பள்ளியில் ஆசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவியர் சிலர் புகார் அளித்த செய்தி வேதனையையும் சிறிது ஆசுவாசத்தையும் அளித்தது. காரணம், முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளியில் படித்தபோது இப்படி எந்த ஏற்பாடும் எங்களுக்கு இல்லை. வீட்டில் பெற்றோரிடம் பேசவே பயம். இதில் எங்கிருந்து பெரியவர்களைப் பற்றிப் புகார் சொல்வது?
அப்போதெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் இல்லாததால் அக்கம்பக்கத்து வீட்டின ருடன் அமர்ந்து அம்மா பேசுவார். சிறுமியான நானும் உடன் செல்வேன். அப்போது பக்கத்து வீட்டில் இருந்தவர் என்னை எப்போதும் மடியில் அமரவைத்துக்கொள்வார். ஆரம்பத்தில் எதுவும் தெரியவில்லை. சில நாட்களில் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தேன். ஆனால், அவரிடம் செல்ல முடியாது என்று மறுக்க முடியவில்லை. மறுத்தாலும் கட்டாயப்படுத்தித் தூக்கிச் செல்வார். அம்மாவும், ‘மாமா ஆசையா கூப்பிடுறார் இல்லே, ஏன் அடம்பிடிக்கிறே?’ என்பார்கள். அனைவரும் பேசிவிட்டுக் கலையும்வரை எனக்கு எரிச்சலாக இருக்கும். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் குடும்ப நண்பர் ஒருவரும் ஆசையாகக் கொஞ்சுவதுபோல் கன்னத்தில் அழுத்திக் கிள்ளுவதும் மடியில் அமர்த்திக்கொள்வதுமாக இருப்பார். எனக்கு அழுகையே வந்துவிடும். அவருக்குப் பெண் குழந்தை இல்லாததால் என் மீது பாசமாக இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சிரிப்பார். இதில் அப்பாவுக்குப் பெருமிதம் வேறு. எனக்கோ கோபமும் அழுகையுமாக வரும். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு துணிச்சலோடு அம்மாவிடம் சொல்லலாம் என்றால், என்னை நம்புவார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.
இப்படியே வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு யாரையுமே பிடிக்காமல் போய்விட்டது. யாரிடமும் பேசக்கூடத் தயங்குவேன். கல்லூரியில் சேர்ந்த பிறகும், எதுவும் மாறிவிடவில்லை. ஆண்கள் மீது எனக்கு எந்த மதிப்பும் இல்லை. யாருமே நல்லவர்கள் இல்லை என்பது என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திருமணமே பிடிக்கவில்லை. என் கணவரிடம் பேசக்கூடத் தயங்கினேன். பிறகு ஒருவழியாக அவரிடம் என் சிறுவயது சம்பவங்களைச் சொன்னேன். அவர்தான் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேற்றினார். என் மனக் காயங்களுக்கு மருந்திட்டார். ஆண்களில் நல்லவர்களும் உண்டு என்று உணரச் செய்தார். ஆனால், சிலவற்றை இப்போதும் என்னால் முழுதாகக் கடந்துவிட முடியவில்லை. அதனாலேயே என் மகளைக் கூடுதல் கவனத்துடன் வளர்க்கிறேன். எது நடந்தாலும் என்னிடம் சொல்லும் அளவுக்கு அவளுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறேன். இன்னும் எவ்வளவு நாட்களுக்குப் பெண்கள் இப்படிப் பாதுகாப்பின்றி இருக்க முடியுமோ என்று கவலையாக இருக்கிறது.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
***********************************************
நீங்களும் சொல்லுங்களேன்...
தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவத்தில் இருந்து கடைசியாகப் படித்த புத்தகம் வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனதுக்குத் தெளிவைத் தரலாம். தயங்காமல் எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in