பெண் இன்று

விவாதக் களம்: பெண்களுக்கு எல்லா உரிமையும் உண்டு

செய்திப்பிரிவு

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச் சடங்கை அவருடைய மகள் பங்கஜா முண்டே செய்தது, பரவலாகப் பேசப்பட்டாலும் பல இடங்களில் பெண்களுக்கு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவே அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும் சமூகத்தில் மலிந்திருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தான் முதன்மை காரணம் என பெரும்பாலான வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இந்தச் சமூகத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இங்கே...

இது தனி உரிமை

தன் தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த பங்கஜா முண்டேவின் செயல் சரியானதே. அந்தக் காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே சொத்துரிமை இருந்தது. அதனால் இறுதிச் சடங்கை அவர்கள் மட்டுமே செய்தார்கள். ஆனால் தற்போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. அதனால் பெண்களும் இறுதிச் சடங்கைச் செய்யலாம். இது சமூக மாற்றமெல்லாம் இல்லை. இது அவரவர் தனி உரிமை.

- வி. ரேவதி, சின்னமனூர்.

ஏற்றத்தாழ்வே காரணம்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா முண்டே இறுதிச் சடங்கு செய்தார் என்ற செய்தி விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது மேல்தட்டு மக்கள் மத்தியில் மட்டுமே. பல பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களில் பெண் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்கச் சமுதாயத்தின் உச்சபட்ச அடக்குமுறையே இந்தப் பேதம் பிரிக்கும் செயல். மேலும் பணம் படைத்தவர் எது செய்தாலும் சரி என்று ஏற்றுக் கொள்ளும் ஒரு கூட்டம், அதே சமூகத்தில் பிறந்து வசதியின்றி வாழ்பவர் செய்தால் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட சாதிய, பொருளாதார அடிப்படையில் மட்டும்தான் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தடுக்கப் படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். தாய், தந்தையருக்கு இறுதிச் சடங்கு செய்தால் பெண்ணுக்குச் சொத்து போய்விடும் என்பதெல்லாம் எடுபடாத வாதம். ஏனென்றால் தமிழ்நாட்டில் ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டம் நடைமுறைக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. மத நம்பிக்கை உச்சத்தில் இருக்கும் வடமாநிலத்தில் இருந்து பங்கஜா முண்டே மூலமாக ஒரு புரட்சி ஆரம்பித்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட அது நல்ல ஆரம்பமே. இது தொடர வேண்டும்.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார், தூத்துக்குடி.

மாற்றம் தேவை

ஆண்களே அனைத்துத் துறைகளிலும் இருந்த காலம் மாறிப் பெண்கள் இன்று பிரதமராகவும், முதல்வராகவும், ஆட்சிப் பணியிலும், காவல் துறையிலும் கோலோச்சுகின்றனர். தாயோ, தந்தையோ இறந்தால் மகள்களே அவர்களைச் சுடுகாடு வரை தூக்கிச் சென்று அடக்கம் செய்து வீடு திரும்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதியிலும் தனியாகவே சடலத்தை எரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இந்தக் காலத்தில் பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது அவசியமும்கூட. நிச்சயம் இப்படியொரு மாற்றம் தேவைதான்.

- கீதா முருகானந்தம், பாபநாசம்.

வேண்டாமே அடிமை மனோபாவம்

இறுதிச் சடங்குகளில் பெண்கள் பங்கேற்கக் கூடாது என்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. இந்து ஸ்மிருதிகளில் இறுதிச் சடங்கு செய்பவருக்குச் சொத்து என்பது போன்ற சூழல் காணப்படுகிறது. அதனால் பெண்களுக்குச் சொத்து கிடைக்கக் கூடாது என்பதற்காக இந்த நிலையை ஏற்படுத்தினர். இந்த நிலை மாற வேண்டும். கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் அடிமை மனோபாவத்தில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். குழந்தைகளின் பெயருக்கு முன் போடப்படும் முன் எழுத்துக்கள் தாய், தந்தை இருவரின் பெயரின் முதல் எழுத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டிற்கு மனைவி செல்லும் முறை மாற வேண்டும். மனைவி வீட்டிற்குக் கணவன் செல்வதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் மற்றொரு அடிமைச் சின்னமான தாலியை ஆண், பெண் இருவருக்கும் பொதுவாக்க வேண்டும். இப்படிப் பல்வேறு கலாச்சார மாற்றங்களை மேற்கொண்டால்தான் முழு பெண் சுதந்திரம் என்ற இலக்கை எட்ட முடியும்.

