பெண் இன்று

முகம் நூறு: பதக்கப் பெண் லாவண்யா!

அ.சாதிக் பாட்சா

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஓர் இளம்பெண். அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த லாவண்யா. மேடையில் 32 பதக்கங்களை வழங்க லாவண்யாவை அழைத்தபோது எழுந்த கரவொலியால் அந்தக் குளிரூட்டப்பட்ட அரங்கமே அதிர்ந்தது.

ஐந்து வயதில் தந்தையை இழந்தவர் லாவண்யா. கிராமச் சூழலில் தமிழ்மொழி வழிக் கல்வி பயின்றவர். கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது அங்கு நிலவிய முற்றிலும் புதுமையான சூழல் லாவண்யாவுக்கு தொடக்கத்தில் பிடிக்கவில்லை. நகரச் சூழலில் படித்து, நுனி நாக்கில் ஆங்கிலம் உச்சரிக்கும் மாணவ, மாணவிகள் கிராமியச் சூழலில் வளர்ந்த லாவண்யாவை அலட்சியமாகப் பார்த்தனர். அவர்களது அலட்சியப் பார்வையை ஆச்சரியப் பார்வையாக மாற்ற வேண்டும் என வைராக்கியம் வைத்தார். அதன் விளைவு கால்நடை மருத்துவத்தில் சமீப ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையான 32 பதங்கங்களைக் குவித்துள்ளார்.

பதக்கம் வாங்கி மேடையை விட்டு இறங்கியதுமே தன் அம்மாவை அழைத்து பக்கத்தில் நிறுத்திக்கொண்ட லாவண்யாவில் செயல், தன் அத்தனை சாதனைகளுக்கும் தன் தாய்தான் அச்சாணி என்பதைச் சொல்லாமல் சொன்னது.

“என் அம்மாவோட ஊக்கமும் வழிகாட்டுதலும் இல்லைன்னா இந்த லாவண்யா இல்லை” என்கிற லாவண்யாவின் வார்த்தைகளில் அன்பின் ஈரமும் வெற்றியின் பெருமிதமும்!

32 பதக்கங்களை அள்ளிக் குவித்த லாவண்யாவை தமிழக ஆளுநர் ரோசய்யா, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கால்நடை பராமரிப்புத் துறை ஆணையர் சுரேஷ்.ஷி.ஹோனப்பகோல் ஆகியோர் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தனர். லாவண்யாவின் பதக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஆடை தயார் செய்து அதில் அனைத்து பதக்கங்களையும் பொருத்தி அணிவித்தது பல்கலைக்கழக நிர்வாகம். பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை அவரால் சுமக்க முடியவில்லை.

“என் அப்பாவோட இறப்புக்குப் பிறகு, என் அம்மா ராதாதான் எனக்கு எல்லாமே. அவங்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையா இருந்தாங்க. அதனால அவங்களுக்குக் கல்வியோட அருமை தெரியும். படிப்பு விஷயத்துல என்னை எப்பவும் ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. நான் 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தேன். 2009-ல் நடைபெற்ற ப்ளஸ் டூ தேர்வில் விலங்கியல் பாடத்தில் மாநிலத்திலேயே நூற்று நூறு மதிப்பெண் எடுத்த ஒரே மாணவி நான்.

என்னோட அம்மாவும் உறவினர்களும் நான் மருத்துவராகப் பணியாற்றணும்னு விரும்பினாங்க. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்குச் சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதீத பாசம் உண்டு. வீட்டில் நாய், பூனை வளர்த்து வருகிறேன். அதனால் விலங்கின மருத்துவம் அல்லது விவசாயம் படிக்க வேண்டும் என விரும்பினேன். எனது முதல் விருப்பமான கால்நடை மருத்துவத்தில் கால்நடை பராமரிப்பு பிரிவைத் தேர்வு செய்தேன். நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பில் சேர்ந்தேன்.

பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதாலும், அதற்கான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது” என்று சொல்லும் லாவண்யா, அதற்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் படிக்கத் தொடங்க, ஆங்கில மொழியறிவும் வசப்பட்டது. பிறகென்ன? வெற்றி மேல் வெற்றிதான்!

“நான் எப்பவும் புத்தகமும் கையுமாகத் திரியும் புத்தகப் புழு அல்ல. டி.வி., அரட்டை, விளையாட்டு என எதையும் தியாகம் செய்தது கிடையாது. வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகுந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கிக் கொள்வேன். பின்னர் கூடுதல் கவனம் எடுத்து பாடங்களை படிப்பேன் அவ்வளவுதான். தேர்வு முடிவில் ஒரு சில பதக்கங்கள் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், இத்தனை பதக்கங்களை குவிப்பேன் என எதிர்பார்க்கவில்லை” என்று சொல்லும் லாவண்யா, கால்நடை மருத்துவம் படித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பை மட்டும் நம்பிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்கிறார்.

“தனியாக கிளினிக் வைத்து விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். தனியார் நிறுவனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. மனநிறைவு தரும் வகையில் வாழ்க்கையை நடத்த நிச்சயம் இந்தத் துறை உதவும்” என்கிறார் நம்பிக்கையோடு. திருத்தமாகத் தன் மகள் பேசுவதைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் லாவண்யாவின் அம்மா ராதா!

அம்மாவுடன் லாவண்யா | படம்: ரகு

SCROLL FOR NEXT