பெண் இன்று

ஜீவனைப் பறிக்கும் ஜீவனாம்சம்

செய்திப்பிரிவு

நிற்கக்கூட இடம் இல்லாத இடத்தில் பெண்கள் குவிந்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு இருக்கிறார்கள். மின்விசிறி இல்லாமல் கழுத்தில் வழியும் வியர்வையுடன், குடிநீர் இல்லாமல் வறண்ட தொண்டையுடன், இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட இடத்தைவிட்டு நகர முடியாமல் மூன்று மணி நேரமாக, இந்த மாத வீட்டு வாடகை, உணவு, பள்ளிக் கட்டணம் இவற்றுக்கு என்ன செய்வது என்பது போன்ற கேள்விகளுடன் நிற்கும் இந்தப் பெண்கள் யார்?

கணவனால் கைவிடப்பட்டு வாழ்வாதாரத்துக்காக ஜீவனாம்சத்துக்கு மனு செய்து நீதிமன்ற வராண்டாவில் காத்துக் கிடக்கும் பெண்கள்தாம் இவர்கள். நமது சமூகத்தில் பெரும்பான்மையான பெண்கள் ஊதியம் ஈட்டாதவர்கள்தாம். இவர்கள் குடும்ப வன்முறைக்கு உள்ளாகி, திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற்றப்படும்போது அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் வாழ்வாதாரம்தான்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றான் பாரதி. மனைவிக்கும் குழந்தை களுக்கும் கணவர் ஜீவனாம்ச அளிக்க, “பிச்சை எடு, கடன் வாங்கு, அல்லது திருடு” என்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகிறதா?

ஜீவனாம்ச மனு விசாரணை என்பது சட்டப்படியே ஒரு குறுகிய கால விசாரணைதான். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் 60 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் ஏதோ கொலை வழக்குபோல வருடக் கணக்கில் நடக்கிறது. கணவர் தரப்பில், வழக்கின் அனைத்துக் கட்டங்களிலும் கால வரையற்ற வாய்தா வாங்கலாம். உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கலாம்.

இடைவிடாத போராட்டம்

பொதுவாக, ஒரு தினக்கூலிக்கு கிடைக்கும் தொகையைவிடக் குறைவாகத்தான் ஜீவனாம்சம் நிர்ணயம் செய்யப்படும். வழக்கின் தன்மைக்கு ஏற்ப அது மாறலாம். நீதிபதி கையெழுத்துடனும் முத்திரையுடனும் உத்தரவு கிடைக்கும்போது தாங்கள் அடுத்தக் கட்ட போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியாது. உத்தரவுத் தொகையை வசூலிக்க, மீண்டும் ஒரு வழக்குப் போட வேண்டும். இந்த வழக்கும் எப்படி நடைபெறும் என்பதற்கு இதற்கு முந்தைய பத்தியை மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். வழக்குப் போட்ட தேதியிலிருந்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றால் அதுவே ஒரு மொத்தத் தொகையாக உருவெடுத்துவிடும். நடைமுறையில் தவணை முறையில்தான் அந்தத் தொகை செட்டில் செய்யப்படும். இத்துடன் சேர்ந்து, உத்தரவுக்குப் பிறகு மாதா மாதம் வழங்க வேண்டிய தொகையும் காலவரையறை இல்லாமல் இழுத்தடிக்கப்படும். இடைக்கால ஜீவனாம்சம் என்பதெல்லாம் கானல் நீர்தான்.

“ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது குழந்தைகளை உயர் ரக தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு இப்போது அந்தக் கல்விக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறது” என்கிறார் ஒரு பெண்.

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி

“என் மகளுக்கு 21 வயது ஆகிறது. மனநிலை சரியில்லாதவள். உத்தரவு கிடைத்த பிறகும் பணம் கிடைக்கவில்லை. ஒரு சாதாரண குழந்தைக்கு ஆகும் செலவைவிட மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு ஆகும் செலவு அதிகம் என்பதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனது வாழ்க்கையே முடங்கிப் போய்விட்டது” என்கிறார் ஒரு பெண்மணி.

“எனது வழக்கு முடிவதற்கு ஏழு வருடம் ஆனது. அதற்குப் பிறகு சமர்ப்பித்த மேல் முறையீட்டு மனுவும் ஆறு வருடங்களாக, நிலுவையில் உள்ளது. வழக்கு நடக்கும்போதே ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து என் கணவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார். இவர் இந்த வழக்குக்காகச் செலவு செய்த பணத்தில் பாதியை எனக்குக் கொடுத்திருந்தால்கூட 14 வருடங்களாக அல்லாடி இருக்க மாட்டேன்” என்கிறார் மற்றொரு பெண். இந்தப் பிரச்சினைகளைக் களைய, ரஜ்னீஷ் எதிர் நேஹா (2020) வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும். காலதாமதத்தை முற்றாக அகற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான வழக்குகளில் இதையும் ஒன்றாகப் பார்க்கும் போக்கை நீதிமன்றம் கைவிட்டு உணர்வுபூர்வமாக அணுக வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதுபோல கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்குச் சமூக பாதுகாப்பு தொகை அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கட்டுரையாளர், வழக்குரைஞர்.

தொடர்புக்கு: unirmalarani@gmail.com

SCROLL FOR NEXT