பெண்ணின் தலைமையில் ராய்ட்டர்ஸ்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக அலெஸாண்ட்ரா கலோனி (Alessandra Galloni) (47) ஏப்ரல் 19 அன்று பொறுப்பேற்றார். ராய்ட்டர்ஸின் 170 ஆண்டுக் கால வரலாற்றில் பெண் ஒருவர் தலைமை ஆசிரியர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. லண்டனில் இருந்தபடி உலகின் 200 இடங்களில் பணியாற்றும் 2,500 இதழாளர்களின் பணியை மேற்பார்வையிடுவார் கலோனி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றிவிட்டு 2013-ல் தெற்கு ஐரோப்பியச் செய்திப் பிரிவின் ஆசிரியர் மற்றும் நிறுவன ஆசிரியராக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். செய்தித் திட்டமிடல் மற்றும் தயாரிப்புப் பிரிவின் தலைவராகவும் தெற்கு ஐரோப்பியப் பதிப்பின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். ஓவர்சீஸ் பிரஸ் கிளப் விருது உள்ளிட்ட இதழியலுக்கான பல்வேறு விருதுகளை அவர் வென்றுள்ளார்.
மறுக்கப்படும் உடல் உரிமை
உலகில் 57 நாடுகளில் மருத்துவம், பாலியல் உறவு, கருத்தடைச் சாதனங்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு இருப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது உலகில் கோடிக்கணக்கான பெண்களுக்குத் தங்கள் உடல் மீதான சுதந்திரம் இல்லை; அவை மற்றவரின் ஆளுகைக்கு ஆட்பட்டிருக்கின்றன என்பதே இதன் பொருள். மேலும், உலகில் கிட்டத்தட்ட 20 நாடுகளில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களை வல்லுறவு செய்தவரையே திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் சட்டம் வழக்கத்தில் இருப்பதாகவும் 43 நாடுகளில் திருமண உறவுக்குட்பட்ட பாலியல் வல்லுறவைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் இல்லை என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆண் துணையற்ற அன்னையரின் அவல நிலை
நூறு சதவீத எழுத்தறிவு பெற்றிருக்கும் கேரள மாநிலத்தில் துணைவரில்லாமல் தனித்து வாழும் அன்னையர் மிக மோசமாக நடத்தப்படுவதாக அம்மாநில உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. “ஆண் துணை இல்லாத அன்னையர் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கப்படுவதோடு அவர்களைச் சமூகம் எந்த வகையிலும் ஆதரிப்பதில்லை. ஆணின் துணை இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்று ஒரு பெண்ணை நினைக்க வைப்பதே நம் அமைப்பின் தோல்வி. தம் உடல் குறித்தும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் முடிவெடுக்கும் உரிமை பெண்களுடையதுதான்” என்றெல்லாம் கூறியிருக்கும் நீதிபதிகள், துணைவர் இல்லா அன்னையருக்கு ஆதரவான திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். குழந்தை பிறந்த பின் துணைவரைப் பிரிந்து இப்போது மீண்டும் அவருடன் இணைந்துவிட்ட பெண் ஒருவர் வேறொருவருக்குத் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில்தான் நீதிபதிகள் இத்தகு கருத்துகளைத் தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கிலும் சமூகத்துக்கான செய்தி
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் ஏப்ரல் 17 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். விவேக்-அருள்செல்வி இணையருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். 2015-ல் விவேக்கின் மகன் பிரசன்னா மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதையடுத்து விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இடுகாட்டில் விவேக்கின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். இந்தியச் சமூகத்தில் பெற்றோருக்கு இறுதிச் சடங்கு செய்யும் உரிமை ஆண் வாரிசுகளுக்கே இருந்துவருகிறது. மகன்கள் இல்லாதவர்கள் இறந்தால்கூட வேறொரு ஆணே இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்படுவாரே அன்றி மகள்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. இதையும் மீறி அரிதினும் அரிதான நிகழ்வுகளாக அவ்வப்போது பெண் வாரிசுகள் தம் பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்கின்றனர். அதேநேரம் விவேக் போன்ற சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பிரபலத்தின் இறுதிச் சடங்கு இப்படி நிகழ்ந்திருப்பது, இன்னும் பல குடும்பங்கள் இந்த விஷயத்தில் பாலின பேதத்தைத் தவிர்க்க முன்வருவதற்கான உந்துசக்தியாக இருக்கும். திரைப்படங்களில் நகைச்சுவை மூலம் சமூக முன்னேற்றத்துக்கான பல கருத்துகளை வெளிப்படுத்திய விவேக் தன்னுடைய இறுதிச் சடங்கின் மூலமாகவும் அப்படி ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றிருக்கிறார்.