அதிகமான விழாக்கள் நடத்திப் பன்னாட்டுச் சுற்றுலாவாசிகளைக் கவர்வதில் முதன்மையான மாநிலம் ராஜஸ்தான். இங்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜோத்பூரில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ‘மாதா திங்கரா கவார்’ எனும் விழா கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது. விழாவில் ஆண்களுக்கு அனுமதியில்லை. கடந்த 20 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் திங்கரா கவார் திருவிழாவில், கணவனை இழந்த பெண்களும் கலந்து கொள்வது இன்னுமொரு சிறப்பு. காரணம், ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்த ராஜஸ்தானில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அதிகம்.
மார்வார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்த ஜோத்பூரின் கண்டா பால்சா எனும் பழைய நகரப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 முதல் 25 வரை இந்த விழா, அங்குள்ள திங்கரா கவார் மாதா எனும் கடவுளை மையமாக வைத்து நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இதன் மூன்றாவது நாளில் காவல் துறையினருக்கும் அனுமதி கிடையாது. விழா அமைப்பு, பாதுகாப்பு, கடைகள், சிறிய ஓட்டல்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் முழுக்க முழுக்கப் பெண்களே செய்வார்கள்.
“இந்தத் திருவிழாவுக்காக திங்கரா மாதாவை சுமார் 20 கிலோ தங்க நகைகளைக் கொண்டு மிக அழகாக அலங்கரிப்போம். நள்ளிரவில் தொடங்கும் இந்தத் திருவிழா விடிய, விடிய நடக்கும். விழாவில் கலந்துகொள்ளும் பெண்கள், ஆடிப்பாடி மகிழ்வார்கள். ‘பாங்க்‘ எனப்படும் பானங்களை அருந்திவிட்டு, அமர்க்களம் செய்கிற பெண்களும் உண்டு. சில பெண்கள் அரசர்கள் போல் வேடமணிந்து, மிடுக்காகச் சுற்றிவருவார்கள். பெண்கள் இப்படி அட்டகாசம் செய்வதற்கு அந்த விழாவில் எந்தத் தடையும் கிடையாது” என்று கடந்த ஆண்டு நடந்த திங்கரா கவாரைப் பற்றி நம்மிடம் நினைவுகூர்கிறார் ரேணுகா குப்தா. இவர் அந்த விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்றுப் பாடுவார்.
சில சமயம் அசம்பாவிதங்களும் நடந்துவிடுவது உண்டு. இதற்காக, ஜோத்பூர் மாவட்ட நிர்வாகம், சில போலீசாரை மட்டும் பாதுகாப்புக்காக அனுப்ப முன்வந்தனர். ஆனால் இவர்களைக் கோயில் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த விழாவில் ஆண்கள் ரகசியமாக நுழைந்துவிடாமல் தடுக்க, பெண்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் கம்புகளுடன் நின்று காவல்காக்கின்றனர். இவர்களிடம் சிக்கும் ஆண்களுக்கு நிச்சயமாகத் தடியடி உண்டு.
இது பற்றி ஜோத்பூர்வாசியான வழக்கறிஞர் அசோக் ஜோஷி, “இந்த விழாவில் நுழைய முயன்று பெண்களிடம் அடி வாங்கினால், பல ஆண்டுகளாகத் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடந்துவிடும். பல இளைஞர்கள் அங்கு அடி வாங்குவதற்காகவே செல்வதுண்டு. பல இளைஞர்களின் பெற்றோர்களும் போய் அடி வாங்கி வருமாறு கூறி வற்புறுத்துவதும் நடக்கிறது. இதில், சில இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சம்பவங்களும் உண்டு. எனினும், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதால், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது” என்கிறார். இவருக்கும் அங்குள்ள பெண்களிடம் அடி வாங்கிய பிறகுதான் திருமணம் நடந்ததாம்.
“சிவனில் பாதியைக் கொண்ட பார்வதியின் ஒரு உருவம்தான் இந்த மாதா திங்கரா கவார். ஒரு ஆணுக்கு இணையான சக்தி, பெண்களிலும் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் பழங்காலம் தொட்டு இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஜோத்பூர் மகராஜாவின் கோட்டையிலிருந்து மாதாவை அலங்கரித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, விழா நடத்தியதும் மீண்டும் கோட்டையிலேயே வைத்து விடுவோம்.
வீட்டுக்காக எப்போதும் உழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பப் பெண்களுக்கு இதில் கலந்து கொண்ட பின் மிகுந்த உற்சாகம் கிடைக்கிறது. அதே சமயம், இங்கு வரும் இளம்பெண்களுக்கு, மற்ற பெண்களுடன் கிடைக்கும் அறிமுகம் பல வகைகளில் உதவியாக ஒரு முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. ஆனால், இங்கு வரும் சிலர் அதிக உற்சாகத்தில் கடைகளை அடித்து நொறுக்குவது போன்ற வேலைகளைச் செய்து, அதை வாடிக்கையாக்கியும் விட்டனர்” என்கிறார்கள் பல ஆண்டுகளாக இந்தத் திருவிழாவில் பங்கேற்றுவரும் முதியவர்கள்.
பல விதமான சுமைகளோடு வாழும் பெண்களுக்கு இந்த விழாவை ஒரு வடிகால் என்றுதான் சொல்ல வேண்டும். அதீத உற்சாகம் ஆபத்துக்கு வழிவகுக்காமல் இருந்தால் சரி!