பெண் இன்று

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - நம்பிக்கை விதைத்த மருத்துவர்!

செய்திப்பிரிவு

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த போராளியின் உண்மைக் கதை

எங்கள் குடும்ப டாக்டரைப் பார்த்துவிட்டு வந்த அன்று இரவு மனது லேசாக இருந்தது. நிலவின் களங்கமற்ற ஒளியும் நட்சத்திரங்களின் கண்சிமிட்டலும் அன்று கூடுதல் அழகுடன் மிளிர்ந்தன. என் அன்பு மகளை ஆசைதீரக் கொஞ்சினேன். இரவு நிம்மதியாகத் தூங்கினேன். இன்னும் இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை நிபுணரைச் சந்தித்து, ஆலோசனை பெற வேண்டும்.

அதற்காக இரண்டு நாட்களும் பதற்றத்துடன் இருக்க வேண்டுமா என்ன? எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருப்பது என் கல்லூரியில் யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்தேன். அதனால் எப்போதும் போல பளிச்சென்று உடை உடுத்திக்கொண்டு கல்லூரிக்குச் சென்றேன். என் வழக்கமான பணிகளைச் செய்தேன்.

எங்கள் குடும்ப டாக்டரின் மருத்துவமனைக்கே புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் வந்திருந்தார். சிகிச்சை எடுத்துக்கொள்கிறோமோ இல்லையோ சில மருத்துவர்களைப் பார்த்ததுமே நோய் தீர்ந்துவிட்டது போல இருக்குமில்லையா? அப்படியொரு மனநிலைதான் டாக்டர் சுப்பையாவைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்டது. அவருடன் பேசிய பிறகு அந்த நம்பிக்கை இரட்டிப்பானது. ஏதோ திருமண வரவேற்பில் சந்தித்துக்கொள்கிறவர்களைப் போல உற்சாகமாகப் பேசினார்.

அதுவரை நடந்த அனைத்தையும் என்னிடமே கேட்டார். நான் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில், ‘ரிப்போர்ட்டைப் பார்க்கவே மாட்டீங்களா டாக்டர்’னு நானேதான் கேட்டேன். சிரித்தபடியே என் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்தார். மெல்லிய குரலில் அவர் இப்படிப் பேசினார்.

“உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருக்கு. அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. காரணம் அது இப்போ ஸ்டேஜ் 1-ல்தான் இருக்கு. அப்புறம் உங்களுக்கு வந்திருக்கிறது Triple Negative Breast Cancer. இதுக்கு ஹார்மோன் தெரபி, மத்த சாதாரண சிகிச்சையெல்லாம் சரிப்பட்டு வராது. அதுக்காகவும் கவலைப்படத் தேவையில்லை. கொஞ்சம் ஸ்பெஷல் சிகிச்சை கொடுத்தாலே போதும், இந்த வகை புற்றுநோயைக் குணப்படுத்திடலாம். இதுக்கு கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை தேவைப்படும். கீமோதெரபி பண்ணினால் முடி கொட்டும். பரவாயில்லை, விக் வைத்துக்கொள்ளலாம்.

எனக்குத் தெரிஞ்சவங்க நம்பர் தர்றேன். அவங்க ரொம்ப அழகா விக் ரெடி பண்ணித் தருவாங்க. இப்போதான் நிறைய மாடல்களில் விக் வருதே. அப்புறம் கண் புருவம் கொட்டிடும். அதுக்கும் கவலைப்படத் தேவையில்லை. உனக்குதான் கண் அழகா இருக்கே. அதை மேலும் அழகாக்க ஐ-லைனர் போட்டுக்கலாம். அப்புறம் கண்ணிமைகள் கொட்டலாம். அதுக்கும் கவலைப்பட வேண்டாம். சிகிச்சை முடிஞ்சதும் தானாகவே வளர்ந்துடும்.

அப்புறம் என்ன? ஆபரேஷன் அப்போ ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கணும். வீட்ல இருக்கோமேன்னு கவலைப்படாம வீட்ல இருக்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு சந்தோஷப்படு. அம்மா கையால நல்லா ரசிச்சு சாப்பிடு. படிக்க நினைச்ச புத்தகங்களைப் படிக்கலாம். பிடிச்ச வேலையைச் செய்யலாம். நீ துடிப்பான பேராசிரியராச்சே. உனக்கெல்லாம் ஒரு மாசம் லீவை தாக்குப்பிடிக்க முடியாது.

பதினைந்து நாள் லீவே போதும்னு காலேஜுக்குக் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன்’ - டாக்டர் இப்படிப் பேசப் பேச எனக்கு மார்பகப் புற்றுநோயா இல்லையான்னு எனக்கு ஒரு நிமிஷம் சந்தேகமே வந்துடுச்சு. எத்தனை கனிவான, இயல்பான வார்த்தைகள். எத்தனை இனிமையான அணுகுமுறை! செடிகளுக்கு வலிக்காமல் நீர் ஊற்றுவது போல உண்மையை அத்தனை பக்குவத்துடன் எடுத்துச் சொன்னார். இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல அவர் என்ன செய்தார் தெரியுமா? எந்த மாதிரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று என்னிடமே கேட்டதுதான்!

‘மார்பகப் புற்றுநோய்க்கு Mastectomy, Lumpectomy இப்படி ரெண்டு வகையான சிகிச்சை இருக்கு. முதல் வகையில மார்பகத்தை முழுமையா நீக்கிடுவோம். ரெண்டாவது வகை சிகிச்சை முறையில, புற்றுநோய்க் கட்டியை மட்டும் நீக்கிடலாம். உனக்கு சின்ன வயசா இருக்கறதால Lumpectomy பண்ணலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறே’ - இப்படி என்னைப் பார்த்து டாக்டர் கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.

பொதுவா புற்றுநோய், அது சார்ந்த சிகிச்சை முறைகள் தொடர்பா நோயாளிகளுக்குக் கவலையும், நாம் பிழைப்போமா என்ற பயமும்தான் இருக்கும். ஏன்னா புற்றுநோயை உள்ளிருந்தே கொல்லும் நோய்னு சொல்லுவாங்க. ஆனா புற்றுநோய் பத்தின என் எல்லா பயத்தையும் டாக்டரோட பேச்சு நீக்கிடுச்சு. அவர் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டதும் எனக்கு சிரிப்பு தாங்கலை. அதை ஏன் அடக்கிவைக்கணும்? உடனே சிரிச்சிட்டேன். என் கணவரும் சிரிச்சார். இந்த சிரிப்பு நிரந்தரமா இருக்கணும்னு அந்த நிமிஷம் தோணுச்சு.

- மீண்டும் வருவேன்.

SCROLL FOR NEXT