பெண் இன்று

பார்த்தாலே பரவசம்

ப்ரதிமா

“அற்புதங்களைவிட சாதாரணங்களில் கொட்டிக்கிடக்கிறது கொள்ளை அழகு. அதைக் கண்டுபிடிப்பதுதான் சவாலானது” என்கிறார் பிரதிபா பாண்டியன். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது பெங்களூர் ஐ.பி.எம்-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். ஆயிரம் ரூபாய்க்கு கேமராவுடன் கூடிய மொபைல்கள் கிடைக்கிற இந்தக் காலத்தில், வீட்டுக்கு நாலு பேராவது தங்கள் புகைப்படத் திறமையை நிரூபிக்கும் முயற்சியில் இருப்பார்கள். பிரதிபா வுக்கும் பள்ளி நாட்களில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாம்.

“நான் போட்டோ எடுக்கறதுக்கு யாரிடமும் பயிற்சி எடுத்துக்கிட்டது இல்லை. சின்ன வயசுல கண்ணுல படுற எல்லாத்தையும் போட்டோ எடுத்தேன். ஆனா எல்லா போட்டோவும் நல்லா இருக்காது. ஏதாவது குறை இருக்கும். அந்தக் குறைகள்தான் அடுத்தமுறை குறைகளே இல்லாம போட்டோ எடுக்கத் தூண்டின. சில போட்டோக்களை எடுத்த பிறகு போட்டோஷாப்ல வொர்க் பண்ணுவேன். அழகுக்கு அழகு சேர்க்கற மாதிரிதான் அது” என்று சொல்லும் பிரதிபா, சில நாட்கள் பகுதிநேர போட்டோகிராபராக வேலை பார்த்திருக்கிறார்.

“போர்ட்ஃபோலியோ எடுக்கறது, திருமணம், பிறந்தநாள் விழாக்களுக்கு போட்டோ எடுக்கறதுன்னு சில நாட்கள் பிஸியா இருந்தேன். போட்டோ எடுக்கறதை இப்படி தொழிலா செய்யும்போது, நம்மளோட எல்லைகள் சுருங்கிடுதோன்னு தோணுச்சு. அதனால அதை அப்படியே விட்டுட்டு என் விருப்பத்துக்கு மட்டுமே கேமராவைக் கையில் எடுக்கிறேன்” என்று சொல்கிற பிரதிபாவின் புகைப்படங்கள் அனைத்திலும் புன்னகையும் மலர்ச்சியும் பளிச்சிடுகின்றன. பார்க்கிறவர்களுக்கும் அந்தப் பரவசம் தொற்றிக்கொள்கிறது.

SCROLL FOR NEXT