சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாசகி மானவி கடோக் சிக்கிக்கொண்டார். டிசம்பர் 1-ம் தேதியன்று அவரது வீட்டுக்குள் வெள்ளம் நுழைந்த நேரத்தில், அவருடைய ஐந்து வயது மகள் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறாள். கணவரோ வேலைக்குச் சென்றுவிட்டார். இந்தப் பின்னணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், தான் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் மானவி.
“சமீபத்திய சென்னை வெள்ளத்தில் எங்கள் வீடு இருந்த பகுதியில் தண்ணீர் சரசரவென ஏறியது. அதற்குக் காரணம், நிச்சயமாக மழையல்ல. அடையாற்றில் செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே காரணம். எங்கள் பகுதியில் பெய்த மழையின் அளவு அதிகமில்லை. ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவது என்று அரசு முடிவெடுத்த பிறகு, அதைப் பற்றி ஏன் முறைப்படி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்ற கேள்வி இப்போதும் என்னைக் குடைந்தெடுக்கிறது.
வெள்ளத்தில் இருந்து தப்பி நானும் என் மகளும் இரண்டாவது தளத்துக்குப் போயிருப்பதைப் பார்த்ததும், எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டு பால்கனியில் இருந்த பெண், ‘அப்பாடி, நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களே’ என்று சிறு புன்னகையுடன் சொன்னது காதில் விழுந்தது. தமிழ்ப் பெண்ணான அவர், வடஇந்தியப் பெண்ணான என்னைப் பார்த்துதான் அவர் அப்படிச் சொன்னார். வெள்ளம் வேறுபாடுகளை அழித்துவிட்டது. சக மனிதர்களைப் பற்றி கவலைகொள்ளச் செய்திருக்கிறது. நம் பக்கத்து வீட்டில் இருக்கிறவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது ஒருவருக்கு நிம்மதி உணர்வைத் தந்திருக்கிறது.
வீட்டுக்குள் வெள்ளம் நுழைந்தவுடன் அவசியமான பொருட்களைக் கடகடவென மாடிக்கு ஏற்றி உதவ நான்கு இளைஞர்கள் முன்வந்தார்கள். என்னுடைய பெயரோ, அந்தஸ்தோ, மதமோ அவர்களுக்குத் தெரியாது. இளைஞர்களில் நல்லவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய முன்வருபவர்கள், இந்த உலகில் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு என் அனுபவமே சாட்சி.
இதற்கிடையே என்னுடைய கணவர் எங்கள் வீட்டை அடைவதற்கு, பெரும் ஆபத்துகளைக் கடந்து வந்திருந்தார். எங்கள் வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் சேதமடையாமல் பாதுகாக்க, அவர் கடுமையாகப் போராடினார். ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்குப் போகவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதும்கூட உண்மையே.
விவசாயிகள் படும் துயரத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவ ஏற்கெனவே நான் முயற்சித்திருக்கிறேன். ஆனால், இந்த முறை என் வீடும், அதில் கடந்த ஏழு ஆண்டுகளில் நானும் என் கணவரும் சிறுகச் சிறுகச் சேர்ந்த பொருட்களும் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, விவசாயிகள் படும் துயரமும் வலியும் எப்படியிருக்கும் என்பது அழுத்தமாகப் புரிந்தது. ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தங்கள் பயிரை இழக்கும்போது, அவர்களுக்கு இதைவிட மிகப் பெரிய துயரமாகத்தானே இருந்திருக்கும்?
இந்த வெள்ளத்தில் அரசுப் படகுகள் முக்கியஸ்தர்களை மட்டும் முதலில் காப்பாற்றுவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டபோது, சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுவதற்காக அனுதினமும் போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்றே, சாதாரண மக்களான எங்களைக் காப்பாற்ற முன்வந்தது. நாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கேட்கவில்லை. இந்தியாவில் சகிப்பின்மை குறைந்து வருவது பற்றி உண்மையிலேயே கவலைப்படுகிறோம்.
நல்ல வேளையாகத் தமிழகத்தில் சகிப்பின்மை மிக மோசமான சூழ்நிலையில் இல்லை. நெருக்கடியான இந்த நாட்களில் நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று அக்கறையாக விசாரித்த ஒவ்வொரு தோழியும் நண்பரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்தான். சகிப்புத்தன்மை மட்டுமில்லாமல் அன்பு நிறைந்தவர்களாகவும் மக்கள் இருக்கிறார்கள், சில குறுங்குழுக்கள் மக்களையும் நாட்டையும் கூறுபோடுகின்றன.
இப்படியாகச் சென்னையில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளம், ஆறு முக்கியப் பாடங்களை எனக்குக் கற்றுத் தந்து, சென்றிருக்கிறது”.