பெண் இன்று

பெண்ணுக்கு மறுக்கப்படும் அதிகாரம்

ப்ரதிமா

கல்வியில் பல நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழும் பின்லாந்து, அரசியலிலும் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நம் நாட்டில் தொடர்கதையாக இருக்க, பின்லாந்திலோ பெண்களின் தலைமையில் முழு ஆட்சியே நடைபெற்றுவருகிறது.

சன்னா மரின் 34 வயதில் பின்லாந்து பிரதமராகப் பதவியேற்று உலகின் மிக இளம் வயது பிரதமர் என்கிற பெருமையைப் பெற்றார். அவர், நான்கு கட்சிகளுடன் சேர்ந்துதான் ஆட்சியமைத்திருக்கிறார். அந்த நான்கு கட்சிகளின் தலைவர்களும் பெண்கள்தாம். அவர்களில் அன்னா மாயா ஹென்ரிக்ஸன் (55) என்பவரைத் தவிர லீ ஆண்டர்சன், கத்ரி குல்முனி, மரியா ஒஹிசலோ ஆகிய மூவரும் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கின்றனர்.

கல்வியில் சிறந்தவர்கள்

கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் லீ ஆண்டர்சன் இடதுசாரி கூட்டணிக் கட்சியின் தலைவர். ‘கிரீன் லீக்' கட்சித் தலைவரான மரியா ஒஹிசலோ, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

மத்தியக் கட்சியின் தலைவரான கத்ரி குல்முனி, பின்லாந்தின் நிதி அமைச்சராகச் செயல்படுகிறார். இதற்குமுன் துணைப் பிரதமராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். ஸ்வீடிஷ் மக்கள் கட்சி (பின்லாந்து) தலைவரான அன்னா மாயா ஹென்ரிக்ஸன், இருபதுகளிலேயே அரசியல் துறைக்குள் நுழைந்தவர். இவர், இந்தக் கட்சியின் முதல் பெண் தலைவர்.

படித்தவர்கள் அரசியலுக்குள் நுழையக் காட்டும் தயக்கத்தை இந்தப் பெண்கள் தவிடுபொடியாக்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே படிப்பில் சிறந்து விளங்கியவர்கள். அந்தப் படிப்பு நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்குள் புகுந்தவர்கள். ஐந்து பெண்கள் ஒன்று சேர்ந்தால் அங்கே புறணியும் வெட்டி அரட்டையும்தான் நடைபெறும் என்பதுபோன்ற கற்பிதங்களைப் புறந்தள்ளி, ஒரு நாட்டையே மிகச் சிறப்பாக நிர்வகித்துவருகிறார்கள்.

பின்தங்கும் தமிழகம்

தன்னிகரில்லாத் தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நம் மாநிலம், இதுவரை இரண்டு பெண் முதல்வர்களைத்தாம் கண்டிருக்கிறது. அதுவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மனைவி வி.என். ஜானகி 1988 ஜனவரியில் தமிழக முதல்வராக்கப்பட்டார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வரான அவர் 24 நாள்களுக்கு மட்டுமே அந்தப் பதவியில் இருந்தார். பிறகு ஜெயலலிதா மட்டுமே தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நெடிய அரசியல் வரலாறும் திராவிடப் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவே. இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகாவது பெண்கள் பெருவாரியாக அரசியல் களம் காண வேண்டும்.

SCROLL FOR NEXT