பல முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில் நிர்பயா வழக்கு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா மிகக் கொடூரமான முறையில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தும் போனார். நிர்பயாவின் இறப்பு நாட்டையே உலுக்கியது. அனைத்துத் தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பின.
கடந்த ஆண்டு வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 92 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலான வல்லுறவு நிகழ்வுகளில் முதல் தகவல் அறிக்கைக்கே போராட வேண்டிய சூழலில் நிர்பயா வழக்கு மிகத் துரிதமாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டனர். அதில் ஒரு குற்றவாளி 17 வயது மட்டுமே ஆனவர் என்பதால் அவர் மட்டும் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை பெற்ற அவர் கடந்த வாரம் சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலையைக் கண்டித்து டெல்லியில் நிர்பயாவின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் இளம் குற்றவாளியின் விடுதலைக்குத் தடைவிதிக்கக் கோரித் தாக்கல் செய்த மனுவும் உடனடியாக விசாரிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளியின் விடுதலைக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.
குற்றத்துக்கு வயதில்லை
18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் கொடுமையான குற்றங்களைச் செய்துவிட்டு, சிறார் என்ற பெயரில் தண்டனையினின்றித் தப்பித்துக்கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சிறார் செய்த குற்றங்கள் 50.6 சதவீதம் அதிகரித்துள்ளன. 2005-ல் சிறார்களின் குற்றங்கள் 25,601 ஆக இருந்தன. இது 2014-ல் 38,586 ஆக உயர்ந்துள்ளது என்கிறார் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பர்த்திபாய் சவுத்திரி. இத்தகைய சூழலில் தண்டனைக்கான வயது வரம்பு 16 ஆகக் குறைக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்களும் பரிந்துரைத்தனர். இன்னொரு சாரார் குற்றத்தின் தன்மைக்கேற்பவே தண்டனை வழங்கப்பட வேண்டுமேயன்றி ஒருவரின் வயதின் அடிப்படையில் அல்ல என்று வாதிட்டனர். ஆனால் இந்த வழக்கில் குற்றவாளியின் வயதின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட்டது.
வர்மா குழு கூறுவது என்ன?
நிர்பயா வழக்கில் பொது மக்களும், பெண்கள் அமைப்புக்களும் தந்த நெருக்கடியால், பாலியல் வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வழங்க முன்னாள் நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மூவர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் டிசம்பர் 23-ம் தேதி இந்தக் குழுவை அமைத்தார். இந்தக் குழு பெண்கள் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர் களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டது. 2013 ஜனவரி
23-ம் தேதி தனது அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தது. பல்வேறு பரிந்துரைகள், வழிகாட்டுதல்கள் கொண்ட அவ்வறிக்கை வயது வரம்பு குறித்தும் பேசுகிறது.
தண்டனைக்கான வயது வரம்பினைக் குறைப்பது சரியல்ல எனக் கூறும் வர்மா குழு, குற்றத்தின் தன்மை கடுமையாக இருந்தால், வயதைக் காரணம் காட்டாமல் தண்டனை வழங்கும் ஏற்பாடு குறித்து யோசிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைக்கிறது. மேலும் தண்டனை என்பது குற்றவாளியைத் துன்புறுத்துவதற்காக இல்லை, மாறாக அவர் குற்றத்தை உணர்ந்து திருந்தி வருவதற்கான ஏற்பாடே எனவும் சொல்கிறது.
படுமோசமான குற்றங்களைச் செய்த வயதுவந்த குற்றவாளிகளுடன் சிறார்களை அடைப்பதன் மூலம் சிறார்கள் திருந்துவதற்கு பதிலாக மிக மோசமானவர்களாக மாறுவதற்கான ஆபத்தும் உள்ளது என அந்த அறிக்கை கருதுகிறது.
அதேவேளையில் 16-18 வயதிற்குட்பட்டவர்கள் என்ன குற்றம் செய்தாலும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள்தான் தண்டனை என்பதை நீக்கிவிடலாம். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனைக் காலத்தை நிர்ணயிக்கலாம். அவர்களை சிறார் நீதிச் சட்டத்தின்படி ஒரு கண்காணிப்பு மையத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி செய்யலாம். இதனால், அவர்கள் விரைவில் வெளியே வந்து மீண்டும் குற்றம் இழைப்பார்கள் என்ற நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் அறிக்கை சொல்கிறது.
நிர்பயா வழக்கின் சிறார் குற்றவாளி இன்று வெளியே வந்துவிட்டார். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தேவை பன்முகச் செயல்பாடுகள்
நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்று சுதந்திரமாக வெளியே வந்துள்ள குற்றவாளியைப் பற்றிக் கவலைப்படும் சமூகம் 38,586 சிறார் குற்றவாளிகளைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டும். சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துவருகிறது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் வர்மா குழு போல் ஓர் விசாரணைக் குழுவே அமைக்கப்பட வேண்டும். இன்று கவனம் ஈர்த்திருக்கும் குற்றவாளியைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக அவரின் வீட்டாரோடு தொடர்பில் இல்லை, விடுதலைக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்ப விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
வீட்டைவிட்டு சிறுவயதில் வெளியேறித் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் சிறார்களைப்பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. மேலும், நமது கல்விமுறை எத்தகைய அறநெறிசார் வாழ்வுக்கு நம் பிள்ளை களைத் தயார் செய்கிறது என்பதையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகளில் இது குறித்த விவாதங்கள் நடத்தப்படவேண்டும். பெண்களை மதிக்கும், சரிசமமாக நடத்தும் போக்கினைச் சிறு வயது முதலே உருவாக்க வேண்டும்.
எளிதாகக் கிடைக்கும் மது போன்ற போதைப்பொருட்கள், இணையத்தில் மலிந்து கிடக்கும் பாலுறவுக் காட்சிகள், செய்திகள் போன்றவை பாலியல் வன்முறைக்குத் துணை போகும் உண்மையை ஏற்றுக்கொண்டு, அரசும் ஒவ்வொரு பெற்றோரும் இளையோரைத் தீய சூழலில் மாட்டிக்கொள்ளாது காக்க வேண்டும். இன்னொரு நிர்பயாவின் சாவைத் தடுப்பதும், குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும் நம் அனைவரின் கடமை.
கட்டுரையாளர், தொடர்புக்கு
mrs.dhanaseeli@gmail.com