பெண் இன்று

எவரெஸ்ட் தேசத்தின் முதல் குடிமகள்

ஆதி

உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் மாற்றங்கள் நேபாளத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் அந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக கம்யூனிஸ்ட் தலைவர் வித்யா தேவி பண்டாரி (54) சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) துணைத் தலைவரான வித்யா தேவி, அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் காலஞ்சென்ற மதன் பண்டாரியின் மனைவி.

நேபாளத்தின் பெருமை

நேபாளத்தில் நிலவிவந்த 240 ஆண்டுகால முடியாட்சி முறை 2008-ம் ஆண்டில் ஒழிக்கப்பட்டு, அந்நாடு குடியரசு நாடானது. அப்போது உருவாக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை முதலில் வகித்தவர் ராம் பரண் யாதவ். அந்த வகையில் தங்கள் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரையே பெண்ணாகத் தேர்ந்தெடுத்த பெருமையை நேபாளம் பெறுகிறது.

இவ்வளவு காலம் இந்து நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த நேபாளம், அதைத் துறந்து செப்டம்பர் 20-ம் தேதி மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக்கொண்ட புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது. இந்த நிலையில்தான் வித்யா தேவி குடியரசுத் தலைவராக ஆகியிருக்கிறார். புதிய அரசியல் சாசனத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதத்துக்குள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

இடதுசாரி பாரம்பரியம்

இடதுசாரி மாணவர் அமைப்பில் 1979-ல் சேர்ந்ததன் மூலம், அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் வித்யா தேவி. விரைவிலேயே நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (எம்.எல்.) சேர்ந்து, மோரங் மாவட்டத்தில் இருந்துவந்த கட்சிகளற்ற பஞ்சாயத்து முறையை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார்.

அதன் பிறகு புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் மதன் குமார் பண்டாரியைத் திருமணம் செய்துகொண்டார். 1990-ல் பஞ்சாயத்து முறை ஒழிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் போட்டியிடும் ஜனநாயக முறை கொண்டுவரப்பட்டது. அப்போது நேபாள எம்.எல். கட்சி, நேபாள மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தது. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதன் குமார் பண்டாரி பொதுச் செயலாளர் ஆனார்.

பெண் உரிமைகள்

இதற்கிடையில், 1993-ல் நிகழ்ந்த மர்மமான ஒரு ஜீப் விபத்தில் மதன் குமார் பலியாக, வித்யா தேவி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவான, நேபாள பெண்கள் சங்கத்துக்குத் தலைமை பதவியேற்று இருபது ஆண்டுகளாகப் பணியாற்றிவந்தார். 1998-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அடுத்தடுத்து இரண்டு முறை கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேபாளப் பெண்களின் உரிமைகளுக்காக நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவந்த வித்யா தேவி, சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குத் தீவிரமாக முயற்சித்தவர். அதன்படி அரசின் அனைத்துக் குழுக்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென புதிய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் (1994) முன்னாள் பிரதமர் கிருஷ்ணப் பிரசாத் பட்டாராயைத் தோற்கடித்த வித்யா தேவி, 1990-களில் நேபாள அரசின் சுற்றுச்சூழல், மக்கள்தொகை அமைச்சராகச் செயல்பட்டிருக்கிறார். 2009-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற மாதவ் குமார் நேபாள் தலைமையிலான ஆட்சியில், அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராகவும் பணிபுரிந்திருக்கிறார். இதற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல, அந்நாட்டின் முதல் குடிமகளாகவும் மாறி வரலாறு படைத்திருக்கிறார்.

SCROLL FOR NEXT