கனிமொழி ஜானகிராமன் அப்போது கர்ப்பமாக இருந்தார். தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும் கர்ப்ப கால மன அமைதிக்காக, தியானம், இசை கேட்டல் என்று ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார் அவருடைய மகப்பேறு மருத்துவர். ஆனால், இவருக்கோ கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. இணையதளம் மூலம் கற்றுக்கொண்டார். கைவினைக் கலைகளில் ஈடுபடும்போது அது மிக ஆழ்ந்த அமைதி தருவதை உணர்ந்து அதையே கர்ப்ப காலம் முழுவதும் செய்திருக்கிறார்.
பிரசவம் ஆன பிறகும், கைக்குழந்தையுடனேயே கைவினைப் பொருட்கள் தயாரிப்பும் தொடர்வது, இவரது ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது. இவருடைய தோழியின் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக காகிதத்தில் செய்யப்பட்ட டேபிள், கேக், தம்பதிகள், பூங்கா உட்பட பல பொம்மைகளை இவர் செய்து கொடுத்திருக்கிறார். பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த பலரும் அந்தக் கைவினைப் பொருட்களைப் பார்த்துப் பாராட்டியதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார் கனிமொழி.
க்வில்லிங் காகிதத்தில் செய்யப்படும் 2டி, 3டி கைவினைப் பொருட்கள் இவரது ஸ்பெஷாலிட்டி. ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும் இந்த க்வில்லிங் காகிதங்களைத் தேவைக்கு ஏற்ற அளவில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு எம்.எம். முதல் 6 எம்.எம். வரை உள்ள காகிதங்களில் 3டி பொம்மைகள் செய்யலாம். இவற்றை கொலுவில் வைத்தால் அழகாக இருக்கும் என்கிறார் கனிமொழி.
காதணிகள், வாழ்த்து அட்டைப் பூக்கள், பொம்மைகள் அனைத்தையும் க்வில்லிங் காகிதத்தில் செய்து அசத்துகிறார். வாட்டர் புரூஃப் என்பதால் மழையில் நனைந்தாலும், ஊறிவிடாது என்பதே இதன் சிறப்பு என்கிறார். அம்மாவின் சொல் கேட்டு புன்னகைக்கிறாள் கனிமொழியின் ஒரு மாதக் குழந்தை மிரயா.
படங்கள்: எல்.சீனிவாசன்