- வி.எல். சந்தோஷ், ஈரோடு.

சமூகக் கட்டுப்பாடும் அவசியமே

பெண்கள் இயற்கையிலே உடல் ரீதியாக ஆணுக்கு நிகரானவர்கள் அல்ல. அதன் அடிப்படையில்தான் சில மரபுகள் உருவாக்கப்பட்டன. பெண்ணைக் கண்டு மோகிக்கும் ஆண்கள் நிறைந்த உலகத்தில், இவள் திருமணமானவள் என்றும், ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கும் மிகப் பெரும் சமூகப் பொறுப்பில் பெண் இருக்கிறாள் என்று சமூகத்திற்குச் சொல்லவும் ஏற்பட்ட அடையாளங்களே தாலி, மெட்டி போன்றவை. இது போன்ற சில அடையாளங்கள் நாம் காலம் காலமாய்ப் பின்பற்றும் ஒழுக்கத்தின் வெளிப்பாடு. திருமணத்திற்குப் பின் மனைவி, கணவன் வீட்டிற்குச் செல்வதை மாற்றியமைப்பதில் என்ன முற்போக்கு உள்ளது? கலாச்சாரத்தைச் சீர்குலைப்பது எளிது. வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கும்போதுதான் சமூகக் கட்டுப்பாடுகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரியவரும்.

- தீர்த்தியப்பன், லண்டன்.

வீட்டுக்குள் முடக்கப்படும் பெண்மை

10 வயது, 2 வயது, 10 மாதம் கொண்ட மூன்று தங்கைகளையும் 28 வயது விதவைத் தாயையும் காக்க வேண்டிய பொறுப்பு அந்த 12 வயது பெண்ணுக்கு. தங்கைகளுக்கு மணம் முடித்துவிட்டு, தன் 48-வது வயதில் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டு, 52 வயதில் கணவனை இழந்து, அவருடைய மகளுக்கு இரண்டு பிரசவம் பார்த்து, ஒரு மகனுக்கு மணம் முடித்து, இன்னொரு மகனைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண். இத்தனையையும் கடந்து வந்த பெண்ணுக்கு, 1963-ம் ஆண்டு அவளுடைய தந்தை இறந்த போது இறுதிச் சடங்கு செய்ய அனுமதியில்லை. காரணம் அவள் வேறு வீட்டுக்குப் போகப்போகிறவளாம். வீட்டில் இருந்தபடி மட்டும்தான் பெண்களால் செயலாற்ற முடியுமா? என்னவொரு முரண்பாடு?

- சு. நவீனா தாமு, பொன்னேரி.

சடங்கில் என்ன பகுத்தறிவு?

மதம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவை குறித்த பொதுவான பகுத்தறிவு விவாதத்தை விட்டுவிட்டு மதச் சடங்கில் என்ன பகுத்தறிவு வேண்டிக் கிடக்கிறது? பெண்ணுரிமை குறித்துப் பெரியார் போன்றவர்கள் சொன்னதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதில் பகுத்தறிவா? சிரிப்புத்தான் வருகிறது.

- மூர்த்தி, நொய்டா.

ஆண்டவனையும் கோயிலையும் மறுப்பது ஒரு தளம். அதே நேரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும், தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் போராடுவது இன்னொரு தளம். இரண்டும் ஒன்றிற்கொன்று முரண் அல்ல.

- ரவீந்திரன் கிருஷ்ணமூர்த்தி.

சொத்துக்காக மட்டும் பெண்கள் இறுதிச் சடங்கைச் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பது தவறு. சில குறிப்பிட்ட இடங்களில் அது காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால், பெண்களை மயான பூமிக்குள் அனுமதிக்க மறுக்கும் எண்ணம், மனோபாவம் நம் கிராமப் புறங்களில் உள்ளது. என் மாமனார் இறந்தபோது (அவருக்கு இரு பெண்கள் மட்டுமே) என் மனைவியை இறுதிச் சடங்கு செய்ய கிராமத்தில் அனுமதி இல்லை என்று கூறி, தடுத்துவிட்டனர். மயானத்திற்குக்கூட அவர் அனுமதிக்கப் படவில்லை. இதுதான் யதார்த்தம்.

