சமையல் பசியை மட்டும் போக்குவது இல்லை; சில நேரம் பணக் கவலையையும் போக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ திலக். இவர் உணவகத் தொழிலில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத் தொழில் நசியத் தொடங்கியபோது மாற்றுப் பாதையில் செல்லாமல் பழகப்பட்ட அதே பாதையிலேயே பயணம் செல்ல முடிவெடுத்தார் ஜெயஸ்ரீ. ஆனால், திசை புதிது. அது வெற்றிக்கான திசை!
கரோனா ஊரடங்கால் பெரும் தொழில் நிறுவனங்களே பாதிக்கப்பட, துணிந்துதான் அந்த முடிவை ஜெயஸ்ரீ எடுத்தார். உணவை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் ஹோம் டெலிவரி செயலிகள் பெரும்பாலும் உணவகங்களில் இருந்துதான் உணவை வாங்குகின்றன. வீட்டு உணவை அதே பாணியில் சந்தைப்படுத்த நினைத்தார் ஜெயஸ்ரீ.
வீடே உணவகம்
“இந்திய உணவிலிருந்து வெளிநாட்டு உணவு வரை எல்லாமே உணவகங்களில் கிடைக்கின்றன. தனியாக வசிக்கும் முதியோரும், கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளிலும் வாரத்தில் குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது உணவை வெளியிலிருந்து வாங்குகின்றனர். அவர்கள், வீடுகளில் சமைப்பதைப் போன்ற எளிய உணவைத்தான் விரும்புகின்றனர். அவர்கள்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். வீட்டில் சமைத்ததைப் போன்றே சுவையான உணவு என்று சொல்வதைவிட வீட்டிலேயே சமைக்க முடிவெடுத்தோம். ஆனால், நாங்கள் மட்டுமே எவ்வளவு பேருக்குச் சமைக்க முடியும்? அதனால்தான் ஆர்வமுள்ள பெண்களை இணைத்துச் செயல்பட முடிவெடுத்தோம்” என்று சொல்லும் ஜெயஸ்ரீ இதற்காகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியதுதான் ‘ஷீரோ’ நிறுவனம். தற்போது இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து செயல்படுகின்றனர். சமையல் தொழில் செய்யும் பெண்கள் பலர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலம் ஆர்டர்களைப் பெறுகிறார்கள். அப்படியல்லாமல், டெலிவரி செயலிகள் மூலம் அனைவரையும் சென்று சேரும் நோக்கில் இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் ஜெயஸ்ரீ. அது சிறந்த முடிவு என்பதை, ஓராண்டு முடியும் முன்பே அவர்கள் எட்டியிருக்கும் உயரம் உணர்த்துகிறது.
முதலீடு தேவையில்லை
பெண்களும் கதாநாயகர்களே என்பதை உணர்த்தத்தான் ‘ஷீரோ’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் இணைவதற்கு எந்த முதலீடும் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். நன்றாகச் சமைக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம். வயது தடையல்ல. “சமைப்பதில் ஆர்வமும், நிறைய பேருக்குச் சமைக்க உகந்த சமையலறையும் மட்டுமே இந்தத் தொழிலின் முதலீடு. ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் அவர்களுக்குப் பயிற்சியளிப்போம். சுகாதாரமும் தரமும் அவசியம். என்னதான் அவரவர் வீடுகளில் சமைத்தாலும் ஒரே நிறுவனத்தின் பெயரில்தான் உணவு டெலிவரி செய்யப்படுகிறது என்பதால் குறைந்தபட்சம் ஒரே மாதிரியான தயாரிப்பு முறையைக் கடைப்பிடிக்கி றோம். நிறம், தரம், சுவை, நேரம் இந்த நான்கும்தான் எங்கள் அடிப்படைக் கொள்கை. இதில் எந்தச் சமரசமும் செய்ய மாட்டோம். அதுதான் வாடிக்கையாளர்களிடம் எங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது” எனப் புன்னகைக்கிறார் ஜெய.
