பெண்கள் விரோத கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இணையதளத்தில் ஹேஷ் டேக்குகளை உருவாக்குவது இப்போது பரவலாக நடந்துவருகிறது. அப்படி 2015-ம் ஆண்டில் பல ஹேஷ்டேக்குகள் உலவின. அவற்றில் குறிப்பிடத் தகுந்தது #notguilty.
ஒரு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த இயோன் வெல்ஸ், பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். தன்னைச் சீரழித்தவனுக்கு அவர் எழுதிய கடிதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த #notguilty பிரச்சாரம்.
“நான் ஏன் என் அடையாளத்தை மறைக்க வேண்டும்? நான் என் முகத்தை வெளிக்காட்டுவதன் மூலம்தான் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல என்பதை நிரூபிக்க முடியும்” என்று தன் நிலைப்பாட்டை விளக்குகிறார் இயோன் வெல்ஸ்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாலேயே ஒருவர் இந்தச் சமூகத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பும் அவர், “குற்றம் இழைத்தவர்கள் இந்தச் சமூகத்தில் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சுற்றித் திரியும்போது, நான் ஏன் எனக்காகப் பேசக் கூடாது?” என்று கேட்கிறார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பல பெண்கள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். நியாயம் கேட்டுக் குரல் உயர்த்தினர். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களே ஏன் இங்கு குற்றவாளிகளாக்கப்படுகின்றனர் என்ற வாதமும் முன்வைக்கப் பட்டது. பல பெண்கள், தங்களை வன்புணர்வு செய்தவனுக்குக் கடிதம் எழுதினர். குற்றவாளியை அவமானப்படுத்துவதும், விவாதத்தை ஏற்படுத்தும் தலைப்புகளை வைத்து மக்களை ஈர்க்கும் விற்பனைத் தந்திரமும்தான் இதன் நோக்கம் என்று விமர்சனங்கள் கிளம்பின. “யாரையும் அவமானப்படுத்துவதல்ல எங்கள் நோக்கம். பாதிக்கப்பட்டவர்களைப் பேசவைப்பதும், இந்தச் சமூகத்தை அதைக் கேட்கவைப்பதுமே எங்கள் நோக்கம்” என்கிறார் இயோன் வெல்ஸ்.