பெண் இன்று

மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்குமா?

ப்ரதிமா

இந்தியாவில் கரோனாவின் முதல் அலையின்போது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இறப்பு விகிதம் குறைவு. தற்போது இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குக் குறைவான இளையோர் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர். முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் இறப்புவிகிதம் அதிகம். காரணம், இரண்டாம் அலையின்போது கரோனா வைரஸ் வேற்றுருவம் கொண்டுவிட்டது. இதன் அறிகுறிகள் சட்டெனத் தெரியாத நிலையில் நேரடியாக நுரையீரலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியான ஊரடங்கால் தமிழகத்தில் இரண்டாம் அலையின் தொற்று விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குழந்தைகளே பரவலாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் மருத்துவத் துறையினர் சிலர் சொல்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல், தமிழக மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா பிரிவுகளை அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றும் சிலர் சொல்கின்றனர். முதல் அலையின்போது 45 வயதுக்கு மேற்பட் டோரும் இரண்டாம் அலையில் 18 வயதுக்கு மேற்பட் டோரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் குழந்தைகள் மட்டுமே தடுப்பூசிக் கவசமின்றி உள்ளனர். அதனால், மூன்றாம் அலை ஏற்படும்பட்சத்தில் அவர்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்கின்றனர்.

குழந்தைகள் மூலம் தொற்று

குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டால் அவர்கள் மூலம் பிறருக்கு எளிதாகத் தொற்று பரவும் ஆபத்து உள்ளது என்கிறார் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜன். குழந்தைகள் நல நிபுணரான இவர், “கரோனா வைரஸின் கூர்ப்புரதங்கள் நம் உடலில் உள்ள ACE2 புரத ஏற்பிகளின் மூலம் நம் செல்களுக்குள் நுழையும். இந்தப் புரத ஏற்பிகள் குழந்தைகளுக்கு முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் என்பதாலும் குழந்தைகளிடையே கரோனா தொற்று விகிதம் குறைவாக இருக்கும். தொற்று ஏற்பட்டாலும் பெரியவர்களைப் பாதித்த அளவுக்கு வீரியமாக இருக்காது. ஆனால், தொற்று ஏற்பட்டால் குழந்தைகள் பெருங்கடத்துநர்களாக (சூப்பர் ஸ்ப்ரெட்டர்) மாறும் ஆபத்து உள்ளது. அவர்களிடமிருந்து பிறருக்கு மிக எளிதில் தொற்று பரவக்கூடும். அதனால், கரோனா தொற்றுத்தடுப்பு வழிமுறைகளைக் குழந்தைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூடுமானவரை குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லக் கூடாது. குடும்ப விழாக்கள், மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்” என்கிறார்.

தற்போது பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் குழந்தைகள் வெளியே செல்லத் தொடங்கியுள்ளனர். நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்கும் விளையாட்டுப் பயிற்சிக்கும் செல்கின்றனர். மருத்துவர்கள் இது வரவேற்கத்தக்கதல்ல என்கின்றனர். குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையிலும் இந்தியாவில் கரோனா தொற்று முற்றாக விலகாத நிலையிலும் குழந்தைகள் வெளியே செல்வது ஆபத்தானது.

தொற்று ஏற்பட்டால் தாய்ப்பால் தரலாமா?

பாலூட்டும் அன்னையர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்பதைத் தொடர்ந்து தற்போது கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு முடிந்த நிலையில் பெண்கள் சிலர் தொற்றுக்கு ஆளாகின்றனர். தங்கள் பச்சிளங்குழந்தைகளும் தொற்றுக்கு ஆளாகுமோ என்கிற அச்சத்தில் குழந்தைகளுக்குப் பாலூட்டவும் தயங்குகின்றனர். இந்தத் தயக்கம் தேவையில்லாதது. காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பாலூட்டுவதன் மூலம் தொற்றுக்கு ஆளான தாயிடமிருந்து குழந்தைக்கு கரோனா வைரஸ் பரவாது. பாலூட்டுவதற்கு முன் கைகளை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து, காற்றோட்டமான அறையில் அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டலாம். தாய்க்கு மிதமான தொற்று இருந்தால் குழந்தையைத் தன்னுடனே வைத்துக்கொள்ளலாம். தாய்க்குத் தீவிர தொற்றோ வேறு பிரச்சினைகளோ இருந்தாலும் அல்லது பாலூட்ட முடியாத அளவுக்குப் பாதிப்பு இருந்தாலும் பாலூட்டத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, சுகாதாரமான முறையில் பாலைச் சேகரித்துக் குழந்தைக்குப் புகட்டலாம். நோயின் தீவிரம் குறைந்த பிறகு பாலூட்டுவதைத் தொடரலாம். பாலைச் சேகரித்துத் தரும் நிலையில் இல்லாதவர்கள், தாய்ப்பால் தானம் பெற்றோ வேறொரு தாயிடம் குழந்தையைக் கொடுத்தோ பால் அருந்தச் செய்யலாம். பேறுகாலத்தில் தொற்றுக்கு ஆளாகும் பெண்கள் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் சோர்வடைவார்கள். அதனால், அவர்களுக்குக் குடும்பத்தினரின் அரவணைப்பு அவசியம். தேவைப்பட்டால் மனநல ஆலோசனை பெறலாம்.

SCROLL FOR NEXT