பெண் இன்று

பேசத் தொடங்குவோம்

செய்திப்பிரிவு

பள்ளிகளில் பாலியல் அத்துமீறல், பாலியல் வன்கொடுமை போன்றவை, ஏதாவதொரு செய்தி வெளியாகி அலசப்படும்போதுதான் மக்களின் கவனத்துக்கு வருகின்றன. இந்தியச் சமூகத்தில் எப்போதும் இருந்துவந்தாலும், பேசப்படாத, திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. காரணம் இந்த அத்துமீறல்களில் ஈடுபடுபவர்கள் உறவினர்களாக, தெரிந்தவர்களாக, ஏதோ ஒரு வகையில் அதிகாரத்தைக் காட்டி மிரட்டுபவர்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையைப் பெரும்பாலும் மூடி மறைக்கவும், வெளியே தெரிந்துவிடாமலும் பார்த்துக்கொள்வதிலேயே பெற்றோர் முனைப்புடன் இருக்கிறார்கள். நம் குழந்தைகளை, அவர்களுடைய உரிமைகளை மதிக்காததாலேயே இப்படி இருக்க முடிகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைச் சமூகத்தில் பதிவுசெய்வதன், பேசுவதன் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். அதற்குக் குழந்தைகளிடம் முதலில் உரையாட வேண்டும். பாலியல் அத்துமீறல், வன்கொடுமை என்பது ஒரு தனிநபரின் உரிமைக்கு எதிரானது என்பதைக் குழந்தைக்கு முதலில் புரியவைக்க வேண்டும்.

சரி, அதை எப்படிச் செய்வது என்கிற கேள்வி எழலாம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை எப்படியெல்லாம் நிகழும், அவற்றை எப்படித் தடுக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராம்குமார் இயக்கத்தில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம் பள்ளியில் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக எச்சரித்திருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படமும் பாலியல் வன்கொடுமை சார்ந்து கவனப்படுத்திய படமே. இந்திய-ஆங்கில இயக்குநரான மீரா நாயர் இயக்கிய ‘மான்சூன் வெட்டிங்’ திரைப்படமும் இந்தப் பிரச்சினையை மையமிட்டதே. பாலியல் வன்கொடுமை குறித்த இந்தப் படங்கள் இந்தப் பிரச்சினையின் வீரியத்தைப் பெற்றோருக்குச் சரியாகவே உணர்த்தியுள்ளன.

பதின் வயதுக் குழந்தைகளிடம் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவற்கு மிகச் சரியான நூல் ‘யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்’. பிரபல பெண்ணிய எழுத்தாளர் கமலா பாசின் இந்தப் பிரச்சினை குறித்துக் குழந்தைகள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதியது. (தமிழில்: சாலை செல்வம், குட்டி ஆகாயம் தொடர்புக்கு: 98434 72092).

அதேபோல் பதின்வயதுக்குக் குறைந்த குழந்தைகளிடம் இந்தப் பிரச்சினை குறித்துத் தெரிவிக்கவும், அறிமுகப்படுத்தவும் உதவும் நூல் யெஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ (வானம் வெளியீடு: 91765 49991). கதை வழியாகவே பாலியல் அத்துமீறல்கள் குறித்து இந்த நூல் எச்சரிக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து இந்த நூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தவிர, கூடுதலாக அறிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால், சென்னையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான ‘துளிர்’ உதவும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக மேலும் விரிவாக அறிவதற்கு இந்த அமைப்பின் இணையதளம் உதவும்: http://www.tulir.org/tulir-tamil/ அதில், இணையச் சுவரொட்டிகள், வெளியீடுகள், தகவல்கள் எனப் பலவழிகளில் விழிப்புணர்வைப் பெறலாம்.

SCROLL FOR NEXT