நம் குடும்பத்தினருக்கு எப்படிச் சமைப்போமோ அப்படித்தான் வாடிக்கை யாளர்களுக்குச் சமைக்கி றார்கள். பெரிய நிறுவனங்களுக்கு உணவகம் இருக்கும். இவர்களுக்கு ஒவ்வொருவரது வீடும் உணவகம்தான். ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற டெலிவரி செயலிகளுடன் இணைந்து செயல்படு கின்றனர். வாடிக்கையாளர்கள் அந்தச் செயலிகளில் உணவைத் தேடும்போது ‘ஷீரோ’ உணவகமும் அதில் இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கு அருகில் யார் இருக்கிறார்களோ அவர்களது வீட்டில் இருந்து உணவு அனுப்பப்படும்.
உடனடி உணவு
“சென்னையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவு தயாராகிறது. நாங்கள் ஏற்கெனவே சமைத்ததைச் சூடு செய்து அனுப்புவதில்லை. தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தையும் செய்வதற்கான தயார் நிலையில் எங்கள் பெண்கள் இருப்பார்கள். ஆர்டர் கிடைத்தவுடனே சமைக்கத் தொடங்குவார்கள். உணவுக்கு ஆர்டர் கொடுத்ததும் அதிகட்சம் முக்கால் மணி நேரத்துக்குள் உணவு கைக்கு வர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அதன்படி பார்த்தால் பத்தே நிமிடத்தில் சமைத்து, டெலிவரி எடுத்துச் செல்கிறவரிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேரும் சிலரால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சமைக்க முடியாமல் போய்விடுவதுண்டு. அப்போது ரேட்டிங் குறையும். ஆனால், வாடிக்கையாளர்களிடம் பேசி அடுத்த முறை அந்தக் குறையைச் சரிசெய்ய முயல்வோம்” என்று சொல்லும் ஜெய, புதிதாக இணைகிறவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் டெலிவரி சிக்கல்களைக் கவனிக்கவும் தனிக் குழுவை வைத்திருக்கிறார்.
இவர்களது நிறுவனம் உணவை மட்டு மல்லாமல், நறுக்கிய காய்கறிகள், உரித்த வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, வேகவைத்த பருப்பு, சுண்டல் போன்றவற்றையும் தருகிறது. உடனடியாகச் சமைக்க நினைக்கிறவர்கள் இவற்றை ஆர்டர் செய்கிறார்கள். இவர்களது நிறுவனத்தில் 20 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் உள்ளனர். ஆரம்பத்தில் தனியாளாகப் பணியில் சேரும் பெண்கள், இதில் கிடைக்கும் வருமானத்தையும் ஆர்டரையும் பொறுத்து, நண்பர்களையும் உறவினர்களையும் தங்களுக்கு உதவியாகச் சேர்த்துக்கொள்கின்றனர்.
வாரந்தோறும் வருமானம்
“அம்மாவுக்கு உதவியாக மகன், மனைவிக்கு உதவியாகக் கணவன் என்று இரண்டு மூன்று பேராகச் சேர்ந்தும் சமைக்கிறார்கள். இவர்கள் கிடைக்கும் ஆர்டரைப் பொறுத்து வாரம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். எங்களிடம் பணியாற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. தனிப் பெண்கள், ஊரடங்கில் வேலை இழந்த பெண்கள், கணவனுக்கு வேலை பறிபோனதால் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டவர்கள், கூடுதல் வருமானம் தேவைப்படுவோர் என்று பலதரப்பினரும் எங்களிடம் வேலை செய்கிறார்கள். எங்களிடம் வேலை செய்கிறவர்களில் ஒருவருக்குப் போட்டியாக இன்னொருவரை நியமிக்க மாட்டோம். ஒரு பகுதியில் ஒருவர் இருக்கிறார் என்றால் அந்தப் பகுதியில் வேறு யாருக்கும் வாய்ப்பு தர மாட்டோம். சென்னையைத் தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும் எங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவெடுத்தி ருக்கிறோம். அங்கேயும் ஷீரோக்கள் இருக்கிறார்கள்தானே!” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஜெயச்ரொ.
தொடர்புக்கு: https://sherohomefood.com/