எனக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. புற்றுநோய்க்கான எல்லாச் சிகிச்சைகளும் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிற நிலையில் இந்த அபூர்வமான பாதையைத் திரும்பிப் பார்க்க மனம் தூண்டுகிறது. புற்றுநோய்ப் போராளிகள் என அழைக்கப்படும் இன்னும் அந்த நோயால் சாகடிக்கப்படாமல் உயிர் வாழ்பவர்களின் வாழ்க்கை என்பது என்ன? உங்களை எந்த நேரமும் போட்டுத்தள்ள தயாராக இருக்கும் ஓர் எதிரி; அந்த எதிரியின் குணாதிசயங்களைக் கணிக்கவே முடியாது.
ஆனாலும், அந்த எதிரியை நண்பனாக்கிக்கொள்ளும் படலம்தான் புற்றுநோய்ப் போராளியின் வாழ்க்கை. புத்தருக்குப் போதி மரம் போல் எனக்கு என் அறுவைச் சிகிச்சை மேஜை ஞானம் வழங்கியது. வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழாமல் ரசித்து வாழ என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன். குட்டிக் குருவிகளும் ஊட்டி மலைகளும் மனத்துக்கு நெருக்கமாயின. வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. டாக்டர் டேவிட் சேர்வன் ஷ்ரீபர் எழுதிய ‘Anti Cancer’ என்கிற புத்தகம் என்னை நிறைய மாற்றியது. நமது நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும்படியான ஒரு உறவை நாம் நம் உடலுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்மறை எண்ணங்களைத் தூக்கி எறிவது மிகவும் அவசியமானது. எதிர்மறை மனிதர்களும் அதில் அடங்குவர். இதுதான் உன் கடைசி நாள் என ஒவ்வொரு நாளையும் அணுகினால் மகிழ்ச்சி உங்கள் கையில். ஒவ்வொரு முறை மருத்துவரிடம் போக நேரும்போதும் உடலில் எந்த வலி வந்தாலும் பயம் எனும் அரக்கன் கூடவே வருவான். அவனை விரட்டியடிக்கக் கற்பது அவசியம். நகைச்சுவை உணர்வு நிறையவே உங்களுக்கு உதவும். வாழ்க்கையில் செய்ய ஆசைப்பட்டு முடியாமல் போனவற்றை இப்போது செய்ய முயலலாம். எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்றுவதை அறவே நிறுத்தினேன்.
ஆதரவான குடும்பம் மிகப் பெரிய பலம். ஆனாலும், இது ஒரு தனிமையான பயணம். இதை எதிர்கொள்ள நம்மைப் பலசாலிகளாக மாற்றிக்கொள்வது நமது கடமை. இந்தப் பலம் நம்மைப் பிரமிக்க வைக்கும். புற்றுநோயை ஒரு பெண் எதிர்கொள்வது கடினமான காரியம்தான். பெண்ணை முன்னிலைப்படுத்தி நாம் பழகாதவர்கள். பெண்களும் அப்படித்தான். தங்கள் உடலைப் பேணவோ, நோய்களை முன்னிலைப்படுத்தவோ தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பீடிக்கும் சமுதாய நோய்களிலிருந்தும் விடுபடும் காலம் வெகு விரைவில் வரும் என நம்புகிறேன்.
- விஜி நாராயணன், கோயம்புத்தூர்.