பெண் இன்று

பாடல் சொல்லும் பாடு 14: அரசியல் அதிகாரம் ஏன் மறுக்கப்படுகிறது?

செய்திப்பிரிவு

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று

எனக்குத் தெரியும்

கூண்டுப் பறவை பாடுகிறது,

அறியாத விஷயங்களை நினைத்து

பயந்து நடுங்கிக்கொண்டு

ஆனால் சாசுவத ஏக்கம் கொண்டு.

சுதந்திரத்துக்காகக்

கூண்டுப் பறவை பாடுகிறது,

தொலைதூர மலைகளில்

அதன் இசை மோதி எதிரொலிக்கிறது.

(‘I Know Why The Caged Bird Sings’)

- மாயா ஏஞ்சலோ

சங்க காலப் பெண் வலிமையான வள். எந்த அளவுக்கு என்பதற்கு கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் சொல்லியிருப்பது சிறு சான்று.

யானை தாக்கினு மரவுமேற் செலினு/ நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்/ சூல்மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை. யானை வந்து தாக்கினாலும், பாம்பே அவள்மேல் ஊர்ந்து சென்றாலும், இடியே விழுந்து தாக்கினாலும் அவள் கொண்டிருக்கும் சூல் மாறாது.

அதாவது, அவள் சுமந்திருக்கும் கருவுக்கு எந்தத் தீங்கும் நேராது. அத்தகு வீரம் செறிந்தவள் எயினர் குலப் பெண் (பாலைத் திணைக் குடிப் பெண்). இத்தகைய மறப் பண்பு கொண்ட எயினப் பெண்ணைச் சங்க இலக்கியம் தலைவியாகக் காட்சிப்படுத்தவில்லை.

அரசியே ஆனாலும் ஆட்சியில்லை

ஆணின் நற்செயல்கள் பெண்ணின் இல்லறத்தகுதியால் தீர்மானிக்கப்பட்டன. ‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான், பானை பிடித்தவள் பாக்கியம்’ என்கிற பழமொழி இக்கருத்தை உறுதிசெய்யும்.

வேட்டைக்குத் தலைமை ஏற்றாள். வேட்டையைப் பகிர்ந்தளிக்கும் வலிமையும் அறிவுத் திறமும் கொண்டிருந்தாள். இனக்குழுக்களை அழித்துச் சிற்றரசுகள் உருவாயின. சிற்றரசுகளின் மீது பேரரசுகள் எழுந்தன. இந்த மாற்றங்கள் தந்த பண்பாட்டு நெருக்கடியில் நல்ல மகனை ஈன்று, இன உற்பத்தியுடன் தன் சமூகப் பங்கேற்பை நிறுத்திக் கொண்டாள் பெண்.

பேரரசி என்று அழைக்கப்பட்டாள். ஆயினும் அரசனுக்குப்பின் அவனது ஆண் வாரிசால் நாடு ஆளப்பட்டது. கல்வெட்டுகளிலும் மெய்க்கீர்த்தி களிலும் உலகமுழுதுடையாள், அவனி முழுதுடையாள் என்று சுட்டப்படும் பெருமையில் பல அறக்காரியங்களில் ஈடுபட்டாள். கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்களை வழங்கினாள். கணவன், தந்தை, சகோதரனின் பெயரோடு சேர்த்து அறியப் பட்டாள். ராசராசனின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் தேவியுமான குந்தவையார் சைவ, வைணவக் கோயில்களைக் கட்டினார்; விண்ணகரத்தில் ஆதுலர் சாலை என்கிற பெயரில் மருத்துவச் சாலையை ஏற்படுத்திக் கொடைகள் தந்தார் என்று கல்வெட்டுகள் காட்டுகின்றன.

வீரகுலத் திலகங்கள்

ராணி மங்கம்மாள் சத்திரம், ராணி மங்கம்மாள் சாலை என்று இன்றளவும் நிலைத்த பெயரோடு திகழும் மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். இவர், வீராதி வீரம்மாள், வீரகுலத்து ராணியம்மாள், மறக்குல ராணியம்மா, மங்கையர் குல திலகமம்மா, மண்ணு உள்ளவரை மங்கம்மாவைப் பாடி நிற்கும் என்பது போன்ற கும்மிப் பாடல்களில் நினைவுகூரப்படுகிறார். பெண்கள் முடிசூடக் கூடாத மரபில் வந்தவர் மங்கம்மாள். கணவர் சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பின், மகன் முத்துவீரப்ப நாயக்கருக்குப் பட்டம் சூட்டினார். பெரியம்மை கண்டு மகன் இறக்க, சிறுவனான பேரனுக்கு முடிசூட்டினார்.

ஆட்சிப் பொறுப்பாளராக இருந்து அரசாண்டார். சமய நல்லிணக்கமும் அறப்பணிகள் செய்யும் திறமும் கொண்ட ராணி மங்கம்மாள், தன் பேரனாலேயே சிறைவைக்கப்பட்டார்.

முத்துவடுகநாதரைக் கொன்று சிவகங்கை சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். கணவரைக் கொன்றவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் வேலுநாச்சியார். இழந்த தம் சமஸ்தானத்தை மீட்டெடுத்தார். தத்தெடுத்த குழந்தையை ராஜ்ஜியத்தின் வாரிசாகக் கருத முடியாது என்று சொல்லி, ஜான்சியைத் தன்வசமாக்க முனைந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஜான்சி எனது நிலம். அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன் என்று முழங்கிப் போர்தொடுத்தார் லட்சுமிபாய்.

