சமீப காலமாகச் சிறார் குற்றங்களின் சதவீதம் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கான காரணம் அந்த நேரத்துக் கோபம், சின்னத் தோல்வி, பொறாமை போன்றவையோ அல்லது இவற்றைவிடச் சிறிய காரணமாகவோ இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தருகிற விலை மிகப் பெரியது. சமீபத்தில் திருப்பூர் தனியார் பள்ளியொன்றில் ஒன்றாம் வகுப்பு படித்த மாணவனை அதே பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் அடித்துக் கொன்றது, அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. சக மாணவனைக் கொல்லத் துணிகிற அளவுக்குப் பிஞ்சு மனங்களில் வன்மம் இருக்குமா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியிருக்கிறது.
சின்னச் சின்ன தவறுகளில் ஆரம்பித்து ஒரு உயிரையே பறிப்பதுவரை சிறார்களின் கரங்கள் நீள்வது எதைச் சொல்கிறது? அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேள்விப்பட்ட சிறார் குற்றச் சம்பவங்கள், இப்போது நமக்குத் தெரிந்த வட்டத்துக்குள்ளேயோ அல்லது நமக்கு மிக அருகிலேயோ நடப்பதற்கு என்ன காரணம்? மழலைகளின் மனங்களுக்குள்ளே குடியேறுகிற மாறுபட்ட மனோபாவத்துக்கு யார் பொறுப்பேற்பது?
குழந்தைகளின் அதீத மன அழுத்தமும் குடும்பச் சூழலும் குழந்தைகளின் மன மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனில் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போக அவர்களின் வளர்ப்பு முறையும் ஒரு காரணமா? கடந்த தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைத்த அன்பும் அரவணைப்பும் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லையா? அல்லது பள்ளிகளில் போதுமான வழிகாட்டுதல் இல்லையா? குழந்தைகளை தேர்வுக் களத்தில் ஓடும் பந்தயக் குதிரைகளாகத் தயார்படுத்துவதில் காட்டும் அக்கறையை அவர்களின் ஒழுக்கம் சார்ந்தும் நன்னெறி சார்ந்தும் முறைப்படுத்துகிறோமா?
நம் வீட்டின் இன்னொரு உறுப்பினர் போலவே இருக்கும் தொலைக்காட்சிக்கும் கம்ப்யூட்டருக்கும் இதில் என்ன பங்கு? எதிரியைக் கண்டதுமே சுட்டு வீழ்த்துகிற அல்லது வெட்டிச் சாய்க்கிற வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் நம் குழந்தைகளின் மனநிலையை மாற்ற வல்லவை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? நம் கண்ணை விட்டு மறைந்ததும் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள், அவர்களது நண்பர்கள் யார், அவர்கள் எதைப் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றாவது குறைந்தபட்சம் தெரிந்துவைத்திருக்கிறோமா?
தவறுகள் செய்யும்படி யாரும் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. ஆனாலும் குற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றனவே. அப்படியென்றால் குழந்தை வளர்ப்பில் எந்த இடத்தில் நாம் கோட்டை விடுகிறோம்? அல்லது எங்கே அவர்கள் நம் கையை மீறிப் போகிறார்கள்?
‘நீ அவனைவிட அதிக மார்க் வாங்கணும்’ ‘இவளைவிட பெரிய ஆளா வரணும்’ என்று சொல்லி வளர்க்கும் நாம், அடுத்தவர்களின் வலியையும் வேதனையையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்திருக்கிறோமா?