“எந்தவொரு விஷயத்தையும் ஈடுபாட்டுடன் செய்யும்போது வேலைப் பளு தெரியாதுன்னு சொல்லுவாங்க. அந்த ஈடுபாடுதான் களைப்பை மறந்து எங்களை ஓட வச்சுட்டு இருக்கு’’ - தன்னம்பிக்கை மிளிரச் சொல்கிறார் ‘சிகரம் தொடுவோம்’ சிற்றிதழின் ஆசிரியர் வித்யாலெட்சுமி.
சட்டம் படித்த வித்யாலெட்சுமி, காரைக்குடியிலுள்ள அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கல்வி ஆலோசகர். மன அழுத்தம் காரணமாகப் படிப்பில் பின் தங்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுப்பதுதான் இவரது பணி. வித்யாலெட்சுமியும் உடற் கல்வி ஆசிரியை கவிப்ரியாவும் இணைந்து, ‘சிகரம் தொடுவோம்’ என்ற மாதாந்திரச் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“சட்டம் படித்தபோது நான் சந்தித்த இள வயது குற்றவாளிகளில் பலர், ‘எங்களுக்கு வழிகாட்ட ஆளில்லை. பணத்துக்காக இந்தக் குற்றத்தைச் செய்து விட்டோம்’ என்றார்கள். ஒன்றரை ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றிய போது இதுபோன்ற அனுபவங்களை நிறைய எதிர்கொண்டேன். தவறு செய்கிறவர்களைத் திருத்த நினைப்பதைவிடத் தவறு செய்யக் கூடாது என்ற எண்ணத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று சொல்லும் வித்யாலெட்சுமி, அதற்குப் பிறகு வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, பள்ளிப் பணியைத் தேர்ந்தெடுத்தார்.
“படிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற மாணவர்களை எனக்கு அடையாளம் காட்டுவாங்க. அவங்களோட பொறுமையா பேசி, எந்த இடத்துல சிக்கல்னு கண்டுபிடிப்பேன். சிக்கலை அடையாளம் கண்டுபிடிச்ச பிறகு அதற்கேற்ப அவர்களிடம் பேசிப் புரியவைப்பேன். கவுன்செலிங் கொடுத்த பிறகு மாணவர்களிடன் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தெரியும். இப்படி ஒவ்வொரு பிள்ளையாய் அழைத்துவைத்துப் பேசித் திருத்துவதைவிட ஒரு பத்திரிகை மூலமா நல்ல கருத்துகளை எடுத்துச் சொன்னால் அது பல நூறு குழந்தைகளை நல்வழிப்படுத்துமேனு நானும் கவிப்ரியாவும் நினைத்தோம். அதன் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம்” என்று சிற்றிதழ் தொடங்கிய பாதை குறித்து சொல்லி முடித்தார் வித்யாலெட்சுமி.
இதுதான் பத்திரிகையின் நிரந்தரமான பாணி என்று எதையும் வரையறுத்துக் கொள்ளாமல், மாணவர்களுக்கு அந்தந்த நேரத்துக்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருகிறது 24 பக்கங்களைக் கொண்ட ‘சிகரம் தொடுவோம்’ சிற்றிதழ். இதற்கென, அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தனி அலுவலர் ராமகிருஷ்ணனை ஆலோசகராகக் கொண்ட ஆசிரியர் குழுவும் தனியாகச் செயல்படுகிறது. பள்ளி நேரம் முடிந்ததும் வித்யாலெட்சுமியும் கவிப்ரியாவும் கல்வி மற்றும் வணிக நிறுவனங்களை அணுகி வர்த்தக விளம்பரங்களைச் சேகரிக்கிறார்கள். அப்படியும் ஒவ்வொரு மாதமும் வரவை மீறிச் செலவாவதாகச் சொல்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இந்தச் சிற்றிதழ் மெல்லத் தடம் பதித்துவருகிறது.
என்னதான் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தாலும் சிற்றிதழுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார் இதழின் இணை ஆசிரியர் கவிப்ரியா.
“இளைய சமுதாயம் சரியான பாதையில் செல்லவில்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்தச் சமுதாயம்தான் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியில் போனால் ‘பத்திரமா போயிட்டு இருட்டுறதுக்குள்ள வந்துரு’ என்று சொல்லும் பெற்றோர், ஆண்களை அப்படிச் சொல்வதில்லை. இதுவே தப்பான பார்வை. எப்போது வந்தாலும் பத்திரமாக வரலாம் என்ற நம்பிக்கையைப் பெண்களுக்குச் சொல்கிற அதே நேரத்தில், பெண்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கணும் என்ற மனப்பக்குவத்தை ஆண்களுக்கும் வரவைக்கணும். தேவையில்லாதவற்றை ஒதுக்கிவிட்டு, வெளியில் தெரியாத நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லலாம். எங்களது அடுத்த கட்ட நகர்வு அதுதான்” என்று விடைகொடுக்கிறார் வித்யாலெட்சுமி.