கணவருக்குப் பின் நேரடியாக நாட்டை ஆளும் உரிமையைப் பெண்கள் பெற்றிருக்கவில்லை. பாலகர்களை அரியணையில் ஏற்றி, ஆட்சிக் காப்பாளர்களாகவே அவர்களால் செயல்பட முடிந்தது. விதிவிலக்குகளாக கர்நாடகத்தைச் சேர்ந்த ராணி அப்பக்கா தேவி, தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியான ருத்திரமாதேவி போன்றோர் அரசியாகவே நாட்டை ஆண்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறை அறியாத வரலாறு

இந்திய அளவில் பேசக்கூடிய போராட்டமாக அமைந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துமாறு காந்தியிடம் கேட்டனர். அப்போது, “மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும்” என்றார் காந்தி. நாகம்மையையும் பெரியாரின் சகோதரி கண்ணம்மாளையும் சுட்டிக்காட்டி, அவர்களின் பின் திரண்டிருக்கும் பெண் சக்தியையும் அடையாளங்காட்டினார்.

திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என்று மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி போன்ற ஆளுமைகளின் பெயரில் நலத் திட்டங்கள் செயல்படுகின்றன. ஆனால், அவர்களின் சமூகச் செயல்பாடுகள் குறித்த அரசியல் அறிவு இத்தலைமுறைக்குக் கடத்தப்பட்டிருக்கிறதா?

இந்திய அளவில் இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, மாயாவதி, ஜெயலலிதா என ஆற்றல் மிக்க சக்திகளாகப் பெண்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களைப் பெண் சமூகத்தின் பிரதிநிதிகளாகக் காண்பதைவிட, பெருங்கட்சிகளின் அரசியல்வாதிகளாகக் காண்பதே நமக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

அரசியல் அறிவும் அவசியம்

பெண்கள் ஊராட்சிமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் செயல்பாடுகள், பெரும்பாலும் அவர்கள் குடும்பத்து ஆண்களால் தீர்மானிக்கப்படுகின்றன. தங்கள் தலைமைத்துவத்தைத் தன்னைப் போன்ற பெண்களின் சமூக வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பயன்படுத்த இயலாத வகையில், மைய நீரோட்ட அரசியலுக்குள் கரைந்துவிடுகிறார்கள்.

ஓட்டுரிமை, சம உழைப்பு, சம ஊதியம், மகப்பேறு விடுப்பு என யாவற்றையும் பெற்றிருப்பதன் அடிப்படையில் இருக்கும் போராட்டத்தைப் பெண்கள் அறிந்திருக்கவில்லை. அறிவுருவாக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் பெறும் வல்லமையை, அமைப்பாகத் திரள்வதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. நம் சமூகத்தின் பெரும்பான்மையான இத்தகைய பெண்களின்மீது முதலாளித்துவ வேட்கை படிந்தி ருக்கிறது. அது குடும்பத்திற்குள்ளும் வேர்விட்டிருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும், நமக்கான அரசியல் எது? உணவிலும் உடையிலும் மறைந்திருக்கும் அரசியல் யாருக்கானது என்ற தெளிவினைப் பெண்கள் பெற விடாமல் பார்த்துக்கொள்கிறது அதிகாரம். உண்மையான பலமும் பலவீனமும் எதுவென அறிந்திட இயலாத மாயவெளியில், மெய்யான அறிவிலிருந்து வெகுதொலைவில் நிற்கிறார்கள் பெண்கள்.

மாசுபடும் அழகு, கூடிவிடும் உடல் எடை, கணவனை மகிழச் செய்யாத உணவு, வாங்கிட இயலாத ஆடை ஆபரணங்கள், மின்சாதனப் பொருட்கள் எனப் பெண்கள் கவலை கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. இதை நம்ப வைக்கும் மந்திரத்தை ஆளும் வேட்கை அறிந்திருக்கிறது.

ஞானம் பெற்று உயர்வோம்

பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது. நம் உரிமைகளை அறியவும், செயல்பட வேண்டிய களத்தை அடையாளம் காணவும் விழிப்படைய வேண்டும். இலவசங்களால் பெண்கள் மகிழ் வார்கள் என்கிற கற்பனாவாதத்தில் திளைக்கும் அரசுகள், அரசியலறிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் பணியை மறந்திருக்கின்றன அல்லது அப்பணியை வேண்டாததாகக் காண்கின்றன.

பின்லாந்தின் பிரதமராக சன்னா மரின் என்கிற 34 வயதுப் பெண் பொறுப்பேற்றிருக்கிறார். ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டுவருவதே தன் போராட்டத்தின் அடிப்படை என்கிறார் அவர். கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராகியிருக்கிறார். கேரள உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகிதம் பெண்களுக்கு, குறிப்பாக 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது புதிய நம்பிக்கை தருகிறது.

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர்/தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்/அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்/கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்/ மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி என்கிற பாரதிதாசனின் கூற்றை உண்மையாக்குவதும், படிப்பினை களை உருவாக்கிக்கொண்டு புத்தொளி பெறுவதும் கிட்டும் ஞானத்தைப் பொறுத்தது.

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: janagapriya84@gmail.com

SCROLL FOR NEXT