வாசகியின் அசத்தல் வரவேற்பு
‘பெண் இன்று’ இணைப்பிதழின் தீவிர வாசகியான விஜயலட்சுமி, விழாவுக்கு முதல் ஆளாக வந்து, பூக்கோலம் போட்டு வாசகிகளை வரவேற்றிருந்தார். ‘பெண்மணி நாட்டின் கண்மணி’ என்ற வாசகத்துடன் இருந்த அவரது பூக்கோலம் ‘தி இந்து மகளிர் திருவிழாவை மலர்களின் சுகந்தத்துடன் தொடங்கிவைத்தது. இவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்.
திருக்குறளின் இனிமை
விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் திருக்குறளையும், அபிராமி அந்தாதியையும் பாடியதோடு மட்டுமல்லாமல் நடனம் ஆடியும் அமர்களப்படுத்திவிட்டார்கள். ராஜேஸ்வரி, தனலட்சுமி, பார்கவி லலிதா, தனம், உமா மகேஸ்வரி, ராஜலட்சுமி, சுமித்ரா, பிரவீணா, சௌம்யா ஆகிய ஒன்பது மாணவிகளும் திருக்குறளை பரத நாட்டிய வடிவத்தில் பிரமாதமாக ஆடினார்கள். மாணவிகளின் இந்தத் திருக்குறள் நடனத்தை வாசகிகள் வெகுவாக ரசித்தனர்.
அதிரவைத்த பறையாட்டம்
மதுரை மகளிர் திருவிழாவில் வாசகிகள் அனைவரையும் அதிரடியாக நடனமாட வைத்தது திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் பறையாட்டம். பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்தப் பறையாட்டம் வாசகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்களுக்கு விழா அரங்கமே பறை இசையின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் இருந்தது. பறையின் அதிர்வுகள் ஒலிக்கத் தொடங்கிய பத்தே நிமிடத்தில் வாசகிகள் அனைவரும் தங்களை மறந்து ஆடத் தொடங்கியிருந்தனர். ‘சமநிலை கேட்டுப் போராடச் சொல்லும் பறை’ என்ற பறை அதிர்வுகளின் முழக்கம் வாசகிகளிடம் உணர்வுபூர்வமான தாக்கத்தை உருவாக்கியதைப் பார்க்கமுடிந்தது.
ஜல்லிக்கட்டுக்கு ‘ஜே’
‘மைமிங்’ போட்டியில் பங்கேற்ற ஐந்து குழுக்களில் ‘ஐல்லிக்கட்டு’ தலைப்பில் நடித்துக்காட்டிய பிர்தௌஸ் பானு, விஜயலட்சுமி, மீனாட்சி பாஸ்கர், சித்ரா, நாகேஸ்வரி உள்ளிட்டோர் முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். மேடையில் காளைகளைத் தத்ரூபமாக ஓடவிடுவதற்குக் கையாண்ட ‘காஸ்ட்யூமை’ வாசகிகள் பலரும் பாராட்டினர். அதிலும், துப்பட்டாவைக் காளைகளுக்கு வால்களாகப் பயன்படுத்தியிருந்தது பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, பெரும்பாலான வாசகிகள் ஜல்லிக்கட்டுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.