பெண் இன்று

இந்திரா நூயி: குடும்பமும் கல்வியும் சென்னையும் சேர்ந்து கொடுத்த வெற்றி

செய்திப்பிரிவு

முன்னாள் பெப்சிகோ தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி எழுதிய அவருடைய நினைவுக் குறிப்புகள் சமீபத்தில் புத்தகமாக வெளியானது. ‘என் முழுமையான வாழ்க்கை: வேலை, குடும்பம், நம் எதிர்காலம்’ (My Life in Full: Work, Family, and our Future) எனும் அந்தப் புத்தகம் ஹாஷெட் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தக வெளியீட்டுக்கான நேர்காணலில் அவர் பேசும்போது, சென்னையில் அவர் வளர்ந்த நாட்கள், அவருடைய குடும்பம், அவர் பின்பற்றிய விழுமியங்கள் போன்றவை அமெரிக்காவில் அவர் வெற்றியாளராகத் திகழ்வதற்கு எப்படி உதவி புரிந்தன என்று விவரித்தார்.

கொல்கத்தா ஐஐஎம்-ல் முதலாம் எம்பிஏ படித்த நூயி, தன்னுடைய இரண்டாம் எம்பிஏ படிப்பை யேல் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். பிசிஜி, ஏபிபி போன்ற பெரும் நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் நூயி பெப்சிகோவில் 24 ஆண்டுகள் பணியாற்றினார். அதில் 12 ஆண்டுகள் அவர் பெப்சிகோவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் அடையாளமாகத் திகழும் பெப்சிகோ போன்ற பெரும் நிறுவனத்துக்குத் தலைமை தாங்கிய முதல் இந்திய வம்சாவளி பெண்ணும் இவரே. அவர் எழுதிய புத்தகம் குறித்த நேர்காணலில், தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற உதவிய வழிகாட்டிகளைப் பற்றியும் நூயி பேசுகிறார். அந்த நேர்காணலின் சுருக்கம் இது:

இந்த மகத்தான வெற்றிக்கு நீங்கள் கற்றுக் கொண்ட எந்தப் பண்பு, சென்னையில் நீங்கள் வளர்ந்த எந்தச் சூழல் உங்களுக்கு உதவின? அமெரிக்கக் கலாச்சாரத்தை எதிர்கொண்டு பெற்ற வெற்றியின் அடித்தளம் சென்னையில் தானே நிகழ்ந்திருக்க வேண்டும்?

இங்கே நான் என்பது ஒரு தனி அடையாளம் கிடையாது. என்னுடைய நான் என்பதில், என்னுடைய குடும்பம், சென்னையில் நான் வளர்ந்த நாட்கள், இந்த நாடு ஆகிய எல்லாம் அடங்கியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இவற்றின் இணைவால் உருவான கலவையே என் ஆளுமை.

இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். ஆரம்பக் கல்வி கற்கவும் தொழில்முறைக் கல்வி கற்கவும் வேலைக்கும் பெண்கள் செல்லத் தொடங்கிய காலகட்டம் அது. எனவே, நான் வளர்ந்த நாட்கள் அலாதியானவை.

என்னுடைய குடும்பம் ஒரு தமிழ்க் குடும்பம். மிகவும் கண்டிப்புடன் நான் வளர்க்கப்பட்டேன். அப்போது என்னுடைய வாழ்க்கைக் கல்வியை மட்டுமே சுற்றி அமைந்திருந்தது. நன்கு படிப்பதிலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதிலும் மட்டுமே என்னுடைய கவனம் இருக்குமாறு நான் வளர்க்கப்பட்டேன். பள்ளிக்கு ஒருமுறைகூட விடுமுறை எடுத்ததில்லை. நாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை. வெளியே சாப்பிடவில்லை. விடுமுறைக்கு எங்கும் சென்றதில்லை. அவையெல்லாம் அற்பமானவை என்று கருதப்பட்டன.

என்னுடைய தாத்தாவே எனக்கு வழிகாட்டி. வாசிக்கவும் தொடர்ந்து கற்கவும் அவரே எனக்கு உத்வேகம் அளித்தார், ஊக்கம் கொடுத்தார். எங்கள் குடும்பத்தில் ஓர் அற்புதமான தன்மை ஒன்று இருந்தது. ஆண்களும் பெண்களும் சரிநிகராக நடத்தப்பட்டனர்; அங்கீகரிக்கப்பட்டனர். ‘எவ்வளவு முடியுமோ அவ்வளவு கனவு காண், நீ என்னவாக வேண்டும் என்று விரும்பினாலும் அதுவாக நீ மாற முடியும். இந்த விஷயத்தில் ஆண், பெண் என்கிற வேறுபாடு எல்லாம் நுழையவே கூடாது’ என்று என்னுடைய பாட்டியும் அம்மாவும் என்னிடம் எப்போதும் சொல்வார்கள்.

என்னுடைய தந்தை என்னை ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மொழிகள் கற்க அழைத்துச் சென்ற நாட்கள் இன்றும் என் நினைவில் உள்ளன. ‘கற்பதற்கான தேவை உனக்கு இருக்கும்வரை உன்னை அழைத்துச் செல்ல நான் எப்போதும் இருப்பேன்’ என்று அவர் சொன்னது இன்றும் என் செவிகளில் ஒலிக்கிறது. இந்த மாதிரியான குடும்பச் சூழலில்தான் வளர்ந்தேன். நான் வாழ்கையில் அடைந்த உயரங்களுக்கு அடித்தளமிட்டு, ஏறுவதற்கு ஏணி நிறுவிய இடம் அது.

அந்தக் காலகட்டத்தில், உங்களைப் போன்றே கல்வியும் குடும்பப் பின்னணியும் கொண்டு பலர் இருந்திருப்பார்கள். ஆனால், ஏதோ ஒன்று உங்களைத் தூண்டி அமெரிக்காவில் இரட்டை எம்பிஏ படிக்க வைத்து, வேலையில் அமர வைத்தது. உங்களை எது அவ்வாறு தூண்டியது?

பொதுவாக ஐஐடியில் படிப்பை முடித்தவுடன், வேலைக்காக அமெரிக்காவுக்குச் செல்வதே அன்றைய ஐஐடி மாணவர்களின் லட்சியமாக, விருப்பமாக இருந்தது. எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஐஐஎம்-ல் எம்பிஏ முடித்தவுடன், இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டேன். அது எனக்கு வசதியாகவும் இருந்தது. மனநிம்மதியையும் அளித்தது. அந்தச் சூழலில், யேல் பல்கலைக்கழகத்தின் எம்பிஏ குறித்த செய்தியைப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணவோட்டத்தையே அது மாற்றியமைத்தது; அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை என்னுள் விதைத்தது. தனி மனித மேன்மைக்கும் சமூக வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் போதாது என்பதை அப்போது நான் தெளிவாக உணர்ந்தேன். தனியார் நிறுவனங்களின் செயல்பாடு, பொது நிறுவனங்களின் செயல்பாடு, அவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து மேலும் கற்க யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பின் நடந்தவை எல்லாம் இன்று வரலாறாகிவிட்டது.

முழு நேர்காணலை ஆங்கிலத்தில் படிக்கவும் காணவும்: https://bit.ly/3kZDW9k

சுருக்கமாகத் தமிழில்: நிஷா

@ தி இந்து பிசினஸ்லைன்

SCROLL FOR NEXT