிடைக்காது. ஆனால், கைப்பந்தாட்டப் போட்டியும் கபடிப் போட்டியும் ஒரே நாளில் நடைபெற்றதால், கபடியில் கலந்துகொள்ள முடியவில்லை. அதுவும், கபடி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அதனால், இந்த முறை கபடியை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால், அடுத்த முறை நிச்சயமாக கபடியில் கலக்குவேன்” என்கிறார்.
விளையாட்டு, இசை, வாசிப்பு இந்த மூன்று விஷயங்களையும் வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருபவர்களால்தான், அவை மனதுக்கு அளிக்கும் புத்துணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில், செல்வி தனக்குப் புத்துணர்ச்சியளிக்கும் விஷயமாக விளையாட்டை வைத்திருக்கிறார்.