சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முதலில் இரட்டைச் சதம் அடித்த வீரர் யார் தெரியுமா?
“இது தெரியாதா? 2010-லேயே இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் டபுள் செஞ்சுரி அடிச்சிட்டாரே… அதுக்குப் பிறகு வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, மார்டின் கப்டில், கிரிஸ் கெயில் இவங்க எல்லாமே டபுள் செஞ்சுரி அடிச்சிருக்காங்களே… ” இப்படித்தான் கிரிக்கெட்டைப் பெரிதும் ரசிப்பவர்களிடமிருந்து பதில் வரும்.
ஆனால் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது, முதன்முதலாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர் ஒரு பெண். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பெலிண்டா கிளார்க். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 229 ரன்களை 1997-லேயே அடித்திருக்கிறார்.
கிரிக்கெட்டைப் பெரிதும் விரும்பும் நாடான இந்தியாவில்கூடப் பெண்கள் ஆடும் கிரிக்கெட்டுக்குப் பெரிதாக ரசிகர்கள் இல்லை. அவர்களைப் பற்றிய செய்திகளும் அக்கறையில்லாமல்தான் பார்க்கப்படுகின்றன. ஆண் கிரிக்கெட் வீரர்களைவிடப் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியம், ஊக்கத் தொகை, பராமரிப்பு வசதி எல்லாமே குறைவாகவே இருக்கின்றன.
1970-களிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொழில்முறைப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கிய பின்னும் இந்த நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை.
தற்போதுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றுள்ள பலரும் மிகவும் பின்தங்கிய சமூகங்களிலிருந்து பெரும் போராட்டத்துக்குப் பின் வந்திருப்பவர்கள். இந்தியாவில் ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பில் பத்தில் ஒரு பங்குகூட மகளிர் கிரிக்கெட்டுக்கு இல்லாத நிலையிலும், உலக அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, எந்த அணிக்கும் சளைத்தது அல்ல என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ், 164 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 5,000 ரன்களை எடுத்திருப்பவர். உலக அளவில் இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸுக்கு அடுத்து அதிக ரன்களைக் குவித்திருப்பவர் மித்தாலி ராஜ் மட்டுமே.
தற்போது உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் 20:20 நடந்துவரும் நிலையிலாவது மகளிர் கிரிக்கெட் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.