சிறை மீண்ட பெண்களுக்காகக் குரலெழுப்பிய தலைமை நீதிபதி
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தேசியச் சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority (NALSA)) நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில் சிறையிலிருந்துவிட்டு வெளியே வரும் பெண்கள் மற்றவர்களைவிடக் கடுமையான பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்வதாகக் கூறியுள்ளார். சிறையிலிருந்து வெளியேறும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பொதுச் சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான திட்டங்களையும் சேவைகளையும் வழங்குவது மக்கள் நல அரசைக் கொண்டிருக்கும் நம்முடைய கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறையிலிருந்து வெளியே வரும் பெண்களைச் சமூகத்துடன் மீண்டும் இணைப்பதற்குப் பாகுபாடற்ற கல்வி, தொழிற்பயிற்சி, கண்ணியமான, ஊதியமளிக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார். கடந்த மாதம் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்த்தியதற்காகப் பாலினச் சமத்துவத்துக்கான செயற்பாட்டாளர்களின் பாராட்டைப் பெற்றது இந்திய உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே அந்நீதிமன்றத்துக்கான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் கொலீஜியத்துக்குத் தலைமை வகிப்பவர். ஆக, மூன்று பெண் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலினச் சமத்துவத்தை அடைவ தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உள்ள அக்கறையின் வெளிப்பாடாகவே அந்த நியமனங்கள் பார்க்கப்பட்டன. தலைமை நீதிபதியின் தற்போதைய பேச்சு முன்னாள் பெண் கைதிகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை தொடங்கிவைக்கட்டும்.
முற்றிலும் பெண்களால் இயங்கவிருக்கும் தொழிற்சாலை
வாடகை வாகனச் சேவை வழங்கும் நிறுவனமான ஓலா, மின் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை யில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஓலா நிறுவனம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் மின் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக ‘ஓலா ஃப்யூச்சர்ஃபேக்டரி’ (Ola Futurefactory) என்னும் தொழிற்சாலையை 500 ஏக்கர் பரப்பளவில் கட்டமைத்துள்ளது. தற்போது இந்தத் தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்றும் இங்கே உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு வாகனமும் முழுக்க முழுக்கப் பெண்களாலேயே உருவாக்கப்படும் என்றும் ஓலா நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்தத் தொழிற்சாலையில் பெண் ஊழியர்கள் 1000 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும் நிரப்பப்படும்போது ‘ஓலா ஃப்யூச்சர்ஃபேக்டரி’, பெண்களை மட்டுமே ஊழியர்களாகக் கொண்ட உலகின் மிகப் பெரிய தொழிற்சாலை என்னும் பெருமையைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்களுக்குச் சம வேலைவாய்ப்பு அளித்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 27சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அகர்வால், பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்துக்கான வாய்ப்புகளை அளிப்பது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 12 சதவீதத்துக்கும் குறைவு என்னும் பின்னணியில் ஓலா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரிதும் வரவேற்புக்குரியது. தனியார் நிறுவனங்களின் இதுபோன்ற முன்னெடுப்புகள் தொழில்துறையில் பெண்களுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருவதற்கான தொடக்கமாக அமையட்டும்.