பெண் இன்று

இனி துணிந்து சொல்லலாம்

செய்திப்பிரிவு

பணியிடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பெரும் பாலானோர் வெளியே சொல்வதில்லை. காரணம், அதற்கு அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம். பத்திரிகையாளர் பிரியா ரமணியும் அதை உணர்ந்து அனுபவித்தவர்தான். ஆனால், அமைதிகாத்து அழிவதைவிட, துணிந்து நிற்பதென்று அவர் முடிவு செய்தார். பணிக்கான நேர்முகத் தேர்வு ஒன்றில் தான் நடத்தப்பட்ட விதம் குறித்தும் தன் முன்னாள் அதிகாரி குறித்தும் 2017 அக்டோபர் மாதம் வெளியான ‘வோக்’ இதழில் பிரியா ரமணி எழுதினார். ‘உலகின் ஹார்வி வெயின்ஸ்டீன்களுக்கு’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

பிறகு 2018 அக்டோபரில் அப்போதைய மத்திய அமைச்சரும் எழுத்தாளருமான எம்.ஜே.அக்பரின் பெயரைத் தன் ட்விட்டர் பதிவில் பிரியா குறிப்பிட்டார். ஒரு வாரம் கழித்து பிரியா ரமணியின் மீது அவதூறு வழக்குத் தொடுத்த எ.ஜே.அக்பர், தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 17ஆம் தேதி பிரியா ரமணியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்த சில அம்சங்கள் பெண்களுக்கு நம்பிக்கை தருகின்றன.

“பணியிடத்தில் நடந்த பாலியல் குற்றம் குறித்துச் சொன்னதற்காகவும் அதற்காக ஒருவர் அந்தப் பெண்ணின் மீது அவதூறு வழக்கைத் தொடுத்ததற்காவும் ஒரு பெண் ணைக் கைது செய்ய முடியாது. அந்த ஆணின் நற்பெயரைவிடவும் வழக்கில் தொடர்புடைய பெண்ணின் வாழ்வுரிமையும் கண்ணியமும் முக்கியம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் நோக்கில்தான் பிரியா ரமணி சிலவற்றை வெளியிட்டார். பெரும்பாலும் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்தான் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. அந்த நேரத்து அதிர்ச்சியிலும் தனக்குக் கண்ணியக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்கிற பயத்திலுமே பெரும்பாலான பெண்கள் எதையும் வெளியே சொல்வதில்லை. அதனால், ஒரு பெண் தனக்கு நேர்ந்ததை எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் சொல்லலாம், எத்தனை ஆண்டுகள் கழித்தும் சொல்லலாம்.

ஆண்களால் பெண்கள் மீது நிகழ்த்தப் படுகிற வன்முறை பெண்களிடம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியான நிகழ்வுக்குப் பிறகு தங்களின் கண்ணியமும் தன்னம்பிக்கையும் பறிபோய்விட்டதாக அந்தப் பெண்கள் நம்புவார்கள். தன்னிடம் அத்துமீறிய ஆணின் பெயரை அம்பலப்படுத்துவது என்பதை அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் தற்காப்பு முயற்சியாகத்தான் பார்க்க வேண்டும்.

பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்தும் ஆண் வெளியே எங்கும் இருப்ப தில்லை. அவர் நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதைச் சமூகம் உணர வேண்டும். அவருக்கும் குடும்பம், குழந்தைகள், நண்பர்கள் இருக்கலாம். சமூகத்தில் மிக உயரிய இடத்திலும் இருக்கலாம்.

இந்தியப் பெண்கள் திறமையானவர்கள். அவர்களின் திறமையை வெளிப்படுத்த பாதையமைத்துத் தருவதுதான் நம் கடமை. சம உரிமையும் வாய்ப்பும் சமூகப் பாதுகாப்பும் இருந்தால் போதும், சாதிக்கத் தடையேதும் இல்லை பெண்களுக்கு”

SCROLL FOR NEXT