“நல்ல விஷயத்தைக்கூட காசு குடுத்துச் சொல்ல வேண்டிய இந்தக் காலத்துல இந்த சமுதாயத்துக்காக காசு செலவில்லாம என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சிட்டு இருக்கேன்’’ - மனதில் பட்டதைப் பளிச்செனப் பேசுகிறார் உமாமகேஸ்வரி.
மதுரையின் புறநகர்ப் பகுதியான நாகமலை புதுக்கோட்டையில் செயல்பட்டுவரும் உமாமகேஸ்வரியின் ‘தாய் மண் அறக்கட்டளை’, இயலாதவர்களுக்கும் எளியோருக்கும் ஆதரவுக் கரம் நீட்டிவருகிறது. வறுமை காரணமாக பத்தாம் வகுப்பை முடித்ததுமே டெலிபோன் பூத் வேலைக்குப் போனார் உமாமகேஸ்வரி. அதே வறுமைதான் இயலாதவர்களைத் தேடிப்போய் உதவும் குணத்தைத் தனக்குள் வளர்த்ததாகச் சொல்கிறார் அவர்.
“எங்க அம்மாவை விட்டுட்டு எங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டதால, ஆடிப் பாடித் திரிய வேண்டிய வயசுல நானும் சேர்ந்து குடும்ப பாரத்தை இழுக்க வேண்டிய கட்டாயம்.‘இன்னைக்கி நாம இப்படி எந்த ஆதரவுமில்லாம நிக்கிறோம்னா அதுக்குக் காரணம் நம்மகிட்ட காசு பணம் இல்லாததுதாம்மா’ன்னு எங்கம்மா அன்னைக்கி சொன்னது இப்ப சொன்னது மாதிரி இருக்கு. எப்படியாச்சும் முன்னுக்கு வந்து காசு பணத்த சம்பாதிச்சுப்புடணும்ங்கிற எண்ணம்தான் அப்ப எனக்குள்ள இருந்துச்சு. ஆனா, களத்துல இறங்கிப் பார்த்தப்பத்தான் நம்மைக் காட்டிலும் மோசமா எவ்வளவோ பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதுக்கப்புறம், காசு பணம் கெடக்கு விடு.. இல்லாதவங்களுக்கு உதவி செஞ்சு பார்ப்போம்னு என்னோட சிந்தனையை மாத்திக்கிட்டேன்’’ என்கிறார் உமாமகேஸ்வரி.
தற்போது ஆந்திராவின் கடப்பா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துக்கொண்டிருக்கும் உமாமகேஸ்வரி, மனித நல உரிமைகள் அமைப்பின் மகளிர் பிரிவுக்கு மதுரை மேற்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். சாலையோரம் யாராவது ஆதரவற்றுக் கிடந்தாலோ, அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்தாலோ இவரது உதவியைத்தான் நாடுகிறது காவல்துறை. கற்று வைத்திருக்கும் யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளும் கணவரின் சித்த வைத்திய வருமானமும் வயிற்றுப்பாட்டுக்கு வழிசொல்லிவிடுவதால் சோர்வில்லாமல் சுழல்கிறார் உமாமகேஸ்வரி.
“பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ புள்ளைங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன். மத்தவங்க மதிப்பெண்ணைப் பத்திப் பேசுவாங்க. ஆனா, நான் அதுக்குள்ளே போறதில்ல. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு அவங்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைப்பேன். பருவ வயதுதான் மாணவர்கள் தடம் மாறிப்போற வயதும். அதனால அதைப்பத்தி அவங்களுக்கு ஒரு தெளிவான பார்வையை உருவாக்க உதவுவேன்”என்கிறார் உமா.
கோடை விடுமுறையின்போது கிராமத்துப் பிள்ளைகளுக்கு கராத்தே, சிலம்பம், யோகா ஆகியவற்றுக்கு இலவசப் பயிற்சியளிக்கிறார். சென்னையின் வெள்ளச் சேதங்களுக்கு பிளாஸ்டிக் குப்பைகளும் ஒரு காரணம் என்று சொல்லும் இவர், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஆபத்து குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி மாணவர்களோடு கைகோத்துக் கொண்டு சீமைக்கருவேல மர அழிப்பிலும் ஈடுபட்டுவருகிறார். மாற்றத்தை நம்மிடத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் மண்பானைச் சமையல், பித்தளை, தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துதல் எனப் பாரம்பரியத்தைப் புதுப்பிக்கிறார்.
“நாம மொதல்ல ஒழுங்கா இருப்போம், அதுக்கப்புறம் மத்தவங்கள திருத்துற வழியப் பார்ப்போம்ங்கிறதுதான் என்னோட பாலிஸி. நம்ம கலாச்சாரம், சாப்பிடுற சாப்பாடு எல்லாமே சீர்கெட்டுக் கெடக்கு. குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லிக்கிட்டு அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி, குடியைக் கெடுக்கிற அவலத்தை எங்க போயி சொல்றது? இதை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள், பொழுதுபோக்கு அம்சங்களில் கவனத்தைச் செலுத்தறது வேதனையா இருக்கு. நான் மட்டும் வேதனைப்பட்டு என்ன ஆகறது? ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அந்த விழிப்புணர்வு வேணும். அதுக்கு என்னால் ஆன சிறு பணியை செஞ்சுட்டு இருக்கேன். காலம் என்ன சொல்லுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்’’ உரக்கச் சொல்லி முடித்தார் உமாமகேஸ்வரி.
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி