பெண் இன்று

ஊர் எதிர்த்தாலும் உரிமையை விடக் கூடாது!

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று முடிவெடுத்தனர். அதற்கேற்ப அந்தக் கிராமத்தின் ஒன்பது வார்டுகளிலும் ஒருவர்கூட வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தவர்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுத்துவந்தனர். வேட்பு மனுத் தாக்கலின் கடைசி நாளான செப்டம்பர் 22 அன்று இந்துமதி என்கிற இளம்பெண் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தார். ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி வெற்றிகரமாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திரைப்படக் காட்சிகளுக்கு நிகராகக் கடைசி நேரத்தில் ஓடிவந்து இந்துமதி மனுத் தாக்கல் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவரது பாதுகாப்புக்காகக் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்ததால் அவரால் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடிந்தது.

அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வேறு யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி அவர் ஊராட்சி மன்றத் தலைவராகும் நிலை உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்வதற்காகப் பத்து நாட்களுக்கும் மேலாக அலைந்ததாகவும் ஊர் மக்கள் தன்னை மனுத் தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாகவும் இந்துமதி தெரிவித்துள்ளார். தவிர, இந்துமதி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர் என்பதாலும் தனக்கு எதிர்ப்பு வலுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT