இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மட்டும் போடப்பட்டுவந்த கோவிட்-19 தடுப்பூசிகள் மே 1 முதல் 18-45 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாதவிடாய் நேரத்திலும் அதையொட்டிய சில நாட்களிலும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆபத்தானது என்னும் தகவல் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவியது.
தடுப்பூசி சார்ந்த பக்கவிளைவுகள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் காரோனா தொற்று வந்தது, தடுப்பூசி போட்டுக்கொண்டபின் சிலர் மரணமடைந்தது இதுபோன்ற சம்பவங்களை முன்வைத்து தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நிராகரிப்புப் பிரச்சாரங்களால் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் மக்கள்தொகையில் சரிபாதியான பெண்கள் மாதவிடாயின்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்னும் தகவல் இதற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. இந்தச் சூழலில் இந்திய மகப்பேறியல் சமூகங்களின் கூட்டமைப்பு (Federation of Obstetric and Gynecological Societies of India) வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்கள் உட்பட எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மாதவிடாயின் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கோ தாமதப்படுத்துவதற்கோ எந்த ஒரு அறிவியல் அடிப்படையும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளது. பல்வேறு மருத்துவ நிபுணர்களும் அறிவியலாளர்களும் பெண்களின் மாதவிடாய்க்கும் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.
கறுப்பினப் பெண்களின் கருச்சிதைவு அபாயம்
‘தி லான்செட்’ மருத்துவ இதழ் கருச்சிதைவு குறித்து நடத்திய ஆய்வில் கருச்சிதைவு ஆபத்து வெள்ளையினப் பெண்களைவிடக் கறுப்பினப் பெண்களுக்கு 43 சதவீதம் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. ஏழு நாடுகளில் 46 லட்சம் கருத்தரிப்புகளை மாதிரியாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கறுப்பினப் பெண்கள் இவ்வளவு அதிகப் பாதிப்பை எதிர்கொண்டிருப்பதற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிவதற்கான ஆய்வுகளில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கறுப்பினப் பெண்கள் மீதான மருத்துவர்களின் முன்முடிவுகள் சார்ந்த பாரபட்ச அணுகுமுறை, கருத்தரிப்பின்போது மரணம் அடைவதற்கான ஆபத்தை அதிகரித்திருப்பதாக முந்தைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும், உலகில் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடியே 30 லட்சம் கருச்சிதைவுகள் நடைபெறுவதாகவும் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 40 கருச்சிதைவுகள் நிகழ்வதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 வயதுக்குள் அல்லது 40 வயதுக்கு மேல் கருத்தரிப்பது, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களால் கருத்தரிப்பது, மிகக் குறைந்த அல்லது அதிக எடையுடன் இருப்பது, முந்தைய கருச்சிதைவுகள், புகை, மதுப் பழக்கங்கள், மன அழுத்தம், நீண்டகால இரவு நேரப் பணி, காற்று மாசு, பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்டவை கருச்சிதைவு ஆபத்தை அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
ஐஐடியின் பெண் ஆய்வாளர்களுக்கான திட்டம்
இந்திய அளவில் ஆய்வு, ஆராய்ச்சிப் புலத்தில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் முதுநிலை, முனைவர் பட்டங்களுக்கான ஆய்வு களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றாலும் ஆய்வுப் பணிகளை தொழில்வாழ்க்கையாகத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. குடும்ப அழுத்தம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு சார்ந்த பொறுப்புகள், ஆணாதிக்கச் சமூக மனநிலை ஆகியவையே இதற்கான காரணங்களாகக் கருதப்படு கின்றன..
இவற்றைத் தாண்டி நீண்ட கால ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான வழிகாட்டலும் முன்மாதிரிகளும் இந்தியப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும் இதற்குக் காரணம் என்பதை உணர்ந்துள்ள ஐ.ஐ.டி மெட்ராஸ் உயர்கல்வி அமைப்பு, ‘ஸ்டீவர்ட்’ (STEWARD) என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் அந்தத் துறைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸின் முன்னாள் மாணவர்களிடம் அன்றாட வழிகாட்டல் மற்றும் பயிற்சியைப் பெறுவார்கள். பட்டப்படிப்புக்குப் பிறகும் ஆய்வில் ஈடுபடுவதற்கான ஊக்கமும் தொழில்ரீதியான, உணர்வுரீதியான ஆதரவும் ஆய்வு மாணவியருக்கு இதன் மூலம் கிடைக்கும். தற்போது ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆய்வு மாணவிகளும் முன்னாள் மாணவர்களும் மட்டும் இணைக்கப் பட்டிருக்கும் இந்தத் திட்டம் வருங்காலத்தில் மற்ற கல்வி நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.
சீனப் பெண் இயக்குநருக்கு ஆஸ்கர் விருது
2020-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் 2021 ஏப்ரல் 25 அன்று அறிவிக்கப்பட்டன. சீன இயக்குநர் க்ளோயி ஸாவோ (Chloe Zhao) இயக்கிய ‘நோமாட்லேண்ட்’ (Nomadland) திரைப்படம் மூன்று விருதுகளை வென்றது. க்ளோயி ஸாவோ சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற உலக அளவிலான இரண்டாம் பெண் மற்றும் முதல் ஆசியப் பெண் என்னும் புகழைப் பெற்றார். இதற்கு முன் 2010-ல் ‘ஹர்ட் லாக்கர்’ திரைப்படத்துக்காக காத்ரீன் பிக்லோ (Kathryn Bigelow) சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் பெண் ஆனார்.
இந்தப் படத்தின் நாயகி ஃப்ரான்ஸெஸ் மெக்டொர்மான்டுக்குச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. சிறந்த திரைப்படமாகவும் ‘நோமாட்லேண்ட்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் நிரந்தர இருப்பிடம் இன்றி நாடோடி களைப் போல் வாழும் விளிம்புநிலை மக்களைப் பற்றிய திரைப்படம் இது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 1982-ல்பிறந்தவரான க்ளோயி, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். இதுவரை இவர் இயக்கிய மூன்று அமெரிக்கத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவருடைய அடுத்த திரைப்படமான ‘எடெர்னல்ஸ்’2021 நவம்பர் 5-ல் வெளியாக விருக்கிறது.