பெண் இன்று

மழலை மனம்: குழந்தைக்கு உடம்பு சரியில்லையா?

திவ்யா குமார்

என் மகள் சமீபத்தில் தீராத வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். ஆரம்பத்தில் நிதானமாக இருக்கவே முயற்சி செய்தேன். அத்துடன் நானும் பல உடல் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் குழந்தைக்கு உடல்நலமில்லாமல் போகும்போது பெற்றோருக்கு ஏற்படும் பதற்றம் உடனடியாக என்னைத் தொற்றுவதற்குக் காத்துக்கொண்டே இருந்தது. குழந்தையின் காய்ச்சல் கட்டுப்படுத்த முடியாத அளவு மோசமானது. எப்போதும் உற்சாகமாகவும், தன்னிச்சையாகவும் விளையாடிக் கொண்டிருக்கும் அவள் தலைவலியால் அரற்றியபடி இருந்தாள். எங்கும் போக விடாமல் என்னைக் கட்டிக்கொண்டிருந்தாள். எனது நிதானம் படிப்படியாக உடையத் தொடங்கியது. அவசரமாகப் புறப்பட்டு, தலையைக்கூடச் சீவாமல், துப்பட்டா பறக்க க்ளீனிக்குக்கு வந்தோம்.

காய்ச்சல் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதையும், குழந்தை படும் அவதியையும் நர்ஸிடம் சொல்லத் தொடங்கினேன். அப்போது என் மகள் பாடத் தொடங்கினாள். நான் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன். ஆம் அவள் தெளிவாகவும், சத்தமாகவும் “மேரி ஹேட் எ லிட்டில் லாம்ப், லிட்டில் லாம்ப், லிட்டில் லாம்ப்” என்று பாடிக்கொண்டிருந்தாள். நிச்சயமாக பிரமையல்ல. கடந்த 48 மணிநேரத்தில் முதல் முறையாக அவளது காய்ச்சல் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழே போயிருந்தது. எனது மகளும் தன்னுடைய உச்சபட்ச உற்சாகத்தில் பார்வையாளர்களைத் தனது நர்சரி பாடல்களால் பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள். எந்தப் பெற்றோரும் அச்சப்படும் பார்வையை என் மீது அங்கிருந்த நர்ஸ்கள் வீசினார்கள். சுரத்தேயற்ற அவர்களது பார்வை என்னைப் பார்த்து, “நீ பெரிய நடிகை, உன் குழந்தை அருமையாக இருக்கிறது” என்று சொல்லாமல் சொல்லியது.

மகளின் உற்சாகம்

மருத்துவரின் அறையிலும் எனது மகள் அதே காட்சியை நிகழ்த்தினாள். நல்லவேளை அவள் அங்கே பாடவில்லை. ஆனால் மருத்துவரின் மேஜையில் உள்ள பொம்மைகளை எடுத்து விளையாடினாள், புன்னகைத்தாள். அவள் இதுவரை உடல்நலமின்றி இருந்ததே இல்லை என்பதைப்போல மருத்துவரின் கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதில் சொன்னாள். நான் முட்டாளாகிவிட்ட உணர்வில் மருத்துவமனையை விட்டு நீங்கினேன். நான் அவசரப்பட்டு கூடுதலாக நடந்துகொண்டேனா?

மர்பி விளைவு

ஆனால் அப்படி இல்லை. வீடு திரும்பும் வழியிலேயே எனது குட்டிப் பாடகி மீண்டும் முனகத் தொடங்கினாள். பிற்பகலிலேயே மீண்டும் காய்ச்சல் எகிறத் தொடங்கியது. காலம் காலமாக உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் செய்த காரியத்தையே எனது மகளும் செய்திருக்கிறாள். மருத்துவமனைகளுக்குள் கால்வைத்தவுடன் குணமாகி, பெற்றோரை மற்றவர்கள் தவறாக நினைக்கச் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியவுடன் பழைய உடல்நலமின்மைக்கே குழந்தைகள் திரும்பிவிடும். குழந்தைகளை முன்னிட்ட பிரத்யேகமான மர்பி விளைவுகளின் ஒரு பகுதி இது. மருத்துவர் அருகில் இருக்கும் நிலையில் குழந்தை அற்புதமான குணத்தைக் காண்பிக்கும்.

மருத்துவர்களும் நர்ஸ்களும் மட்டும் இந்த விளைவைக் கொண்டு வருவதில்லை. நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறதென்று சொல்கிறீர்களோ அந்த அளவுக்குக் குழந்தைகள் உங்கள் வார்த்தையைத் தவறாக்க முயற்சிப்பார்கள்.

உதாரணத்துக்கு என் குழந்தையின் உடல்நலமின்மை குறித்தும் பலவீனம் பற்றியும் மனம் பிழிய என் தோழியிடம் தொலைபேசியில் சொல்லிக்கொண்டிருக்கும் போது, கார்ட்டூனைப் பார்த்துக் கொண்டிருக்கும் என் குழந்தை சத்தமாக வெடித்துச் சிரிப்பாள்.

தந்தை அலுவலகத்திலிருந்து வரும் வேளையில், அறையைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் குழந்தையின் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது நாள் முழுவதும் நோயில் விழுந்து கிடந்தாள் என்று சொல்லக்கூட முடியாது.

ஒரு கட்டத்தில் சென்ற வார இறுதிக்குள் மர்பி விளைவுகளை எல்லாம் வைரஸ் காய்ச்சல் தோற்கடித்துவிட்டது. இந்த முறை மருத்துவரைப் பார்க்கப் போனபோது, எனது மகள் பாடவோ, விளையாடவோ இல்லை. அழுது அரற்றியபடி இருந்தாள். அவளைத் தோளில் சாய்த்து தடவிக்கொடுத்தபடி நடந்துகொண்டே இருந்தேன். காத்திருக்கும் அறையில் இருந்த மற்ற பெற்றோர்கள் எங்களை சங்கடத்துடனும் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். கடவுளின் கிருபையால் தாங்கள் தப்பித்துக்கொண்டோம் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். அதே நிலையில் என் குழந்தை விளையாடிக்கொண்டிருக்க, அழுது அரற்றிக் கொண்டிருக்கும் மற்ற பெற்றோர்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

என் மகள் முன்புபோல பாடத் தொடங்கி சிரித்து என் முடிவைத் தவறாக்க வேண்டும். “ரிலாக்சாக இரு அம்மா. நான் நன்றாக இருக்கிறேன்” என்பதை அவள் அப்படித்தான் தெரிவிக்க முடியும். அப்படி நடந்தால் நான் புகார் ஒன்றும் சொல்ல மாட்டேன்.

தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: ஷங்கர்

SCROLL FOR NEXT