- சுப்ரமணியம், சென்னை.

மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச் சடங்கை அவருடைய மகள் பங்கஜா முண்டே செய்தது, பரவலாகப் பேசப்பட்டாலும் பல இடங்களில் பெண்களுக்கு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவே அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும் சமூகத்தில் மலிந்திருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தான் முதன்மைக் காரணம் எனப் பெரும்பாலான வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், இந்தச் சமூகத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இங்கே...

மனநிலை மாற்றமே தீர்வு

பெண்களுக்குச் சில உரிமைகள் மறுக்கப்படுகின்றனவா இல்லை மறைக்கப்படுகின்றனவா? எனக்குத் தெரிந்த நண்பருக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். அவர் இறந்தபோது அவருக்கு இறுதிச் சடங்கைப் பெண் செய்தால் குடும்பத்துக்கு ஆகாது என உறவினர்கள் வாதிட்டனர். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் என் பேச்சு எடுபடவில்லை. பெண்ணுக்கு இப்படி உரிமை மறுக்கப்பட சொத்து மட்டுமே காரணமல்ல. அறியாமை, மூட நம்பிக்கை போன்ற காரணிகளும் உண்டு. மனநிலை மாற்றம் ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.

- க. பாலகிருஷ்ணன், சுரண்டை.

ஆசைக்குத்தான் பெண்ணா?

நம் சமூகத்தில் சாதிக்கொரு நீதி இருந்தாலும் பெண் என்று வரும் போது ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண் என்று சொல்வார்கள். முன்பு வசதி, வாய்ப்புகள் இல்லாத காலத்தில் மயானத்துக்கு நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்போது பெண்களால் அதை உடல் ரீதியாகத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவர்களை மயானம் வரை அனுமதிக்காமல் இருந்தார்கள். இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார்கள். ஆண் குழந்தை இல்லாதவர்கள், கொள்ளி போடப் பிள்ளை இல்லை என்று யாரிடமும் யாசகம் கேட்க வேண்டியதில்லை.

- பி. எல்ராஜ், தூத்துக்குடி.

இழப்புக்குப் பிறகும் தொடரும் துயரம்

இறுதிச் சடங்கில் மட்டுமா பெண்களுக்கு அனுமதியில்லை? இந்தச் சமூகம் எப்படியெல்லாம் பெண்களை வதைக்கிறது தெரியுமா? துணையை இழந்த ஆண், மாப்பிள்ளையாம். துணையை இழந்த பெண் அபசகுனமாம். கணவனை இழந்த பெண்ணுக்கு விதவைப் பட்டம், ஆணுக்கு? ஒரு பெண்ணுக்குக் கணவன் இழப்பே பெருந்துயரம். இதில் இலவச இணைப்பாக, அதைத் தொடரும் சடங்குகளும் சம்பிரதாயங்களும். அவளின் பொட்டையும், பூவையும் பிடுங்கிக்கொண்டு, பெற்ற குழந்தைகளின் திருமணத்தில்கூட முன் நிற்க இயலாத அவலம். நான் கணவரை இழந்தபோது என் மகன், “நீங்க எப்பவும் போல இருங்கம்மா. பிடிக்காதவங்க உங்களை விட்டு விலகிக்கட்டும்” என்று சொன்னான். நானும் இதையேதான் சொல்கிறேன். பெற்றவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எல்லாப் பெண்களுக்கும் எல்லா உரிமையும் உண்டு.

- எஸ். அன்பரசி, மதுரை.

சடங்கில் என்ன பகுத்தறிவு

சாதி, மதம் இவற்றைக் கடந்து ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர்கள், பெண்களைத் தள்ளி வைப்பதில் கைகோக்கின்றனர். கிராமங்களில் உள்ள பிற்போக்குவாதிகள் மற்றவர் வீட்டுத் துக்கத்திலும் அரசியல் செய்கின்றனர். இது போன்ற சடங்கு சார்ந்த சம்பவங்களில் பெண்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டியே தீர வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தின் உதவியையும் நாடலாம்.

- சு. சசிந்தர், கடலூர்.

(விவாதம் தொடரும்)

SCROLL FOR NEXT