பெண் இன்று

நாம் பேசியாக வேண்டும்!

யுகன்

“கவனி

என்னுடைய குரல்

பலவீனமாக ஒலித்தாலும்

நாம் பேசியாக வேண்டும்!”

இவை கவிஞர் இன்குலாபின் கவிதை வரிகள்.

விளிம்பு நிலையில் வாழும் மக்கள், சிறுபான்மை சமூகத்தினர், ஒடுக்கப்பட்டவர்கள், மாற்றுப் பாலின, பாலீர்ப்பு சிறுபான்மையினர் இப்படி எல்லோரின் சார்பாகவும் நாம் பேசியாக வேண்டும். அதற்கான சிறு முயற்சியை புனேவைச் சேர்ந்த ‘மிஸ்ட்’ தன்னார்வ அமைப்போடு இணைந்து இணைய வழியில் சாத்தியமாக்கியது ‘உபுண்டு’ (UBUNTU) அமைப்பு.

மாற்றுப் பாலினத்தவர், பால் புதுமையரிடையே ஆரோக்கியமான புரிதல்களையும் விவாதங்களையும் ஏற்படுத்துவதற்காக மும்பையைச் சேர்ந்த லோச்சனா என்னும் பெண் தொடங்கியிருக்கும் அமைப்பு இது. ‘உபுண்டு’ என்னும் வார்த்தை ஆப்பிரிக்க மொழியில் புழங்கும் வார்த்தை. இதற்கு அர்த்தம், ‘நீ இருப்பதால் நான் இருக்கிறேன்!’

“ஊரடங்கால் குடும்பத்துக்குள்ளேயே தனிமைத் துயரில் வாடும் மாற்றுப் பாலினத்தவர்கள், மாற்றுப் பாலீர்ப்பு கொண்டவர்கள் தங்களின் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பற்காகத்தான் இந்த இணையவழிச் சந்திப்பை ஏற்பாடு செய்தேன்” என்கிறார் லோச்சனா.

‘நான்-பைனரி விஸிபிலடி வீக்’ என்னும் பெயரில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இந்தச் சந்திப்பில் பலர் பங்கெடுத்தனர். பொதுவாகவே பால் புதுமையர் சமூகத்தினருக்கான சந்திப்புகளில் பொதுச் சமூகத்தினர் பங்கெடுப்பதற்குத் தடைகள் இருக்கும். ஆனால், இந்தச் சந்திப்பைப் பொறுத்தவரை அப்படியொரு தடையை அவர்கள் விதிக்கவில்லை. “பொதுச் சமூகத்தினருக்கும் எங்களின் கருத்துகள் சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்” என்கின்றனர் ‘உபுண்டு’ அமைப்பாளர்கள்.

தங்களைப் பற்றிய பொதுவான அறிமுகத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், தங்களைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படிப் பார்க்க வேண்டும், எப்படித் தங்களை நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும் தங்களின் விருப்பங்களைப் பதிவுசெய்தனர். தன்பால் உறவு திருமணங்களுக்கு நீடிக்கும் தடை, குழந்தைகளைத் தத்தெடுப்பது போன்றவற்றுக்கு இருக்கும் தடை, சட்டபூர்வமாகவும் சமூகரீதியாகவும் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் போன்றவை கிடைப்பதற்காக நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் எனப் பல விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

பங்கெடுத்தவர்களில் சிலர் கவிதைகள் சொல்லினர். பட்ருனி என்பவர் பிஹாரிய நாட்டுப்புறப் பாடலை மிகவும் இனிமையாகப் பாடினார். கரோனா பேரிடரால் மாற்றுப் பாலினத்தவர் நடத்தும் கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே நடந்துகொண்டிருப்பது அவர்களின் ஒற்றுமைக்கு உரமாக இருக்கின்றன.

“நெருக்கடியான எல்லாச் சூழல்களிலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்று இருக்கும். அதைக் நாம் கண்டடைய வேண்டும்” என்னும் வங்காரி மாத்தாயின் நம்பிக்கை வாசகங்களை, பால் புதுமையரின் இந்த இணையவழிச் சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT