வி த்யா பாலன் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஷேர்னி’ என்னும் இந்தித் திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்றுவருகிறது. அமித் மசூர்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வித்யா வின்சென்ட் என்னும் மாவட்ட வன அதிகாரி கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தின் உருவகமாகவே பெண்புலி என்பதற்கான இந்திச் சொல்லான ஷேர்னி படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் அதிகரித்துவரும் மோதலை யும் அதற்குப் பின்னால் இயங்கும் சூழலியல், அரசியல் காரணிகளையும் விரிவாகப் பேசியுள்ள இந்தப் படம் பெண்ணிய நோக்கிலும் பாராட்டத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
புலியைக் கட்டுப்படுத்தும் பணிக்கு பெண் அதிகாரி பொருத்தமானவரல்ல என்று கூறும் உள்ளுர் அரசியல்வாதியின் விமர்சனத்தை அமைதியாக எதிர்கொள்கிறார் வித்யா. ஆனால், வேறு யாரும் சிந்தித்திராத நடவடிக்கை மூலம் பிரச்சினையின் தீர்வு நோக்கி நகர்கிறார். இதன் மூலம் ஊர் மக்கள் - சக ஊழியர்களின் நன்மதிப்பைப் பெறுகிறார்.
அலுவலகம் சார்பில் ஒருங்கிணைக்கப் படும் கொண்டாட்டத்தில் மதுவுக்குப் பதிலாகப் பழரசத்தைத் தர முன்வரும் பணியாளரிடமிருந்து மதுவை வாங்கி இயல்பாக அருந்துகிறார் வித்யா. இந்த இடத்தில் மது அருந்துவது தொடர்பில் ஆண்மைய சமூகம் பெண்களுக்கு மட்டும் ஏற்படுத்தியுள்ள பண்பாட்டுரீதியிலான தடை கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
இன்னொரு காட்சியில் ஒரு விருந்துக்குச் செல்வதற்காக நகை அணியாமல் புறப்படும் வித்யாவை மாமியார் கடிந்துகொள்கிறார். ஆனால், வித்யாவின் கணவர் அரைக்கால் சட்டை அணிந்திருப்பது எந்த விதத்திலும் அவரை உறுத்தவில்லை. உடை விஷயத்தில் பாலினப் பாகுபாடு சார்ந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கிறவர்கள் அனைவருக்குமான பதிலடி இந்தக் காட்சி.
படத்தில் வித்யாவின் மாமியாரும் அம்மாவும் அவரைக் குழந்தை பெற்றுக்கொள்ள வற்புறுத்தும்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் தாங்கள் இருவருக்கும் ஆர்வமில்லை என்றும் பணிக்கு அப்பாற்பட்ட ஓய்வு நேரத்தைப் புத்தக வாசிப்பு, தோட்டக்கலை, யோகா உள்ளிட்ட பிடித்த விஷயங்களுக்காக ஒதுக்க விரும்புவதாகவும் வித்யா கூறுகிறார். மகப்பேற்றின் மூலமே பெண்கள் முழுமையடைகிறார்கள் என்று வசனங்களையும் பாடல்வரிகளையும் எழுதிக் குவித்த சினிமாக்காரர்களும் ரசிகர்களுக்கும் இந்தக் காட்சி திகைப்பை ஏற்படுத்தக்கூடும்.
இரவு நேரத்தில் காட்டுக்குச் செல்வதற்கு கணவரும் மாமியாரும் ஆட்சேபம் தெரிவிக்கும்போது, அவர்களை மீறித் தன்னுடைய பணியைக் கவனிக்கச் செல்கிறார் வித்யா. இதுபோல் எல்லாவற்றையும்விடப் பணிக்கு முன்னுரிமை அளிக்கும் பெண் கதாபாத்திரங்களைக் காண்பது இந்திய வெகுமக்கள் சினிமாவில் அரிது. இப்படிப் பல காரணங்களுக்காகப் பெண்ணிய வாதிகளும் பாலினச் சமத்துவத்தில் அக்கறை கொண்டவர்களும் கொண்டாட வேண்டிய திரைப்படமாக அமைந்துள்ளது ‘ஷேர்னி’.